அது எந்த மதத்துல இருந்தா என்ன?

அக்டோபர் 01-15

நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். ஆனால், நீங்களும் மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டுமே விமர்சனம் செய்கிறீர்கள். ஏன் இந்தப் பாரபட்சம்? மற்ற மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?

என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் ப்ளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது, ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்துல எங்க தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கிட்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா, வாராவாரம் போற சர்ச்ல ஃபாதர் அவர். என் தோட்டத்துல இருக்கிற செடிகளை ஆசீர்வாதம் பண்றதுக்காக வந்திருக்கேன்னு சொன்னார்.

எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியைத் தெளிச்சிட்டு, கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்னு சொன்னப்ப, எனக்குச் சிரிப்பு வந்துடுச்சி. என் அம்மாவுக்கு என் மேல கோபம். எல்லாருடைய தோட்டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்ல காய்கறி விலையாவது குறையுமேனு நான் சொன்னதும் என்னைத் திட்டினாங்க. இயேசுவே, என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சிடுங்கனு பிரார்த்தனை பண்ணாங்க.

சின்ன வயசுல இருந்து இந்தச் சண்டை, என் வீட்ல நடந்துக்கிட்டேதான் இருக்கு. மூடநம்பிக்கை கண்டிப்பா விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அது எந்த மதத்துல இருந்தா என்ன?

உங்களின் உண்மையான அக்கறையையும் மனதையும் கண்டுகொள்ளாமல், ஆயிரம்தான் இருந்தாலும் நீ தமிழனில்லை என்று உங்களை யாரேனும் காயப்படுத்தியது உண்டா? அது யார் எவரென்று சொல்லாவிடினும், என்ன நிகழ்வு என்று சொல்லுங்களேன்!?

சில நேரங்கள்ல அப்படி, முட்டாள்தனமா யாராவது சொல்வாங்க. அதுக்கெல்லாம் காயப்பட்டா, அடிக்கடி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக வேண்டியிருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் மேல் அரசாங்கமே குண்டு போட்டு கொத்துக் கொத்தா மக்கள் இறந்துட்டு இருந்த நேரம். அந்த சமயம் அமெரிக்காவுல நியூ ஜெர்ஸி தெலுங்கு அசோசியேஷன்ல என்னைச் சிறப்பு விருந்தினராக் கூப்பிட்டிருந்தாங்க.

அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தெலுங்கு மக்கள் கூடி இருந்த சபை அது. நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, போரில் அநியாயமா சாகடிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தலாம்னு சொன்னேன். எல்லோரும் எழுந்து நின்னாங்க. நீங்க கர்நாடகா, தெலுங்கு நிகழ்ச்சிக்கு வந்திருக்கீங்க. தமிழர்களுக்கு எதுக்காக அஞ்சலி செலுத்துறீங்க-னு புலனாய்வு செஞ்சு கேட்டார் ஒருத்தர்.

சக மனுஷனா, யாரு வேணும்னாலும் இதைச் செய்யலாம். எந்த மொழியா இருந்தா என்னனு நான் சொன்னேன். காவிரி நீர் பிரச்சினை வரும்போதெல்லாம், உங்க கருத்து என்ன?னு கேட்பாங்க. அரசியல்வாதிகளும், அறிஞர்களும், மக்களும் கருத்துச் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை, ஒரு நடிகன்கிட்ட ஏன் கேட்கிறாங்கனு தெரியலை.

தெரிய வேண்டியவர்களுக்கு நம்மளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சா போதும். எல்லார்கிட்டயும், நன்னடத்தைச் சான்றிதழ் கேட்டுட்டும் இருக்க முடியாது. நம்மளை விமர்சிக்கிறவங்ககிட்ட, அதைக் காட்டிட்டும் இருக்க முடியாது!

நன்றி : ஆனந்த விகடன், 25.9.2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *