கோழிச்சண்டை மரபு – ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்

ஆகஸ்ட் 16-31 - 2013

ந்தியஜ என்கிற சமஸ்கிருதச் சொல் உண்டு. அந்தச் சொல்லுக்குப் பொருள் கடைசி இனத்தைச் சேர்ந்தவன்; கடைக்கோடியில் இருக்கிறவன். அவன் யார் என்றால் மலைவாழ் மக்கள். மலைவாழ் மக்களும் ஒரு கடைக்கோடி மக்கள். ஆனால், திராவிட நாகரிகத்தைப் பொறுத்தவரை மலையில் இருப்பவனே தலைவன். அவர்கள் கடவுள் மலையில்தான் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்றைக்குக்கூட மேட்டுநாயக்கன் குடி மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. எவன் எவனெல்லாம் மேட்டில் இருக்கிறானோ அவன் வந்து மேட்டுநாயக்கன். ஆனால், சமஸ்கிருத மொழியில் மேட்டில் இருப்பவன் கடைசி.

இதை ஒப்பிட்டு இந்தக் கட்டுரையைப் படித்தீர்களேயானால் தெரியும். திராவிட மொழிகளினுடைய புரிதலில் மேற்கு எப்படி உயர்ந்ததாக இருக்கிறது? கீழ் எப்படி அதன் பின்னால் இருக்கிறது? நிலத்தினுடைய உயர்வு தாழ்வைப் பொறுத்துத்தான் இருக்கிறது. ஆனால் அதேநேரத்தில் மனிதர்களை மய்யமாகக் கொண்டு முக வனப்பு மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பது முகவனப்பு, வண்ணம், அவனுடைய நிறம் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இருக்கிறது. அதைப்போலவே அது மனிதனை மய்யமாக வைத்து திசைகளைப் பார்க்கிறது. இதுமட்டுமே, புவியை மய்யமாக வைத்து திசையைப் பார்க்கிறது என்ற வேறுபாட்டின் அடிப்படையில் இப்படி ஒரு வித்தியாசத்தைப் பார்க்கிறோம். திசை கோட்டைப்பகுதி, கீழ்நகர்ப்பகுதி,. திசை, உயரம், பொருள் சமூகம் ‘Dems Martric’ என்று பெயர் அளித்திருக்கிறேன். இதற்கு“Distance elavation and material and social matric items” இதனுடைய அடிப்படை திராவிட நாகரிகத்தினுடைய கூறுகள் என்பதை இந்தக் கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்.

கோழிகள் சிந்துவெளி முத்திரை. எருது_இரண்டு கோழிகள் இது நகரத்திற்கான குறியீடு. இதற்கு அருகில் இரண்டு கோழிகளினுடைய சின்னம் இருப்பதை வைத்து மகாதேவன் கோழிகள் நகர் என்று சொல்கிறார். நான் இதை கோழிகள் நகர் மட்டும் கிடையாது, கோழி வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு பறவை. எல்லா கிராமங்களிலேயும் இருக்கிறது. எல்லா ஊர்களிலேயும் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது, இந்த ஊருக்கு மட்டும் கோழியினுடைய பெயரை ஊர்ப் பெயராக வைக்க வேண்டும் என்று சொன்னால், இந்தக் கோழிக்கு ஏதாவது ஒரு சிறப்பு இருக்க வேண்டும். அந்தக் கோழிக்கு கோழியூர்_ன்னு பேர் வைக்க முடியும். இல்லையென்றால் கோழியூர் என்று எல்லா ஊர்களுக்கும் பெயர் வைக்கலாம் அல்லவா? எல்லா ஊரிலயும் கோழி இருக்கு. அந்த வகையில் இந்தக் கோழியைக் கூர்ந்து பார்த்தீர்களேயானால் இதனுடைய வால் தூக்கலாக செங்குத்தாக இருக்கும். கால் வந்து தரையில் படாமல் சண்டை போடுகிற கோழியாகத்தான் இருக்கும். அதுவும் இரண்டு கோழி என்கிறது எப்பவுமே ஒரு சண்டைக்கோழியாகத்தான் இருக்கும். சோழர் நாணயம் கி.மு. முதலாம் நூற்றாண்டு கோழி நகரம். உறையூரினுடைய இன்னொரு நகரம் கோழி நகரம். யானையோடு ஒரு கோழி சண்டை போடுகிற காட்சி. இப்பக்கூட திருச்சிக்குப் பக்கத்துல உறையூரில் மாரியம்மன் கோவிலில் யானையை வந்து கோழி அடிக்கிற மாதிரி ஒரு சிற்பம் இருக்கும். கொங்கு நாட்டுப் பகுதியில் பார்த்தீர்களே யானால் காடை யானையை அடிக்கிற மாதிரி ஒரு சிற்பம் இருக்கும். ஆக ஒரு வீர கோழி மரபு என்பது சிந்துவெளி நாகரிகத்தினுடைய ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் கூட கோழிச் சண்டை மரபு என்பது சிலிர்த்தோங்கி இருப்பது பாகிஸ்தானுடைய சிந்துப் பகுதி. அதைவிட்டால் கருநாடகத்தினுடைய குடகுப் பகுதி. மற்றும் தமிழ்நாடு. ஆடுகளம் என்கிற ஒரு திரைப்படம் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் தயாரித்து இருக்கவே முடியாது. ஏனென்றால், அதற்கான பண்பாட்டுச் சூழல் வேறு இடங்களில் இல்லை. இந்தப் பண்பாட்டில் தான் கோழிச் சண்டையை வைத்து இரண்டரை மணி நேரம் படம் எடுக்க முடிகிறதேன்னு புரிஞ்சிக்கிடவே முடியும். இன்னொரு இடத்தில் போய் இந்தப் படம் எடுத்தோமேயானால் இதை understand- பண்ணக்கூட முடியாது. ஆக மொகஞ்சதாரோவில் இருந்து, இன்றைக்கு வரைக்கும் தொடர்கிற ஒரு கோழிச் சண்டை மரபு.

மேச்சேரி கோழி என்பது அய்ந்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு. ஈங்களூர், அரசலாபுரத்தில் இருக்கிறது. பொற்கொற்றி என்று பெயர் இருக்கிறது. இந்தக் கோழிகள் சண்டை போட்டுச் செத்த கோழிகள். இதற்காக தனியாக நடுகல் வைக்கப்பட்டுள்ளது. அய்ந்தாம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டுகளில் இறந்துபோன வீரச்சேவல்களுக்காக தனியாக நடுகல் வைத்தது. இந்தியத் துணைக்கண்டத்திலேயே இறந்து போன சேவலுக்காகப் பெயர் வைத்து ஒரு நடுகல் எழுப்பிய ஒரே பண்பாடு தமிழ்ப் பண்பாடு மட்டும்தான்.

ஆக இந்தப் பண்பாட்டினுடைய தொடர்ச்சியை மொகஞ்சதாரோவில் இருந்து இன்றைக்கு இருக்கக்கூடிய ஆடுகளம் திரைப்படம் வரை இது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி என்று நான் கருதுகிறேன்.

தமிழ்நிலத்தில் நால்நிலம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். ஆனால், பாலைத் திணை உள்ளிட்ட திணை அய்ந்து. சங்க இலக்கியத்தில் நிறைய விஷயங்கள் சங்க இலக்கிய கால மக்களுக்கே புரியாமல் இருக்கிறதா சங்கப் புலவர்கள் விளக்குவார்கள். சங்க காலத்தை ஒட்டிய புலவர்கள்  மிதியாச் செருப்பு என்று கூறுவர். மிதியாச் செருப்பு என்றால் செருப்பு என்பது ஒரு மலை. அந்தச் செருப்பு மலையைப் போய் மிதி, முடியாது. ஏன்னா இந்தச் செருப்பு வேற, இது மிதிக்கிற செருப்பு.

அதேமாதிரி குதிரை என்பது ஒரு மலை. ஓடாக்குதிரை என்று கூறுவான் சங்க இலக்கியப் புலவன். இது குதிரைதான். ஆனால் ஓடாத குதிரை. ஆக, ஓடாக் குதிரை, மிதியாச் செருப்பு, ஏறாத ஏணி. ஏணி என்பது ஊரு. ஏறா _ஏணி இப்படிப்பட்ட கலை, கலைநயங்கள். ஏனென்றால், அந்தக் காலத்திலேயே இந்தப் பெயர்களெல்லாம் பழைய பெயர்களாகி விட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாலை நிலப்பாடல்கள்தான் சங்க இலக்கியப் பாடல்களிலேயே அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட திணை. பாலைத் திணைப் பாடல்களே சங்க இலக்கியத்தில் அதிகம். ஆனால், பாலை நிலம் என்றால் என்னவென்று மக்களுக்குப் புரியாது. ஏனென்றால், பாலை நிலம் இங்கு இல்லை என்ற காரணத்தினால்தான்.

குறிஞ்சியும்_முல்லையும், முல்லையும்_குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல் இயல்பு இழந்து பாலை என்பதோர் வடிவம் கொள்ளும் என்று விளக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது.

