இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினரின் மேற்பார்வையில், அல்லது கண்காணிப்பில் உள்ள பல திருமண மண்டபங்களை நாத்திகர்களுக்கு நிகழ்ச்சி நடத்த வாடகைக்குத் தரக் கூடாது என்பதாக இந்து அறநிலையத் துறையினர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன!
இது மிகவும் கண்டனத்திற்குரியது, குடிமக்களின் அடிப்படை உரிமையான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரைப்படி அரசியல் சட்ட விரோதமான நடவடிக்கை ஆகும்!
கொராடச்சேரி அருகில் உள்ள கண் கொடுத்த வனிதம் என்ற ஊரில் உள்ள ஒரு மண்டபத்தில் எனது நிகழ்ச்சி, அவ்வட்டார திராவிடர் விவசாயிகளின் -_ சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ந்தது; அதை மனதில் வைத்துச் சிலர் அனுப்பிய தகவலின் அடிப்படையில் இதுபோன்ற சுற்றறிக்கையைத் தமிழக அரசு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. மதச் சார்பற்ற நாடு (Secular State) என்று அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, இது ஒன்றும் இந்து நாடு அல்ல; (நேப்பாளத்தில் மட்டும்தான் உலகின் ஒரே இந்து நாடு இருந்தது; அதுவும் காலாவதி ஆகி, அங்கே மாவோயிஸ்டுகள் கூட்டணி அரசு _- ஆட்சி நடைபெற்று வரும் நிலை!)
எந்த அடிப்படையில் நாத்திகர்களான திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகளுக்கு இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மண்டபம் தரக் கூடாது என்று தமிழக அரசால் கூறப்படுகிறது என்பது நம்மால் புரிந்து கொள்ளப்பட முடியவில்லை.
இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை என்பதோ, இந்த ஆட்சியோ, இந்து முன்னணியின் கிளை ஸ்தாபனம் அல்ல; ஜனநாயகப்படி, அனைத்து மக்களாலும் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி.
இந்து அறநிலையத்துறையின் வேலையும்கூட, பக்தியைப் பரப்புவதோ, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ அல்ல.
தணிக்கைத்துறை, கோவில் சொத்துக்களை தனியார் கொள்ளையிலிருந்து பாதுகாத்து, வரவு – செலவுகளைத் தணிக்கை செய்யும் வேலையே தவிர, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ, அதைக் காப்பாற்றும் வேலையோ அல்ல. 1923 முதல் பனகல் அரசர் பிரதமராகவிருந்த நீதிக் கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் பற்றிய விவாதத்தைப் பார்த்து தெளிவடையட்டும்!
மேலும், இந்து மதத்திலேயே நாத்திகம் என்பது ஒரு பிரிவு என்பது தத்துவ ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டதேயாகும்.
சார்வாகர்கள் _- பிரகஸ்பதிகள் இராமனுக்கு மந்திரியாக இருந்ததாக இராமாயணத்தில் கூறப்பட்ட ஜாபாலி போன்றவர்கள் நாத்திகர்கள் ஆவர்!
கடவுள் உண்டு என்பவரும் ஹிந்து மதத்தில் இருக்கலாம்; கடவுள் இல்லை என்று கூறும் கடவுள் மறுப்பாளரும்கூட இந்து மதத்தில் இருக்கலாம்.
இது சட்டப்படி _- ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகி சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார்களே, அதுவே இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தச் சட்டமேயாகும்.
இந்தத் திருமணங்களில், கடவுளுக்கோ, இந்துமத சாங்கிய, சம்பிரதாயங்களுக்கோ, சடங்குகளுக்கோ இடமே இல்லை; என்றாலும் இந்தச் சட்டப்படியான சுயமரியாதைத் திருமணங்கள் _- ஹிந்து கோவில்களின் திருமண மண்டபங்களில் நடைபெற்று வருகின்றன என்பது இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்குத் தெரியாமற் போனதேன்?
திருமண மண்டபங்கள் சமூகக் கூடங்கள் (Community Halls) என்பதால் அனைவரும் அதைப் பயன்படுத்தும் உரிமை உடையவர் ஆவர்.
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலுக்குரிய (இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள) கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் எத்தனையோ சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளனவே.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஆத்திகர்கள் _- நாத்திகர்கள் உட்பட கலந்து கொண்டுள்ளனரே!
இந்தச் சுற்றறிக்கை கோவில் நிருவாக அதிகாரிகள் -_ பொது மக்கள் இடையிலே வீணான சர்ச்சையை _ தகராறை உருவாக்கக் கூடியதாகும்.
இந்தச் சுற்றறிக்கையை அறநிலையத்துறை திரும்பப் பெறுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கை. இல்லையேல் நீதிமன்றத்தில் சட்டப்படி பகுத்தறிவாளர்கள் இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தால் சட்டத்தின்முன் இந்த ஆணை நிற்காது.
எனவே அரசும், இந்து அறநிலையத்துறையும் கோவில் உண்டியல் காணாமற் போவதையும் திருட்டுப் போகும் கடவுளர் _- கடவுளச்சிகளைப் பாதுகாப்பதையும் கவனத்தில் கொண்டு போதிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். காஞ்சிபுரம் தேவநாதன் குருக்கள் ஈடுபட்ட கர்ப்பக்கிரக லீலைகள் நடைபெறா வண்ணம் தடுக்கவும் ஆன முயற்சிகளில் இறங்குவது நல்லது; தேவையும்கூட!
நியாயத்துக்கும், சட்டத்துக்கும் விரோதமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்பதே முதற்கட்டமாக நமது வேண்டுகோள்!
– கி.வீரமணி,
ஆசிரியர்