பாலியல் வழக்கில் குஜராத் இந்து சாமியார்

செப்டம்பர் 16-30

இந்தியாவில் மிக எளிதாக ஒரு தொழில் தொடங்கி பணம் குவிக்க வேண்டுமானால் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. காவி உடை அணிந்து, தாடி வளர்த்து, புரியாத சமஸ்கிருத ஸ்லோகங்கள் சிலவற்றை முணுமுணுத்துக்கொண்டு அருள்(?)பாலித்தால் போதும். பக்தர் கூட்டம் முண்டியடிக்கும்;

 

அரசியல்வாதிகள் அணிவகுப்பர்; பணக்காரர்கள் ஸ்பான்சர் செய்வர். ஆசிரமம் தொடங்கிவிடலாம். பஜனை, கச்சேரி, தியானம், யோகா, மூலிகை மருத்துவம், சொந்தத் தொலைக்காட்சி என உற்சாகமாக இந்தியாவையே வலம் வரலாம். இவை எல்லாவற்றையும் மதச்சார்பற்ற மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கும். (கடுமையான புகார்கள் வரும் வரை).

 

கடந்த 10 ஆண்டுகளில் இந்த இந்துமதச் சாமியார் பிசினஸ் நவீன கார்ப்பரேட்டுகளாக மாறிவிட்டன. மருந்து வியாபாரம், மருத்துவமனைகள், ஓய்வு விடுதி என காலத்திற்கேற்ப வணிக உத்தியைக் கையிலெடுத்துவிட்டது.

இந்த ரக சாமியார் ஒருவர் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் பெயர் ஆசாராம் பாபு. வயது 72. வட இந்திய தனியார் தொலைக்காட்சிகளில் இவர் பிரபலம். காவிக்குப் பதில் வெள்ளை ஆடையில், தாடி சகிதம் காட்சி தருவார். ஆசாராம் பாபுஜி என்று பக்த கோடிகளால் அழைக்கப்படும் இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். 12 ஆம் வகுப்பு மாணவியைப் பாலியல் கொடுமைக்கு ஆட்படுத்தினார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. 400க்கும் அதிகமான ஆசிரமங்கள், 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை உடைய இவரது ஆசிரமம் மோடியின் தூய்மையான ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தில் உள்ள சபர்மதியில் உள்ளது.

அகமதாபாத் நகருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு அமைந்துள்ள காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தைப் பார்க்க விரும்பி ஆட்டோ ஓட்டுநரிடம் பாபுஜி ஆசிரமம் என்றால், எந்த பாபுஜியின் ஆசிரமம் என்று கேட்பார்களாம் ஆட்டோ ஓட்டுநர்கள்.

விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்கள், பா.ஜ.க. பிரமுகர்கள், வடமாநில முதல்வர்கள் என்று ஆசிரமத்திற்கு வந்து செல்லும் வி.அய்.பி.க்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மோடியின் வலதுகரமாகச் செயல்படும் அமித் ஷா ஆசாராமின் தீவிர பக்தராம். நரேந்திர மோடியும் 2 முறை சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

நித்தியானந்தா பிரச்சினை பரபரப்பாகப் பேசப்பட்டபோது, நித்தியானந்தாவின் செயலினை அவதார புருஷர்களின் இரசலீலை என்று கூறி ஆதரவுக் குரல் கொடுத்தவர் ஆசாராம். மேலும் நித்தியானந்தாவின் லீலையை, கோபிகைகளுடன் கிருஷ்ணன் புரிந்த லீலையாகப் பார்க்கச் சொன்னவர். நாகரிகமான தொழில்நுட்ப சாது நித்தியானந்தா (ஹைடெக் சாது நித்தியானந்தா) என்று கும்ப மேளாவின்போது புகழாரம் சூட்டியவர்.

விமான நிலையத்தில், எங்கும் நிற்காமல் எந்தப் பரிசோதனைக்கும் உட்படாமல் நேராக விமானம் நிற்கும் இடத்திற்கே செல்லும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றவர்.

பாலியல் குற்றச்சாட்டுப் புகார்களுடன், நில ஆக்கிரமிப்புப் புகார், சீடர்கள் சிலர் இறந்த மர்மம் போன்ற  குற்றச்சாட்டுகள் முன்பே இவர்மீது இருந்தாலும் வெளி உலகிற்குத் தெரியாமல் மூடி மறைக்கப்பட்ட நிலையில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆசாராம் பாபுவால் நடத்தப்பட்டு வரும் சின்ட்வாரா குருகுலம் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவியின் உடலில் ஆவி புகுந்திருப்பதாகவும், ஆவியை விரட்டுவதாக சிறுமியின் பெற்றோரிடம் சொல்லிவிட்டு, தனி அறையினுள் பாலியல் வன்கொடுமை நடத்தியுள்ளார் ஆசாராம்.

சிறுமியிடம் இங்கு நடந்தவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் அனுப்பியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம், தான் அகமதாபாத் செல்ல இருப்பதாகவும், அங்கு அவர்களது குழந்தைக்குச் சில சடங்குகள் செய்து பத்திரமாக அழைத்து வருவதாகவும் கூறியபோது, பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சாமியார் தன்னிடம் ஏற்கெனவே நடந்து கொண்ட முறையைப் பற்றிச் சொல்லி சிறுமி அழுததும் அதிர்ச்சியுற்ற பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

காவல்துறையிடம் போக்குக் காட்டி வந்த ஆசாராம் கைது செய்யப்பட்டபோது, தனது மெர்சிடஸ் பென்ஸ் காரில் செல்ல அனுமதி கேட்டதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஜோத்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துள்ள நிலையில், 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஆசாராமுக்கு ஏற்பட்டுள்ளது.

புகார் கொடுத்துள்ளவர் மைனர் என்பதால் The Protection of Children from Sexual Offences Act 2012 இன் கீழும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆசாராம் தள்ளப்படுவார்.

ஏற்கெனவே, ஆசிரமத்தில் இருந்த 2 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பான விசாரணை 2008ஆம் ஆண்டு குஜராத் அரசு அமைத்த திரிவேதி விசாரணை கமிசனால் நடைபெற்றது. அப்போது பல பக்தர்கள் கிருஷ்ண பகவான் _ ராதை உறவைப் பாலியல் குற்றத்திற்கான கருவியாக்கி பெண்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டார்கள் என்று சொல்லியிருந்தனர். கிருஷ்ணனைப் பற்றி கீதைக் கதைகளை உள்ளது உள்ளபடி சொன்னால் கோபம் கொள்ளும் கிருஷ்ண பரமாத்மாவின் ரசிகர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ?  ஆசாராம் பாபுவின் பக்தர் ஒருவரே இவரைப் பற்றி வெளிவராத தகவல்களை இந்தியா டுடே_யிடம்  (8.9.2013) கூறியிருக்கிறார். ராஜு சாந்தக் என்ற பக்தர், ஆசிரமத்துடன் தனக்கு 20 ஆண்டு கால தொடர்பு இருப்பதாகவும் ரூ. 20 லட்சத்திற்கும் மேல் சொத்தை தான் ஆசிரமத்திற்கு நன்கொடையாக அளித்ததாகவும் சொல்லியுள்ளார். ஆசாராமின் அகமதாபாத் ஆசிரமத்தின் நிர்வாகியாக இருந்தவர் சாந்தக்.

இவர் தனது வாக்குமூலத்திலும், 2001இல் ஆசாராமின் இருண்ட பக்கத்தைத் தான் காண நேர்ந்தது என்கிறார். அப்போது,  பீகார் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த தந்தையையிழந்த 17 வயதுப் பெண் ஒருவர், தன் தாயுடன் ஆசிரமத்திற்கு வந்தார் என்றும், ஆசாராமுக்கு பெண் தேடிக் கொடுப்பவர்கள் அந்தப் பெண்ணை ஆசாராமுடன் பாலியல் உறவு கொள்ளும்படிச் சொன்னதாகவும் தன்னிடம் அந்தப் பெண் இதை ரகசியமாகச் சொன்னார் என்றும் கூறியுள்ளார். ஆசாராம் சில சயமங்களில் தன்னை கிருஷ்ணா அவதாரம் என்று சொல்வதுண்டு. ஆசாராமுடன் பாலியல் உறவு கொள்வது ஒரு பிரசாதம் என்று அந்தப் பெண்ணிடம் சொல்லப்பட்டதாகவும் அந்தப் பெண் தன்னிடம் கூறியதாக சாந்தக் சொல்லியுள்ளார்.

ராஜஸ்தான் நிவாய் ஆசிரமத்தில் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்ணுடன் ஆசாராம் மிக நெருக்கமாக இருந்ததைத் தான் பார்க்க நேர்ந்தது. ஆனால் சாந்தக்கிற்குத் தன்னைப் பற்றித் தெரிந்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட ஆசாராம் உளவு பார்ப்பதாகக் குற்றம்சாட்டி, இதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தியதாகவும் சாந்தக் கூறியுள்ளார். ஆசாராமின் சீடர்கள் சாந்தக்கை அடித்ததால் ஆசிரமத்தை விட்டு வெளியேறிவிட்டாராம்.

ஆசாராம் பாபுவின் மகன் மீதும் புகார் எழுந்துள்ளது. ஆசாராம் பாபுவின் மகன் பெயர்  நாராயண் சாய். இவர்  போபாலில் உள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ளார். தன் தந்தை இல்லாத நேரங்களில், அங்குள்ள சீடர்களுக்கு, இவர் உபதேசம் செய்வது வழக்கமாம். இந்த நிலையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த இளம் பெண் ஒருவர், நாராயண் சாய் மீது, கடும் புகார் கூறியுள்ளார். காவல்துறையில் அவர் அளித்த புகாரில், “போபாலில் உள்ள ஆசிரமத்தில், நானும் தங்கியிருந்தேன். 2004இல், ஆசிரமத்துக்கு வந்திருந்த நாராயண் சாய், தன் சீடர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி என்னைக் கட்டாயப்படுத்தினார். வேறு வழியின்றி அவரைத் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பதும், இன்னும் விவாகரத்துப் பெறாதவர் என்பதும் பின்பு தான் தெரிய வந்தது. இதுகுறித்து, நாராயண் சாயிடம், புகார் செய்தேன். ஆனால் அவர், என் புகாரை அலட்சியப்படுத்தியதுடன், என்னைப் பலாத்காரம் செய்யவும் முயற்சித்தார். அவருக்குள்ள செல்வாக்குக் காரணமாக, அப்போது காவல்துறையிடம் புகார் செய்யவில்லை. தற்போது, ஆசாராம் பாபுவுக்கு எதிராக, சிறுமி புகார் செய்துள்ளதால், நானும் தைரியமாக இந்தப் புகாரை அளித்துள்ளேன் என்று புகாரில் அந்தப் பெண் கூறியிருக்கிறார். இதனால், ஆசாராம் பாபுவைத் தொடர்ந்து, அவரின் மகனும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது என்கிறது தினமலர் இணையதளம்(8.9.2013).

ராஜஸ்தானில் உள்ள ஆசாராமின் ஆசிரமத்தில், போலீசார் சோதனையிட்ட போது அங்கிருந்த சிலரைப் பிடித்தனர். விசாரணையின் போது, ஆசாராமின் முக்கியச் சீடர்களில் ஒருவரான சிவா என்பவர் கூறியதாவது:

ஆசிரமத்தில் உள்ள தியானக் குடிலில்தான் ஆசாராம் பாபு தனிமையில் தியானத்தில் ஈடுபடுவார். குறிப்பிட்ட சில நபர்களைத் தவிர, அந்தக் குடிலுக்கு யாரும் செல்ல அனுமதி கிடையாது. ஆசிரமத்திற்குப் புதிதாக வரும் பெண்களை, ஆசாராம் அந்தக் குடிலில்தான் சந்திப்பார். அப்போது, பெண்களைக் காமவசப்படுத்த, ஆபாச சிடிக்கள் போட்டுக் காண்பிக்கப்படும். அதை நானே ஒரு முறை நேரில் பார்த்துள்ளேன். ஆசிரமத்தில் இதற்காக ஏராளமான ஆபாச சிடிக்கள் இருந்தன. ஆசிரமத்திற்குப் புதிதாக வருபவர்களை, ரயில் நிலையத்திலிருந்து, ஆசிரமத்திற்கு அழைத்து வரும் பொறுப்பு, எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சாமியார் மீது புகார் கொடுத்த 16 வயதுப் பெண் மற்றும் அவரது பெற்றோரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வரும்படி, சாமியார் என்னிடம்தான் கூறினார். நான் நேரில் செல்வதற்குப் பதிலாக, மொபைல் போனில் பேசி, அவர்களை ஆசிரமத்திற்கு வரவழைத்தேன். அதன்பின் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. இவ்வாறு சிவா கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிவாவின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆசிரமத்தில் ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய மற்றொரு நபரும், இதே போன்ற தகவலைத் தெரிவித்துள்ளார். ஆசாராமின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் சென்ற போது, ஒரேயொரு நாள் அவரின் தனி அறைக்குள் தன்னை அனுமதித்ததாகவும், அப்போது அங்கு வந்திருந்த பெண்ணிடம் ஆசாராம் பாலியல் ரீதியான உறவு கொள்ள சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த நபர் கூறியுள்ளார். (தினமலர் இணையதளம் 5.9.2013)

ஆசாராம் பாபுவின்  ஆசிரமத்தில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு ஆபாச எம்.எம்.எஸ் வீடியோ சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஆபாச வீடியோவில், ஒரு பெண்ணின் உடல் மீது தனது கைகளால் சாமியார் தடவுவது போல இருக்கிறதாம். இந்த வீடியோவை எடுத்தவர் ஆசாராமின் உதவியாளர் சிவா என்று ஆஜ்தக் இந்தி செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்த ஆபாசக் காட்சிகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சிடியில் சேமித்துள்ளாராம் சிவா. ஆனால் இந்த சிடி கிடைக்கவில்லை. இந்த ஆபாச எம்எம்எஸ் அகமதாபாத்தில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் சில வீடியோ கிளிப்பிங்குகளும் கிடைத்துள்ளதாவும் ஆஜ்தக் கூறுகிறது.

இந்த ஆபாசப் படத்தை வைத்துப் பார்க்கும்போது ஆசிரமத்தில் பெருமளவில் செக்ஸ் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகப்படுகிறது. இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் கூறுபவர்கள் நாத்திகர்களோ, பகுத்தறிவாளர்களோ அல்ல; சாமியாரிடம் பக்தர்களாக இருந்தவர்கள், அவரது ஆசிரமத்திற்குப் பத்து ஆண்டுகளாக வந்து சென்றவர்கள். இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறி காவல்துறையில் புகார் அளித்தவுடன் ஆசாராம் பாபு கைது செய்யப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை நாங்கள் தெய்வமாக வணங்கி வந்தோம் என்று கூறும் பாதிக்கப்பட்ட சிறுமியின்  தந்தை, “அவர் மீது புகார் கொடுத்து 2 வாரங்களாகி விட்ட பின்பும் போலீசார் அவரைக் கைது செய்யவில்லை. விசாரணைக்கு வரும்படி இப்போதுதான் போலீசார் அவருக்கு சம்மன் கொடுத்துள்ளனர். ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இருந்து எங்களுக்கு மிரட்டல் வருகிறது. நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். நாங்கள் பொய் சொல்லவில்லை. எந்தப் பெற்றோராவது தனது மகளின் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டு, இதுபோன்ற குற்றச்சாட்டைக் கூறுவார்களா? உண்மையைக் கண்டறிய சி.பி.அய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிறார்.

இங்கே பிரச்சினை இதுதான். குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் கைது செய்யப்படவேண்டியது சட்டத்தின் கடமை.