தொல்காப்பியம் தமிழர்களின் முதல் இலக்கணம். அந்தத் தமிழ் இலக்கணத்தில் ஒட்டகக் கன்று என்று ஒட்டகத்தினுடைய குட்டியைக் கூறுவதுபோல் யானையினுடைய குட்டியை எப்படிக் கூப்பிடுவது? மானினுடைய குட்டியை எப்படிக் கூப்பிடுவது? பறவையினுடைய குஞ்சை எப்படிக் கூப்பிடுவது என்றெல்லாம் சொல்லும் போது ஒட்டகக் கன்று என்று இலக்கணம் சொல்லுவார் தொல்காப்பியர். ஒட்டகம் தமிழ்நாட்டு விலங்கல்ல,

…. ஆங்கண்
குறும்பொறை யுணங்குந் ததர்வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத் தல்குபசி தீர்க்கும்
கல்நெடுங் கவலைய கானம் நீந்தி
_ அகநானூறு 245, திணை _ பாலை

இதை எழுதிய புலவன் மதுரைப் புலவன்  மருதனிளநாகன் இந்தப்புலவன் சொல்கிற காட்சி தொடர்பாகவே சுமார் ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்திருப்பேன்.

இராஜஸ்தானில் நான் ஜெய்சால்மீர் கோவிலுக்குச் சென்றிருந்த போது அங்கிருக்கிற ஒட்டகத்துடன் பழகும் நபர்களைக் கூப்பிட்டுப் பேசி இருக்கிறேன். உலக நாடுகளின் ஒட்டக இலக்கியம் பற்றிப் படித்தேன். ஒட்டகத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்தவர்களிடம் தொடர்பு கொண்டேன். அப்போது வணிகர்கள் ஒட்டகத்தின் மீது சுமையை ஏற்றிக்கொண்டு போகிறார்கள். சுமையை ஏற்றிக்கொண்டு செல்வதை Draft Animal என்று கூறுவார்கள். அதாவது பளுசுமக்கும், சுமைதூக்கும் அல்லது பாரம் இழுக்கும்  மிருகம். இப்பொழுது நாம் மாட்டு வண்டியில் வண்டியைப் பூட்டி இழுத்துக்கொண்டு செல்வது போல் சுமையைத் தூக்குவதற்கும் இழுப்பதற்கும் ஒட்டகம் பயன்படுத்தப்படுகிறது. வணிகர்கள் ஒட்டகத்தில் சுமையை ஏற்றிக்கொண்டு செல்லும் போது வழியில் அந்த ஒட்டகத்திற்குப் பயங்கரமாக பசி வந்துவிடும். பசி என்றால் அப்படிப்பட்ட ஒரு பசி. பசியைத் தீர்த்துக்கொள்வதற்கு எதுவுமே கிடைக்காமல் இறுதியில் இறந்து போன விலங்குகளின் சிதறிக்கிடக்கும் பழைய எலும்புகளைத் தின்று பசியாறும். ஒட்டகம்  எலும்பைத் தின்னுமா என்ற கேள்வியோடு ஒட்டகத்தை வளர்ப்பவரிடம் இராஜஸ்தானின் பாலைவனத்திலும் மற்றும் உலக அரங்கில் ஒட்டக ஆராய்ச்சி செய்பவர்களிடமும் தொடர்பு கொண்டேன். இணையத்திலும் பல முறை தேடினேன். அதிலிருந்து தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒட்டகம் எலும்பு சாப்பிடும். ஆனால் எப்போது சாப்பிடும் என்றால், 6 அல்லது 7 நாட்கள் தொடர்ந்து எதுவுமே சாப்பிடாமல் இருக்கும் போது சாப்பிட ஒன்றுமே இல்லை என்றால், புல் இலை, முள்ளுச்செடி கிடைத்தால் முள்ளையும் கடித்துச் சாப்பிட்டுவிடும், மரத்தின் பட்டையையும் சாப்பிடும் என்ற செய்தியை ஒட்டகம் வளர்ப்பவர்கள் மட்டும்தான் அறிந்துள்ளனர்.

வடமொழிகளில் இருக்கக்கூடிய ஒட்டகம் தொடர்பான இலக்கியங்களை எல்லாம் எடுத்துப் படித்தேன். சமசுகிருதத்தில் ஒட்டகத்தின் உருவமைப்பு பற்றி எழுதப்பட்டுள்ளது. ஒரு ஒட்டகத்தை என்ன விலை கொடுத்து வாங்கலாம் என்பதற்கே நூல் உள்ளது, ஒட்டகத்தின் கால் எப்படி இருக்கவேண்டும், முன் கால் இப்படி இருக்கணும், பின் கால், முதுகு எப்படி இருக்கவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டகம், எலும்பு சாப்பிடும் என்ற செய்தி பதியப்படவில்லை. சங்க இலக்கியத்திற்கு ஒட்டகம் தொடர்பில்லை. தமிழ் நிலத்திற்குப் பாலை நிலம் சொந்தமில்லை. ஆனால், இந்தியாவின் ஒட்டகம் எலும்பு சாப்பிடும் என்ற ஓர் உண்மையை, ஒட்டகம் பாரம் தூக்கும் விலங்காகப் பயன்படுத்துகிற சூழ்நிலையைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

– (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *