நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வந்தால் நாடெங்கும் மதக் கலவரங்கள் நடக்கும். சமூக அமைதி பாழ்பட்டுப் போகும். பொய், புரட்டுகள் மூலம் சமூக நல்லிணக்கம் குலைக்கப்பட்டு, மனதளவிலேயே வேற்றுமைகள் வளர்க்கப்பட்டுவிடும் என்றெல்லாம் சமூக அக்கறையாளர்கள் அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நரேந்திர மோடியைப் பிரதமர் பதவிக்குக் கொண்டு வருவதற்காகவே இத்தகைய கலவரங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நிலை இப்போது மேலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியில் ஒரு பெண் கேலியில் தொடங்கியதாகச் சொல்லப்படும் பிரச்சினையில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்; பிரச்சினை தீவிரமாகியுள்ளது என்று முதல் கட்ட செய்திகள் வந்தன. அடுத்தடுத்து கலவரம் பெரிதாகி 53க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் படுகாயத்துடனும் உள்ளனர். 40,000 பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்ற நிலைக்கு வந்து மேற்கு உத்தரப்பிரதேசமே தகித்துக் கொண்டுள்ளது.
முசாபர் நகரைச் சேர்ந்த ஒரு இந்து ஜாட் பெண்ணை முஸ்லிம் இளைஞர் ஒருவர் கேலி செய்ததால் கோபமடைந்த அப்பெண்ணின் அண்ணன்கள் அந்த முஸ்லிம் இளைஞனைத் தட்டிக் கேட்டதில் அப்பையன் இறந்துவிட்டதாகவும், இதற்குப் பழிவாங்க பெண்ணின் சகோதரர்கள் இருவரையும் முஸ்லிம்கள் படுகொலை செய்துவிட்டதாகவும்தான் கலவரத்திற்கான காரணம்பற்றி வந்த செய்திகள் கூறின.
இதையேதான் இந்தியா முழுக்க உள்ள ஊடகங்கள் பரப்பின. எனவே முதலில் பெண் கேலி செய்த முஸ்லிம் இளைஞனைத் தட்டிக் கேட்டது தப்பில்லை என்ற மனநிலை உருவாக்கப்பட்டது. பெண் கேலி (Eve Teasing) என்று முதலில் சொன்னவர்கள் அடுத்தடுத்து பாலியல் துன்புறுத்தல் (Sexual harassment & Molestation) என்று சொல்லி தீவிரமாக்கினார்கள்.
தமிழ்நாட்டில் தர்மபுரி இளவரசன் _ திவ்யா காதலையொட்டி நாடகக் காதல் என்ற சொல்லை எப்படி ஜாதிக் கலவரம் தூண்டப் பயன்படுத்தினார்களோ, அப்படி வி.எச்.பி. போன்ற சங்பரிவார்க் கும்பலால் லவ் ஜிகாத் என்ற புரளி வடநாட்டில் பரப்பப்படுகிறது. அதாவது, இந்துப் பெண்களைக் காதலித்து, கர்ப்பமாக்கி, இந்துப் பெண்கள் வயிற்றில் முஸ்லிம் கருவை உருவாக்கிவிட்டு அவர்களைக் கைவிட்டுச் சென்றுவிடுவதை முஸ்லிம் இளைஞர்கள் தொடர்ந்து ஒரு போராட்ட முறையாகவே செய்கிறார்கள்; அதற்கு லவ் ஜிகாத் (love jihad) என்று பெயரிட்டிருக்கிறார்கள் என்பதாக சங்பரிவார்க் கும்பல் சொல்வது புரளியல்ல _ உண்மையே என்பதற்கு இந்த முசாபர் நகர் சம்பவமே எடுத்துக்காட்டு என்ற ரீதியில்தான் இது எடுத்துச் செல்லப்பட்டது.
கேலிக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளானதாக சொல்லப்பட்ட பெண் ரிது என்பவர். இவரது சகோதரர் சச்சின் சிங் என்பவரும், அவரது உறவினர் பையன் கவுரவ் சிங் என்பவரும்தான் கவ்வால் என்ற பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் என்ற முஸ்லிம் இளைஞரை அடித்துக் கொன்றவர்கள். அதன்பின் அவர்கள் இருவரும் (சச்சின் & கவுரவ்) பதிலுக்குக் கொல்லப்பட்டவர்கள்.
ஆனால் என்.டி.டி.வி நடத்திய விசாரணையில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று தெரியவந்தது.
கேலிக்குள்ளானதாகச் சொல்லப்பட்ட பெண் ரிது, தனக்கு அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லையென்றும், ஷாநவாஸ் என்பது யார் என்று தனக்குத் தெரியாதென்றும், கவ்வால் பகுதிக்குத் தான் செல்லவேயில்லை என்றும் தெரிவித்தார். கவ்வால் பகுதியில் இவ்வாறு தொல்லை கொடுப்பார்கள் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளதால் நாங்கள் அங்கு போவதேயில்லை என்றார் ரிது.
காவல்துறையின் தரப்பிலும் பெண் கேலி நடந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. கவுரவ் என்ற -ஜாட் இளைஞனுக்கும் ஷாநவாஸ் குரேஷி என்பவருக்கும் வாகனத்தில் செல்லும்போது சாலையில் ஏற்பட்ட மோதலுக்காக, ஷாநவாஸின் வீட்டுக்குள் புகுந்து கவுரவ்_ம் சச்சினும் ஒரு கும்பலுடன் சென்று, ஷாநவாசை ரோட்டுக்கு இழுத்து வந்து வாளால் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். ஷாநவாஸ் கொலை தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் சச்சின், கவுரவ் உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதில் நடவடிக்கையாக நடந்த சச்சின், கவுரவ் கொலை தொடர்பான முதல் தகவல் அறிக்கையிலும் ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உண்மை இவ்வாறு இருக்க, பெண் கேலி, லவ் ஜிகாத் என்றெல்லாம் பரப்பப்படும் செய்திகளை மிகவும் கவனமாக நாம் அணுக வேண்டும். எங்கே ஒரு சிறு பிரச்சினை கிளம்பினாலும் அதைக் கலவரமாக்கி மதவெறியைத் தூண்டி பலன் அனுபவிக்கத் தயாராக இருக்கிறார்கள் மதவாதிகள். முசாபர் நகர் பிரச்சினையைப் பொறுத்தளவில் இன்று வரையும் ஊடகங்களில் உண்மை வெளியிடப்படவில்லை.
அதேநேரம், இதை ஊதிப் பெரிதாக்குவதற்குப் பெரும் முயற்சிகளில் இந்துத்துவா கும்பல் ஈடுபட்டமை இப்போது அம்பலமாகியுள்ளது. இரு இளைஞர்கள் அடித்துக் கொல்லப்படுவதைப் போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு வீடியோ காட்சி பரப்பப்பட்டு, அதனால்தான் கலவரம் மிகப் பெரிதானதாக மாறியது. சச்சின் மற்றும் கவுரவ்தான் அந்த இளைஞர்கள் என்ற கருத்தில் செல்போன்கள், வீடியோ சி.டி.கள், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோ உண்மையானதல்ல. மூன்றாண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் சியால்காட் பகுதியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அவை.
இந்தக் காட்சியை வீடியோ சி.டி. ஆக்கி விநியோகித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம் செப்-. 21 அன்று மீரட்டில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இப்போது வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜாட் இனத்தவர்கள் இப்போதுதான் தங்களை இந்துக்களாக உணர்ந்துள்ளார்கள் என்று வரவேற்கிறது சங்பரிவார்க் கும்பல். எனில், இந்த நிகழ்வுகள் எதற்காக என்னும் கேள்வி எழுகிறது. பாபர் மசூதி _ ராமஜென்ம பூமி என்ற 1980களின் இறுதிப் பகுதியிலும், 1992லும் நாடு முழுக்க நடந்த கலவரங்களால் வளர்ந்த பா.ஜ.க. மீண்டும் அத்தகைய சூழலை உருவாக்க முனைகிறது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ரம்ஜான் ஊர்வலத்தில் கல் வீசப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரம், பீகாரில் நவாடாவில் கலவரம், ஹைதராபாத் என கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மதக் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தின் பின்னாலும் இந்துத்வாவின் கொடுங் கரங்கள் நீண்டுள்ளன. பா.ஜ.க.வின் அரசியல் ஆதாயத்திற்கான முன்னெடுப்பாகவும் இவை இருப்பதைக் கவனிக்க முடிகிறது.
மோடி செல்லுமிடங்களிலெல்லாம் இத்தகைய பதற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் திருச்சிக்கு வருகிறார் மோடி என்று கோடிக்கணக்கான ரூபாய்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு ஊடகங்கள் திருச்சியில் ஏதோ பெரும் புரட்சி நடக்க இருப்பதைப் போல இலவச விளம்பரம் தருகின்றன. திருச்சியிலும் இதுவரை இல்லாத ஒரு பதற்றநிலை உருவாகியுள்ளது. முஸ்லிம்களும், ம.க.இ.க.வினரும் எங்கள் விளம்பரப் பதாகைகளை, மோடி படங்களைக் கிழித்துள்ளனர் என்று ஆங்காங்கே ஆட்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் பா.ஜ.க.வினர்.
அமைதிப் பூங்காவாம் தமிழகத்தை அமளிக்காடாக்கி, அதில் ஆதாயம் தேடப் பார்க்கிறது இந்துத்துவா. முன்பு அத்வானி வரும் போதெல்லாம் பைப் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்றும் முஸ்லிம்கள் கைது என்றும் செய்தி வரும். ஆனால் அவை சங்பரிவார்க் கும்பலால் செய்யப்பட்ட சதி என்பது மறைக்கப்படும். இப்போதும் என்னைக் கடத்திவிட்டார்கள் என்று கோவையில் ஒரு t5அனுமன் சேனாக்காரரும், வீட்டில் தாக்குதல் என்று பா.ஜ.க.காரரும் கொடுத்த போலிப் புகார்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளன. விநாயகர் சதுர்த்தி விசயத்தில் போட்டியில் சிவசேனாக்காரர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளார் இன்னொரு இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர். முன்பு பிள்ளையார் சிலையை அவமதித்துவிட்டதாக ஒரு புரளி கிளப்பி, பின் அது அவர்களே செய்த சதி என்பதும், தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அவர்களே வைத்த குண்டு வெடிப்பு என்று ஏகப்பட்ட எச்சரிக்கைக் குறியீடுகள் தமிழ்நாட்டில் தெரிகின்றன.
இவற்றை ஏதோ விளையாட்டுத்தனமாக விட்டால், நாளை தமிழகமும் முசாபர் நகரைப் போல, நவாடாவைப் போல கலவர பூமியாகும். இந்துத்துவா விரும்புவது அதைத்தான்!
பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட இந்த மண்ணில் இந்துத்துவா வேரறுக்கப்படாவிட்டால் விளைவுகள் விபரீதங்களாகும். இந்தியா முழுக்க இதே நிலைமையை, குஜராத்தை மாதிரியாகக் கொண்டு நிகழ்த்த இந்துத்துவா தயாராகிறது.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
– சமா.இளவரசன்