– மு.நாகேந்திர பிரபு
ஆதரிக்க யாரும் இல்லை. அவனும் ஒரு பிள்ளை _ அவளின் பிள்ளை _ வேசியின் பிள்ளை. பலரும் இவன் தாயின் மஞ்சத்தில், இவன் மட்டும் இரவின் தஞ்சத்தில். வெளியில் செல்ல வெட்கப்பட்டான் _ சொல்லவும்தான், தான் ஒரு வேசியின் மகனென்று. ஊரார் ஒதுக்கிப் பார்த்தனர் இவனை, ஓரக்கண்ணால் பார்த்தனர் இவன் தாயை. தவறு இதுவென்று அறிந்தான். தாய் என்று அழைக்க மறுத்தான். அவள் அன்று பாலூட்ட மறக்கவே இல்லை. இன்று சோறூட்டவும்தான்.
எதிலும் நாட்டமில்லை, நிற்கும் ஓட்டமில்லை. போராட்டம் ஆனது அவனது வாழ்க்கை, போர் ஆட்டம் ஆனது அவளது வாழ்க்கை. பத்து மாதம் இரவும் பகலும் மட்டுமே அவளோடு இவன் இருந்தான். அதிலும் சொற்பமாய் அறிந்தது அவளின் இதயத் துடிப்பு மட்டுமே. உணர்த்த வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால், அவளின் அருகில் வர மறுத்தான். தூக்கத்தைத் தொலைத்த இவனது தாயும், தூங்காமல் தவித்த இவனும் ஏறக்குறைய ஒரே மனநிலையில். மாற்றம் என்று ஒன்று உண்டா? மகனை மரணத்தின் பிடியிலோ, வறுமையின் கொடுமையிலோ அனுமதிக்க விரும்பாத தாய். என்றாவது ஒருநாள் தன் மகன் தன்னை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையில் காலத்தின் பிடியிலே கச்சிதமாய்ப் பொருந்திப்போன அவளது வாழ்க்கை. தனிமையில் தன்னைச் சிறைப்படுத்திக்கொண்டு தனக்காக எந்த அங்கீகாரமும் இல்லாமல் அரங்கேற்றம் எனக் கழிந்த அவளது இரவுகள். உறவுகள் என்னவோ நாட்கணக்கில் தான். வந்தால் உதித்து, போனால் மறையும். இது வாடிக்கை, ஒரு சிலருக்கு வேடிக்கை.
அவள் கால்கொலுசின் சப்தத்தையும் தாண்டி காதுபடப் பேசும் சமூகம். என்ன இவள்? இவளும் ஒரு பெண்ணா? இதுவும் ஒரு வாழ்க்கையா? இவள் வாழ்வதைக் காட்டிலும் சாவதே மேல். ம்ம்ம்… இன்று சாகக் காரணம் சொன்ன உலகம், அன்று அவளுக்கு வாழ வழி சொல்லவில்லை _ வழி விடவும் இல்லை. தன்னை மற்றவர்களில் தேடிப் பார்க்க முயலும் மனிதர்கள். நொடிகளில் யுகங்களைக் கண்டாள். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தன்னை மறைத்துக்கொண்டு தன் மகனுக்காக மட்கிக்கொண்டிருந்தாள்.
அவனின் சின்னச் சின்ன வளர்ச்சிகளையும் மாற்றத்தினையும் அவள் அங்கீகரிக்கவோ பாராட்டவோ தவறியதே இல்லை. இவன் தன் மகனென்று சொல்ல அவளும் முன்வரவேயில்லை.
கனவுகளோடு காலத்தைச் சுமந்தவள் _ இல்லை கடந்தவள். என்னன்னவோ கனவுகள். ஒருவேளை இவன் படித்து வந்தால்கூட இத்தனை பட்டங்கள் பெற மாட்டான். இவன் நடப்பதற்கு முன்னரே அவள் ஓடியவள். சொல்லவா வேண்டும்? ஓடிக்கொண்டிருக்கிறாள்.
காலங்கள் மாறாதா என்ன? மாறத்தான் செய்தது, அவனது கோலமும் தான். வாலிபப்பருவம் வந்தடைந்தது. நல்ல வேலையில் அமர்ந்தான். விரும்பி மணந்தான் ஒரு விதவைப் பெண்ணை. இவன் சென்று நடத்தியதுதான் தனிக்குடித்தனமாம். ஏதோ உலகையே வென்றவன் போலும் உள்ளூரப் புன்னகைத்து உலாவத் தொடங்கினான். ஏற்றுக்கொள்ள சமூகம் தயாராக இருந்தது. இவனும் கூட தன்னை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே வைத்திருந்தான். இவன் கொடுத்து வைத்தவன். ஆமாம், தன்னைத் தேடி வந்தவர்க்கும், தேடுவோர் எனத் தெரிந்தவர்க்கும் இவன் தேடிச் சென்றுதான் கொடுத்தான்.
எப்படியெல்லாம் இவன் வாழவேண்டும் என்று கனவு கண்டானோ அப்படியெல்லாம் வாழ்ந்து பழகிவிட்டான். ஆடம்பரமான வாழ்க்கையையும், பொருள் கொடுக்கும் அத்தனை சுகங்களையும் அனுபவித்துவிட்டான். கலை நயம் படைத்த இவனது வாழ்க்கை.
இனி தேடுவதற்கும் அடைவதற்கும் ஒன்றுமே இல்லை என்ற ஒரு நிலை. உள்ளூர இவனது தாயின் அவல வாழ்க்கை மட்டும் வலியினைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
எல்லோர்க்கும் தொடங்கும் முதல் வாழ்வியல் மதிப்பு குடும்பம். அது இவனுக்குத் தடைபட்டுப்போனதும், அது தொடர்ந்த அத்தனை மதிப்பும் அடிபட்டுப்போனதும் ஆறாத ரணமாக இருந்தது.
நானும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளத் தக்கவனாக ஆகமாட்டேனா என்ற ஏக்கமும் அது கொடுத்த ஊக்கமும்தான் இன்றைக்கு இவனை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகத்திற்கு.
நிகழ்காலத் தோரணைக்குள் கடந்தகாலம் மறைந்து கொண்டிருந்தது. இவனால் மறக்கவே இயலாத கசப்பான கடந்த காலம். என் தாய் என்று நான் எப்படிச் சொல்வேன்? எதிர்காலத்தில் என் கடந்த காலத்தை எங்கிருந்து தொடங்குவேன்? எப்படி என்னை நானே அறிமுகம் செய்துகொள்வேன்? என்று பல குழப்பங்களோடு எதிர்கொண்ட நாட்கள்.
தன் தாயைப் போலவே தனிமரமாய், வேரும் இல்லாமல் விழுதும் தாங்காமல் தன் கைக்குழந்தையோடு அனாதையாய்ச் சுற்றித் திரிந்தவள் இவனின் மனைவி.
தோள் கொடுத்தான் _ எழுந்து நின்றாள். அடி நடந்தான் _ அடி தொடர்ந்தாள். தன் வாழ்க்கைக்கு ஓர் ஆதாரம் வந்ததை உணர்ந்தாள். தன் வாழ்க்கையைக் கேள்விக்குறிகளோடும், தொடர் புள்ளிகளோடும் ஒத்துப்பார்த்தவளுக்கு இவளின் கணவன் உயர்ந்தவனாக _ அதிசயப் பிறவியாகத்தான் தெரிந்தான். மலர்ந்த இதழ்கள் பூக்களில் மட்டும் இல்லை _ இவளின் புன்னகையிலும் தவழ்ந்தது.
உறங்கிக் கிடப்பவனுக்குப் பல்லக்கும், பஞ்சு மெத்தையும், பாயும் ஒன்றுதானே? ஒட்டாமல் இருந்தாலும் தாமரை இலையில் தண்ணீர் நிற்கும்தானே! இவளின் எண்ணப் போராட்டங்களும் அப்படித்தான்.
இன்று அரவணைத்துப் பார்க்க இவன் இருந்தாலும், இவளுக்கும் ஆரம்ப நாட்கள் ரணங்களாகத்தான் இருந்தன. தன் கைக்குழந்தையோடு காலத்தை எதிர்த்துப் போராடிய நாட்கள் அடிக்கடி இவளின் நினைவுக்கு வந்து போனது. மறக்க நினைப்பதும்கூட ஒரு விதத்தில் நினைத்துப் பார்ப்பதுதானே? இவள் தினம் தினம் நினைக்கத் தவறுவதில்லை.
விதவைப் பெண்ணாய் இருந்தவள் அன்றோ? தன் கடந்த காலத்தை நினைத்து சில நேரங்களில் அழுதுவிடுவாள். அப்பொழுதெல்லாம் ஆறுதலாய் அருகில் இவன் இருப்பான். அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தற்செயலாய் இவள் கூறிய வார்த்தை, தனிமரமாய் இருந்திருந்தால் தற்கொலைதான் புரிந்திருப்பேன். மரநிழலில் மகனிருக்க மானமும்கூட விற்றிருப்பேன் என்றாள். ஆடிப்போய் விட்டான். இவனது ஆரம்ப கால நாட்களை அப்பொழுதுதான் உணர முற்பட்டான். தன் கடந்த காலத்தை, நிகழ்காலத்தில் பார்த்தான். திருந்தி நடந்தான் _ திரும்பி நடந்தான். வழியில் உயிருக்குப் போராடும் இவனது தாய். அம்மா என்று கட்டி அணைத்தான். இத்தனைக் காலங்களுக்குப் பிறகு மிருதுவாகத் தொட்டது இவனின் கையிரண்டு மட்டுமே. அவள் உணர்ச்சிகளை விவரிக்கத் தெரியவில்லை. என்ன என்று சொல்லத் தெரியாது, அழுவதா மன்னிப்புக் கேட்பதா என்று அறியாத ஒரு நிலை. உதட்டில் மட்டும் புன்னகை பூத்துக் குலுங்கியது. கைகளால் வருடி கண்களைச் சிமிட்டி புதிதாய்ப் பார்ப்பது போல் பார்த்தாள். முத்தமிட மட்டும் விரும்பவில்லை. அருவருப்பு என்றது அவளின் எண்ணம். இனியும் என்னால் உனக்கு இழிவு வேண்டாமடா, உறங்கி விடுகிறேன் எனத் தலை சாய்ந்தாள்.
அதன் பிறகு அவள் விழிக்கவே இல்லை. விழிக்கவும் விரும்பவில்லை. அள்ளித் தாங்கி அரவணைத்து அவன் வாழும் இடம் எடுத்துச் சென்றான். ஆரவாரமாய் நடந்த இடைப்பட்ட வாழ்க்கை இறுதியில் அமைதியாய் முடிந்த பரிதாப நிலையினை நினைத்துப் பார்த்தான்.
பிரம்மாண்டமாய் நடந்தது ஊர்வலம். தினம் தினம் கசங்கிய அவள் சூடிய பூ முதல் முறையாக வாடியது. நாட்கள் மட்டுமே நகர்ந்தது. நிரந்தரமாய் இதயம் கனத்தது.
அரங்கேறட்டும், மறுமணத் திருமணங்கள்!