மோடி விளம்பரம் : தேன் தடவிய விஷ உருண்டை

அக்டோபர் 01-15

ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம் என்பதையே மய்யப்படுத்தி இந்தியாவை ஹிந்துஇயாவாக மாற்றத் துடிக்கும் அமைப்பின் அரசியல் பிரிவு – உருவாக்கம்தான் பாரதீய ஜனதா (BJP) என்பது.

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இல்லாத விசித்திர நிலை பா.ஜ.க.வுக்கு; அது சுதந்திரமாக இயங்கும் அரசியல் கட்சி அல்ல; மாறாக, அதன் மூக்கணாங் கயிறு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கையில்தான் உள்ளது.

பிரதமராக யார் (பிஜேபி மூலம்) வருவது என்பதை மட்டுமல்ல; யாருக்கு எந்தத் துறை (இலாகா) அளிப்பது என்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ். எஜமானர்கள்தான் நிர்ணயிக்க வேண்டும்; அதனை அப்படியே செயல்படுத்துவது மட்டும்தான் பா.ஜ.க.வின் வேலை!

 

அதன்படிதான் பி.ஜே.பி. தலைவராக, நிதின்கட்காரி என்ற பார்ப்பன தொழிலதிபரையே இரண்டாம் முறைக்கும் கொண்டுவர அது முயற்சித்து தோற்றுவிட்ட நிலையில்தான், திடீரென்று ராஜ்நாத்சிங்கைப் பா.ஜ.க. தலைவர் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்தது.

அதுபோலவே மோடி வித்தையும்கூட; வேறு வேறு நபர்கள் அத்வானி போன்றவர்களால் முன்னிறுத்தப்படக் கூடுமோ, அதன் மூலம் நமது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும், அதிகாரமும் சரியக் கூடிய நிலை ஏற்படுமோவென்று கருதியே, திடீரென்று அவசர அவசரமாக தங்கள் கருத்துப்படியே மோடியை பிரதமர் வேட்பாளர் என்று  அறிவித்து விட்டது ஆர்.எஸ்.எஸ்.

மத்திய இணையமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளதுபோல்,
தேர்தல் போட்டி காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எசு.க்கும் தானே ஒழிய, மற்றபடி காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும்கூட அல்ல. அதுதான் உண்மை என்று கூறியுள்ளது 100-க்கு 100 சரியான கணிப்பு ஆகும்!

பாபர் மசூதியை இடித்தவர்கள், மீண்டும் நாட்டில் மதவெறியைப் பரப்பி, சிறுபான்மையிரை மிரட்டி, ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை -_ சமூகநீதியைப் பறித்து, மீண்டும் இராமர் கோவில் கட்டுவது தொடங்கி நாட்டை இந்து நாடாகவே ஆக்கி, ஜனநாயகத்திற்கு மெல்ல விடை கொடுத்து பாசிசத்தினை அரியணை ஏற்றி, மனுதர்மத்தையே இன்றைய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மூலதாரச் சட்டமாக்கும் முயற்சியின் முன்னோடிச் செயல்களில் முதன்மையானதே மோடியைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளதன் ரகசியம்.

அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவரும், சமூகநீதியில் உறுதியான நிலைப்பாடு கொண்டவருமான சரத்யாதவ் அவர்கள் மோடி பற்றி மற்றொரு முக்கிய பின்னணியையும் தோலுரித்துக் காட்டியுள்ளார்!

பன்னாட்டு பெரு நிறுவனங்களின் (விறீவீஸீணீவீஷீஸீணீறீ) நெருக்குதல் காரணமாகவே மோடி முன்னிறுத்தப்பட்டுள்ளார் என்று விளக்கியுள்ளார்.

அம்பானிகள், டாட்டா போன்ற இங்குள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் மற்றும் வெளியே தெரியக் கூடாத பன்னாட்டுத் திமிங்கலங்கள் திணித்துள்ளதன் விளைவே மோடி முன்னிறுத்தப்படுவது.

தினம் தினம் ஒவ்வொன்றாக அள்ளி விட்டு, பெருங்கூட்டத்தைக் காட்டி, தமிழ்நாடே ஏதோ காவிமயமாக்கப்பட்டுவிட்டது போல், பார்ப்பன பனியா _- ஊடகங்களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறதே!

பன்மதங்கள், பன்மொழிகள், பல கலாச்சாரங்கள் -_ பண்பாடுகள் நிலவும் நாட்டில் ஒரு மதம் _ -ஹிந்து மதம் ஒரு மொழி _- சமஸ்கிருதம் ஒரு கலாச்சாரம் _- பார்ப்பனீய _ ஆரிய சனாதன மதக் கலாச்சாரம்,

(குஜராத்தில் பள்ளிப் பாட புத்தகங்களில் இவை பாடமாக வைத்துச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன)

18 வயதுள்ள வாக்காளர்களான இளைஞர்கள் _ வெறும் இந்த விளம்பர வெளிச்சம் இணையதள மத்தாப்புகள் கண்டு ஏமாந்து விடுவார்கள் என்ற ஒரு தப்புக் கணக்குப் போட்டே காவிக் கூட்டம் இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி செயல்படும் நிலை!

மக்கள் அவ்வளவு விவரம் தெரியாதவர்கள் அல்லர்; அப்பாவி இளைஞர்களுக்கு ஹிந்துத்துவா ஆபத்தை விளக்குவதோடு, குஜராத்தில் வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற மாயத் திரையையும் கிழித்து, ஏழை -_ எளிய விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, பெரு முதலாளிகள் வசம் ஒப்படைத்து, அவர்களைத் தெருப் பிச்சைக்காரர்களாக மாற்றுவதா வளர்ச்சி? என்று  கேட்கும், மைனாரிட்டி சமூகத்தை அடியோடு வாழ்வுரிமையற்றவர்களாக்கி, ஒரு வகை கொத்தடிமைகளாக்கிட முயலுவதுதானா வளர்ச்சி? (Growth)  அப்படியும் அங்கு _- மோடி ஆளும் குஜராத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆந்திராவை விட, கர்நாடகத்தைவிட, மற்ற பல மாநிலங்களைவிட மிக அதிகம் என்பதை ஏடுகளில் வந்த புள்ளி விவரங்கள் மூலம் விளக்குவது அவசர அவசியமாகும்!

தேன் தடவிய விஷ உருண்டை இது என்பதை இடையறாத பிரச்சாரத்தின் மூலம் இணையதளங்களில் தொடங்கி, எல்லா ஊர்களிலும் பிரச்சாரமான பாசீசப் படையெடுப்பிலிருந்து, இந்திய நாட்டின் மதச் சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட கட்சிகளை மறந்து முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓர் அணியில் திரள வேண்டும்.

தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால், மாட்டுச் சாணிக்குப் பயந்து மனுஷ சாணியில் காலை வைத்து விடக் கூடாது! எச்சரிக்கை!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *