இந்தச் சடங்கு முறைகளைப் பற்றி எனக்கும் சில புலவர்களுக்குமே, இந்தச் சடங்கு இருந்திருக்க முடியாது. இது ஆரம்பமான பிறகு இதுக்குக் கண்ணு மூக்கு வச்சிருப்பாங்க. எப்படிக் குழந்தை பிறக்குது? நிர்வாணமாத்தானே பிறக்குது. அப்புறம்தானே, சீலை, அப்புறம்தானே நடக்க அப்புறம்தானே காரிலே உட்கார்ந்துக்கிட்டு ஓட்ட. அதுபோல அது பிறக்கிற போது ஒன்னும் இருந்திருக்காது. ஏதோ அவுக இஷ்டத்தைப் பொறுத்திருக்கும். அது ஏதோ பழக்க வழக்கத்தினாலே வந்துருக்கும். சில புலவர்கள் சொன்னார்களாம் சடங்கு இருந்ததாகக் தெரியலே. அப்படி இருந்திருந்தால் மாற்றிக்கலாம்ன்னு. ஒரு புலவர் சொன்னார், கூத்து இருந்திருக்கும், அந்தப் பழக்கம் இந்தப் பழக்கம் என்று சொல்லிவிட்டு என்னா சொன்னாருன்னா வீட்டுக்காரனெல்லாம், பொண்ணு வீட்டுக்காரன் மாப்பிள்ளையையும் மாப்பிள்ளையோட ஆளுங்களையும் பார்த்து உன் பையனுக்கு என் பொண்ணைக் கொடுக்கணும்னா அவன் அந்தப் புலியை அடிச்சி அதன் நகத்தைக் கொண்டு வந்தா நான் பொண்ணைக் கொடுக்கிறேன் என்று சொல்லுவான். ஆகவே அதுதான் நிகழ்ச்சின்னார்.
புலவர்களின் பொய்யும் புரட்டும்
இன்னொருத்தர் சொன்னார்! ஒருத்தன் மாடு வளர்ப்பான், அது ரொம்ப காட்டு மாடாக இருக்கும். அதை அடக்கு நான் என் பொண்ணை உனக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லுவான். அப்புறம் ஒருத்தன் சொன்னான், பொண்ணு அப்படியே வரும், எதுக்காலே பையன் வருவான். ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கிட்டா பட்டுக்கும். ஆனதினாலே ஒருத்தருக்கு ஒருத்தர் பேரிலே ஆசை, அதற்குக் காதல்னு பேரு. அதற்குப் பிறகு கல்யாணம். இப்படியா இருந்திருக்குதுன்னார். எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது இவைகளைக் கேட்டு, புலவனுங்க வாயிலே எல்லாம் இப்படி வருதேன்னு. என்னா? புலியை அடிக்க பத்துப் பேருபோனா இரண்டுபேரு திரும்பி வருவானா? (சிரிப்பு) புலியைப் பத்துப் பேரும் கல்லால அடிக்கணும் அல்லது ஈட்டியால் குத்துவான். புலியைச் சாகடிச்சில்ல நகத்தைக் கொண்டு வரணும்? பலியாகித்தானே ஆகணும் தனியா போனா? மாட்டை அடக்கணும்பான், அது கொம்பால இவனைக் குத்தினால் செத்துப் போவான். என்னா? நீ வச்சிருக்கிற பிள்ளை அப்படி என்ன போக்கிரிப்பிள்ளையா? அதை அடக்க இவனுக்கு அவ்வளவு சக்தி வேணுமா. இவைகள் எல்லாம் முட்டாள்தனமான கற்பனைகள். நந்தவனத்திலே இவள் இப்படி வந்தா அவன் இப்படி வந்தான் என்றா சினிமாக்காரன் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வாரான். சொல்லை மூஞ்சிக்காரன் (சிரிப்பு) தூரத்திலிருந்து அவனைப் பார்த்தா அவன் அழகாத்தான் தோன்றுவான். யார் அவன்? நேத்து அவன் சரித்திரம் என்ன? முந்தா நாள் அவன் எப்படி இருந்தான் என்பது தெரியுமா? அவனுக்கு இந்தப் பொண்ணு கை எல்லாம் குட்டமா இருக்கும். அப்படியிருக்கிறவள் தான் இவன் எதுக்காலே வருவாள். (சிரிப்பு). நான் எதுக்குச் சொல்கிறேன்னா முட்டாள்தனமான கருத்துகளை _ பயனற்ற கருத்துகளைச் சொல்கிறார்கள். நான் போன மாதத்திலே ஒரு திருமணத்துக்குப் போயிருந்த போது ஒரு புலவர் எனக்குப் படட்டுன்னுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் என்னை யார் கண்டிச்சாலும் நான் அவர்களுடைய முட்டாள்தனத்தைப் பற்றி வருத்தப்படுவேனே தவிர அவர்கள் என்னை வைகிறதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. டாக்டர் வந்து ஊசி போட்டா எனக்கு வலிக்கத்தான் செய்யும். அதனாலே அவரை நான் வருத்த முடியுமா? என் நோவுக்காகப் போடுகிறார். அப்படியே கருத்துகளைச் சொன்னார். நான் சும்மாவே இருந்தேன். அவர் சொன்னார், நமக்கு ஆதாரம் எல்லாம் தொல்காப்பியம்தான். தொல்காப்பியத்திலே இருந்தது நமக்குக் கரணம். கரணத்தை நமக்கு உண்டாக்கிக் கொடுத்திருக்கிறாங்க. பொய்யும் வழுவும் தோன்றி பின்னர் அய்யர் யாத்தனர் கரணங்கள் என்று சொல்லி அப்பவே கரணம் இருக்குது. தொல்காப்பியம் வயசு மூவாயிரம். அந்தச் சடங்கு இந்தச் சடங்கு என்று வாதாடினார்.
தொல்காப்பியம் கூறும் திருமணமுறை யாருக்கு? நான் அதைப்பற்றி அவர்கிட்டே ஒன்னும் சண்டைக்குப் போகலே. அய்யா நீங்க சொன்னது தொல்காப்பியத்திலே இருக்குதுதான். அதை உமக்கு அவன் சொல்லலே. மடப்பசங்களுக்குச் சொன்னான் (சிரிப்பு கைதட்டல்). அதுவும் எந்த மடப்பசங்களுக்குச் சொன்னான்? மேல்ஜாதிக்கார மடப்பசங்கள் இருக்கிறாங்களே அந்த மடப்பசங்களுக்குச் சொன்னான். போக்கிரிப் பசங்களுக்குச் சொன்னான். உனக்கல்ல _ உன்னை அவன் குறிப்பிடவே இல்லை.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கருமங்கள்
மக்கள் அயோக்கியர்களான பிறகு பொய்யும் குற்றமும் செய்தவன் அயோக்கியன்தானே. மக்கள் எல்லாம் அயோக்கியர்களான பிறகு அய்யர் ஏதோ ஒரு குறிப்பிட்ட பெரியவன் உண்டாக்கினான். யாருக்கு அது? உனக்குன்னு சொல்லவில்லையே? அந்த தொல்காப்பியத்திலேயே அது உனக்குன்னு சொல்லலே நல்லா கவனிக்கணும். புலவனைக் கண்டாலும் கேளுங்க என்னைப் புலவர்கள் திருத்தினாலும் நான் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள்
கீழோர்க்கு ஆக்கப்பட்டது. அவ்வளவு தான் அந்தக் கரணங்கள் யாருக்குச் சொந்தம்? யாருக்காக உண்டாக்கப்பட்டது? இந்த மேலோருங்கிற மூணு ஜாதிக்கு, ஏன்? அவனுங்கதான் அயோக்கியப்பசங்களாக ஆயிட்டானுங்களே. பொய்பேசறதும், புரட்டுப் பேசறதும், தப்பாக நடக்கிறதும், பெண்களை ஒழுங்கா நடத்தலே _- ஆனதினாலே அய்யர் யாத்தனர் கரணங்கள். அது உனக்கு எப்படி வந்தது? மேலோர் மூவர்க்கு ஆக்கிய கரணங்கள் கீழோர் கீழ்ஜாதிப்பயலுங்கதான் கொண்டு வந்து புகுத்தினாங்க. உனக்காக இயற்கையாய் இல்லை. உனக்காக ஆக்கப்பட்டதுமல்ல. அப்படீனு சொன்னேன் போனமாசம். அவுக இரண்டு பேர் சிரிச்சாங்க. (புலவர்கள்)