ஆனால், இந்துத்துவ முகமூடி அணிந்த சாமியார்களை சட்டமும் ஆட்சி நிருவாகமும் கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் அவர்களுக்குக் குரல் கொடுப்பதற்கென்றே ஒரு கட்சி இருக்கிறது. அதுதான் நாட்டின் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா. காவி(லி)ச் சாமியார்களை உசுப்பிவிட்டு மத வெறியைத் தூண்டுவதையே வழக்கமாகக் கொண்டது இக்கட்சி. அதனால்தான் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டபோது அவரை மன்னித்து விட்டுவிட வேண்டும் என்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் திக் விஜய் சிங் சரியான பதிலடி கொடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றம் செய்த மற்றவர்களைத் தூக்கில் போடவேண்டும் என்று சொல்லும் பாரதீய ஜனதா தலைவர்கள், இந்த மாதிரி சாமியார்களை மன்னித்து விட வேண்டும் என்று கூறுவது இரட்டை நாக்கு வாதம் என்று கூறியுள்ளார். இந்துத்துவாக்கள் இப்படி யென்றால், சாமியார்களின் பிரதிநிதிபோலக் கருத்துக் கூறியுள்ளார் வாழும்கலை ரவிஷங்கர். பொது வாழ்வில் பிரபலமாக உள்ளவர், தவறு செய்துவிட்டதாக எண்ணினால், மக்களிடம் தவறை ஒப்புக் கொள்ளலாம். அப்படிச் செய்தால், கண்டிப்பாக மக்கள் மன்னிப்பர்; மறக்கவும் செய்வர்.- இது டிவிட்டரில் அவர் பதிந்த கருத்து.

எப்படி இருக்கிறது கதை? பொது வாழ்வில் இருப்பவர்கள்தான் மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள். அவர்களுக்குத் தவறு செய்யும் எண்ணமே வரக்கூடாது. அப்படித் தவறு இழைத்தால் அவர்களைத் தண்டிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்குத் தவறு செய்யும் எண்ணம் வராது. சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதல்லவா. இப்படி மக்களைச் சமமானவர்களாகக் கருதாமல் ஆளுக்கொரு நீதி சொல்வதற்குப் பெயர் மனு நீதி. அதனைக் கொண்டுவரத்தான் இந்துத்துவாக்கள் துடிக்கின்றன. இந்த மறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்த மோடி என்ற படு யோக்கியரைக் களம் இறக்குகிறார்கள். அந்தப் புண்ணியர் ஆளும் மாநிலத்தில்தான் இந்த ஆசாராம் பாபு ஆசிரமம் அமைத்து சேவை புரிந்துவந்தார்.

எந்தப் பிரச்சினை என்றாலும் கருத்துச்  சொல்வதை அண்மைக்காலமாக வழக்கமாக்கிக் கொண்ட மோடி மகான், தன் மாநிலத்திலேயே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த ஆசாராம் பாபு கைது குறித்து வாய் திறக்கவில்லையே ஏன்? மோடியைத் தூக்கிப் பிடிக்கும் சுத்த சுயம்பிரகாச ஊடகங்கள் இது பற்றி எழுதுவதில்லையே ஏன்? அரசியலில் ஊழலை ஒழிப்போம் என்ற திடீர் ஞானோதயம் பெற்ற அன்னா ஹஜாரேக்கள், அரவிந்த் கெஜ்ரிவால்கள் எங்கே போனார்கள்? டெல்லி பேருந்தில் ஒரு இளம்பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தபோது கொதித்து எழுந்த இளைஞர்களில் ஒருவர் கூட தெருவுக்கு வரவில்லையே?

தெரிந்துகொள்ளுங்கள், இதுதான் இந்தியா! இங்கே மனங்களிலேயே இந்து மத விஷவித்து ஊன்றப்பட்டுள்ளது. மத உணர்வைத் தாண்டி மனிதம் குறித்த உணர்வு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. இன்னும் இந்த மதத்தால் எவ்வளவு கொடுமைகளை இந்த நாடு காணப்போகிறதோ?

– அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *