அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்கும்?

செப்டம்பர் 16-30

அன்று பெரியார் சொன்னது இன்று நடந்தே விட்டது!

தமிழ்நாடு தனியாகப் பிரிந்தாலும் பத்து வருடத்திலே நாம் நூறு வயது வரை வாழ்வோம். ஆகாயத்திலே பறப்போம். உங்களுக்கு எல்லாம் ஒன்றும் தெரியாது. இப்போது நானூறு பேரை, முன்னூறு பேரைத் தூக்கிக் கொண்டு பறக்கிறது ஆகாயக் கப்பல். ஒரு மனிதனைத் தூக்கிக் கொண்டு ஏன் பறக்காது? தனித்தனியாக வாங்கி முதுகில் கட்டிக்கொண்டால். ஏறுது மேலே விர் என்று! இப்பவே நாற்பது வருடம் சராசரி வயது உயர்ந்துவிட்டதே! தோழர்களே! 1952இல் நமது சராசரி வயது 25. இன்று சராசரி வயது 52. இடையிலே 20 வருடத்தில் 30 வருடம் நமது ஆயுள் உயர்ந்து விட்டது. இன்னும் 2000 வருடம் வரும்போது நாம் 75 வருடம் இருப்போம். வெள்ளைக்காரன் நூறு வருடத்திற்கு மேல் இருப்பான் சாகமாட்டான். சாவதற்கு அவசியம் இல்லை. அந்த அளவு மருந்தும் வந்துவிட்டது. ஏதோ ஒன்று இரண்டுக்கு இல்லை. அதுவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறான். எனவே, நல்ல வளர்ச்சியான காலத்திலே இருக்கிறோம். நான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு சொன்னேன். பாருங்கள், நேற்று வந்த பத்திரிகைகளிலே விந்துகளை விந்து பேங்கில் சேர்த்துவைத்து, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கூட குழந்தைகளை உண்டாக்கலாம் என்று வந்திருக்கிறது.

கோழிக்குஞ்சைப் பொறிக்க வைப்பதுபோல் பொறிக்க வைத்துவிடலாம். பெண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே ஆண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே, பேங்கு என்று அதற்குப் பெயர். அதிலே சேர்த்து வைத்துக் கொள்ளலாம். என்றைக்குக் குழந்தை வேண்டுமோ, அன்றைக்குக் குழந்தையை உண்டாக்கிக் கொள்ளலாம். பியா, பியா என்று கத்திக்கொண்டு குழந்தை வரும், இதையெல்லாம் பொய் என்று சொல்ல முடியாது.

– சென்னை தியாகராய நகரில் தந்தை பெரியார் அவர்கள் 19.12.1973 மாலை ஆற்றிய தமது இறுதிப் பேருரையில் குறிப்பிட்ட சிந்தனை இது. அய்யா பெரியார் சொன்னதுபோல தனி மனிதன் பறப்பதற்கான வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் பல நடந்து வருகின்றன. சிலர் அதில் வெற்றிபெற்றுவிட்டார்கள். இங்கே படங்களில் உள்ளவை அந்த இயந்திரங்களே! மனிதனின் சராசரி வயதும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் கண்டு வருகிறோம். 75 வயதைக் கடந்தவர்கள் நம்மில் ஏராளமானோர் வாழ்வதே அதற்குச் சாட்சி. உலகில் அறிவியலில் வளர்ச்சி பெற்ற நாடுகள் பலவற்றில் விந்து சேமிப்பு வங்கிகளும், விந்துதான அமைப்புகளும் இயங்கி வருகின்றன. விந்து வங்கிகள் சென்னைக்கேகூட வந்துவிட்டன. இணையத்தில் நுழைந்து sperm bank, sperm donors, semen for sale எனக் குறிப்பிட்டால் ஏராளமான வலைத்தளங்கள் திறக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *