தமிழ் மக்கள் எங்களுக்கே ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள் என்ற ராஜபக்க்ஷேவுக்கும், டக்ளசையும், ஆனந்த சங்கரியையும் கருணாவையும் சிங்கள ராணுவத்தையும் உத்தமர்கள் போல தங்கள் எழுத்துகளில் அடையாளம் காட்டிய துக்ளக்குக்கும் சாட்சியமிக்க பதில்களாக தங்கள் பெரும்பான்மை வாக்குகளை ஆளும் அரசுக்கு எதிராகவும் அவர்களோடு கூட்டணி போட்ட தமிழ்ச் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிர்ப்பாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலேயே ஒட்டிக் கொண்டு தமிழர் தரப்புக்கு முரணான வேலைகளைச் செய்து கொண்டிருப்பவர்களின் முகத்திரையைக் கிழிக்கும்படியாகவும் வட மாகாணத் தேர்தலில் தமிழர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
இப்படி தமிழர்கள் வாக்குகளின் வழியே வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றியானது ராஜபக்க்ஷே மீதான எதிர்ப்பு, மாறாக அது கூட்டமைப்புக்கான ஆதரவல்ல. சந்தர்ப்பவாதத்துக்கும் கொள்கைகளில் வளைந்து கொடுப்பவர்களுக்கும் ஈழ மக்கள் என்ன நிலையைக் கொடுப்பார்கள் என்பதற்கு, சிறந்த நிகழ்கால எடுத்துக்காட்டே டக்ளஸ் கட்சியின் படுதோல்வியும், பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பில் நின்றே தோல்வியைத் தக்க வைத்த வீ.ஆனந்த சங்கரியின் நிலையும். இந்த நிலை எதிர்காலத்தில் கூட்டமைப்பு எப்படிச் செயல்படுதல் அவசியம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. தவறானவர்கள் எந்தப் பக்கம் நின்றாலும் மக்கள் தோல்வியைக் கொடுப்பார்கள் என்பதை உணர்த்திய வட மாகாண தேர்தல் சுதந்திரத்தையும், உரிமையையும் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இதனால் பெரிய மாற்றங்கள் தமிழ்ப் பகுதிகளில் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்றாலும் தமிழ்ப் பகுதிகளை தமிழர் வசமே தக்க வைக்கக்கூடிய மாற்றம். பறிக்கப்பட்ட நிலங்களை மீள்பெறுதலும் சிங்கள மயமாக்கல்- ராணுவ மயமாக்கலைத் தடுத்தலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான வழிகளை உண்டாக்குதலுமே பெரிய மாற்றங்களை நிகழ்த்தும் செயல் திட்டங்கள் ஆகும். ஆனால், இப்போதுள்ள மாகாண உரிமைகளின்படி இவ்வாறான எந்த மாற்றங்களும் கொண்டு வர முடியாது. நில அதிகாரமும் போலீஸ் அதிகாரமும் ராஜபக்ஷே அரசின் வசமே உள்ளன. சிங்களமயமாக்கலும், ராணுவ மயமாக்கலும், இன்னும் பலவிதமான சிங்களரசின் மயமாக்கலும், இலங்கை எங்கும் சிங்களர்கள் பரவ வேண்டும், அவர்களே பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்ற செயல்திட்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது.
இந்தச் செயல்திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதை பேராசிரியர் வரதராஜன் எதார்த்த உதாரணமாக, சுடு சோற்றினை உண்ண முற்படுகின்ற ஒருவர் சுடு சோற்றின் நடுவே கையை வைத்தால் சூடு தாங்காமல் உடனே கையை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால், சுடு சோற்றின் ஓரத்திலிருந்து உணவருந்த ஆரம்பித்தால் எந்தவிதப் பிரச்சினைகளுமின்றி முழு உணவையும் உண்ணமுடியும். தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்ட அரசாங்கம் இத்தத்துவத்தினையே கையாள்கிறது என்று கூறியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து தமிழர்களின் பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றும் செயல்திட்டத்தின் அடிப்படை இதுதான்.
இதற்கு இனி என்ன செய்வது என்பதே வெற்றி பெற்றதற்கான சிறந்த செயல்திட்டமாக இருக்கும். அதிகாரப் பகிர்வு என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு மக்களின் வாழ்நிலைகளையும் வளங்களையும் காக்காமல் விட்டால் இவ்வெற்றி பெரும் அழிவை தமிழ் மக்களுக்கே தந்துவிடும்.
துக்ளக்கின் விமர்சனங்களும், இலங்கையில் துக்ளக் என்ற கட்டுரைகளில் வந்த கருத்தாக்கங்களும் பெருமளவு புரட்டுகளே என்பதை பல விதத்தில் கடந்த கட்டுரைகளில் எனது பயண அனுபவங்களில் இருந்து சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால், இவை எவற்றையும் துக்ளக் ஏற்காது என்பது எனக்கு நன்கு புரிந்திருந்தாலும், இலங்கையில் ரத்தம் படிந்த நிலங்களில் 25 நாட்கள் பயணித்தேன் என்ற முறையில் இவர்கள் கூறிய பொய்களை மனம் ஏற்கவில்லை, அதனாலே இப்படியான கருத்து வெளிப்பாடு. இவை மட்டுமின்றி காங்கிரஸ் அனுதாபிகள் தங்கள் வட்டத்துக்குள் நாங்கள் சொல்வது பொய் என்கிறீர்களே, படியுங்கள் என இலங்கையில் துக்ளக்கை தங்கள் குற்றங்களுக்கெல்லாம் நியாயம் கற்பிப்பதாய் சொல்லிக் கொள்கிறார்கள் என்பதையும் சோத்தபய ராமபக்க்ஷே தொடர் கட்டுரைகளை எழுதும் நேரங்களில் பல முன்னாள் காங்கிரஸ்காரர்களாலேயே அறிந்து கொண்டேன். அதனாலேயே துக்ளக் குறிப்பிட்ட செய்திகளிலிருந்தே பல நிலைமைகளைக் குறிப்பிட்டிருந்தேன். இலங்கையில் துக்ளக் என்பது முழுதுமே சோவின் இலங்கை அரசின் எண்ண ஓட்டம்.
விமர்சிப்பது மட்டுமே அல்லாமல், நமது தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்பதும், அப்படிக் கற்ற படிப்பினைகளிலிருந்து மீள் செயல்திட்டத்தினை இன்றைய நிலைமைக்கு ஏற்பவும் எதிர்கால நிலையைச் சிந்தித்தும் உருவாக்குதலுமே ஈழக் கனவை நனவாக்கும்.
(முற்றும்)