பொதுவாக இந்தக் காரியத்திலே (தேர்தலிலே) கிருஷ்ணமாச்சாரியை மாத்திரமா நான் ஆதரிச்சேன். சீரங்கத்திலே, வாசுதேவ அய்யாங்காரை ஆதரிச்சேன் கும்பகோணத்திலே சம்பத்- அய்யங்காரை ஆதரிச்சேன், சர்.பி.ராமசாமி அய்யர் மகன் பட்டாபிராமனை அந்த ஆளை ஆதரித்தேன், பட்டுக்கோட்டையில் யாரோ ஒரு சீனிவாசனை ஆதரிச்சேன், இன்னும் எங்கெங்கேயோ நான் ஆதரிச்ச பாப்பானிலே தோத்துப்போன ஆளு இந்த காஞ்சிபுரம்தான், ஏறக்குறைய நான் போன ஆளுக எல்லாம் ஜெயிச்சாங்க, என்னமோ அந்த ஆளுக எல்லாம் இப்ப நம்ம காமாராசருக்குக் கையாளாக இருப்பாங்கன்னுதான் நினைச்சேன், அதுதான் காரணம்.
அய்யமாரை ஆதரிக்கிறேன்னா காமாராசருக்குக் கையாளுன்னுதான், அய்ந்தாம் படையாய் இல்லாமல், சூழ்ச்சி பண்ற ஆளாய் இல்லாமே _- இந்த மாதிரி இருப்பாங்களேன்னு, இந்தக் காரியத்துக்காகத்தான் என் ஆதரவு,
பாரத நாடும் காந்தி நாடும்!
இந்த 1957-லேயாவது இந்த நாட்டுக்குக் காந்தி நாடுன்னுபேரு வைச்சா நான் வரவேற்பேன். காந்தி- சகாப்தமானாலும் நான் வரவேற்பேன். ஏன்? அஸ்திவாரமே இல்லாத நமக்கு, சம்பந்தமே இல்லாத நமக்கு, இழிவு தரும்படியான ஒரு நிலைமையில் உள்ள பேரு பாரத நாடு என்று இந்த நாட்டுக்குப் பேரு இருப்பதைவிட யாராவது ஒரு மனுஷனுடைய பேராக இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. எதுக்காக இந்த நாட்டுக்குப் பாரத நாடு-ன்னு பேரு இருக்க வேண்டும்? அதுக்கு என்னா அர்த்தம், சரித்திரத்திலே ஏதாவது இருக்குதா? போக்கிரித்தனமாய் பாரத நாடுங்கிறான். காந்தியார் இறந்த உடனேயும் சொன்னேன். இந்த நாட்டுக்குக் காந்தி நாடு-ன்னு வைக்கச் சொன்னேன்.
அதாவது வருஷம் என்றதுக்கு நமக்கு ஆதாரமே கிடையாது. உலகத்திலே மற்ற எல்லாருக்கும் இருக்குது. உலகம் பூராவும் வருஷம் என்கிறதுக்குக் கிறிஸ்து பேரிலே இருக்குது. கிறிஸ்து பிறந்து 1957ஆம் வருஷத்தில் இன்று நாம இருக்கிறோம். நமக்குன்னு என்னா இருக்குது சொல்லிக் கொள்ள? நான் பிரமாதி வருஷம் புரட்டசி மாதம் பிறந்தேன். பிரமாதி வந்து எத்தனை வருஷமாச்சி, 17 வருஷமாச்சி, இன்னைக்கு எனக்கு 17 வயது இப்போ? எந்த பிரமாதி? எவனும் கேட்கிறதில்லே? பாப்பான் அவ்வளவு புரட்டு பண்ணிட்டான். 20,000 வருஷம் இந்த நாடு எங்கே எப்படி இருந்ததோ தெரியாது? முஸ்லீம் முகம்மது நபி பிறந்தது முதல் வருஷம் கணக்கிடுகிறான், எனவே காந்தி பேராலே வருஷம் கணக்கிடட்டும் என்கிறேன்.