இருட்டில் திருட்டு ராமன் – 4

ஆகஸ்ட் 16-31 - 2013

பாபர் மசூதியில் இராமன் ந்ழைந்தது எப்படி?

– சு.அறிவுக்கரசு

நாயர் கதை

திருவாங்கூர், கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் மட்டுமல்லாது(-?) நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக ஆதிக்க ஜாதியாக விளங்கியது நாயர் ஜாதி. நிலமும் பணமும் இருந்ததால், படிப்பதற்கு ஆர்வம் காட்டாதவர்களாக நம்பூதிரிகள் இருந்தனர். நாயர்களோ, படிப்பில் நாட்டம் காட்டினர்.

நிறையப் பேர் படித்துப் பதவிக்கு வந்தனர். பெண்களும் படித்தனர். என்றாலும் நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்குப் பயந்து அடிமை வாழ்வு வாழ்ந்தனர். நாயர் திருமணம் செய்துகொண்டால், அவன் மனைவியுடன் முதல் இரவைக் கழிக்க நம்பூதிரிகள் விருப்பப்படுவர்.

நாயர் விட்டுக் கொடுப்பர். உன் மனைவி அழகாக இருப்பாளாமே, என் வீட்டுக்கு அனுப்பி வை என்று நம்பூதிரி கேட்பானாம். நாயர் அனுப்பி வைப்பானாம். இதைவிடக் கேவலம், நான் இந்த நம்பூதிரிக்குப் பிறந்தவன் என்று பெருமையுடன் கூறிக் கொண்ட நிலைமையும் இருந்ததாம்! கோழிக்கோடு மன்னர் ஜாமரின் குடும்பப் பெண்களுக்கே முதல் கணவனாக நம்பூதிரிகள் இருந்தனர் என்பது வரலாறு.

 

இந்த அசிங்கத்தைப் போக்கிக் கொள்ளும் மருந்தாகவோ என்னவோ, நம்பூதிரிகள் நாயர்களுக்கு ஒரு ஜாதிப் பெருமையைத் தந்தனர். ஈழவர்கள் நம்பூதிரிக்கு 38 அடி தூரத்தில்தான் நிற்கவேண்டும் என்று விதி. நாயருக்கு 18 அடி தூரத்தில்தான் நிற்க வேண்டும் என்று விதித்து நாயர்களுக்கும் பெருமை தந்தனர். அதுபோலவே புலையர் 24 அடி தூரத்திற்கு அப்பால்தான் நிற்கவேண்டும் என்றும் விதித்தனர். இதனால் நாயர்கள் பார்ப்பனர்களுக்கு விசுவாசம் காட்டினர்.

அற்புதம் நடக்கப் போகுது

அப்பேர்ப்பட்ட கே.கே..நாயர் கலெக்டராக இருந்த நேரத்தில் ராமன் கல்யாண உற்சவம் தொடங்கி நடந்தது. உற்சவ முடிவில் மாபெரும் அற்புதம் ஒன்று நடக்கப் போவதாக ராமாயண மகாசபாவினரும் இந்துமகா சபாவினரும் செய்தியைப் பரப்பி விட்டிருந்தனர். ஏமாந்த சோணகிரி இந்துக்கள் ஆயிரக்கணக்கில் அயோத்தியாவில் கூடினர். பக்கத்து ஊர்களிலிருந்து ஏராளமானோர் வந்து போயினர். குழந்தை ராமன் பாபர் மசூதிக்குள் தன் ஜென்ம இடத்தில் குந்தப் போவதாக எதிர்பார்த்தனர். 4.12.1949இல் கல்யாண உற்சவம் முடிந்தது. ஒரு அற்புதமும் நடக்கவில்லை. குழந்தை ராமன் தோன்றவில்லை. பாபர் மசூதிக்குள் நுழையவில்லை.

தாம் ஜனித்த இடத்தில் உட்காரவும் இல்லை. இந்துக்கள் ஏமாந்தனர்! ஏமாற்றப்பட்டனர் எத்தர்களால்! நாயர், டட் எதிர்பார்ப்பு ஊசி குத்தப்பட்ட பலூனாக உடைந்து போனது. ராம உற்சவத்தில் துளசிதாசன் எழுதிய ராம சரித மானஸ் ஒன்பது நாளுக்குப் பாராயணம் செய்யப்படும். அற்புதம் நிகழப்போகும் ஆண்டு என்பதால் பாராயணம் நான்கு நாள்கள் நீட்டிக்கப்பட்டு 13 நாள்கள் நடைபெற்றது. ராமன் வரவில்லை. நாமம் சாற்றப்பட்டது. பணம் பிடுங்குவதற்காக எதையோ புளுகியிருக்கின்றனர் என்ற உண்மையை இந்துக்கள் பகிரங்கமாகப் பேசினர். பைராகிகள் அவமானத்தால் தலைகுனிந்து பதுங்கினர். என்றாலும் கூடிவிட்ட மக்களுக்குச் சோறு பொங்கிப் போட்டனர். செலவுக்குப் பணமும் கொடுத்தனர். கஞ்சா புகைக்கவோ?

சதியில் கலெக்டர்

திரைமறைவில் இந்து மகா சபா, ராமாயண மகா சபா ஆள்கள் கலெக்டர் நாயரைச் சந்தித்துப் பேசினர். சீதாராம் தாஸ், ராம்பதரத் தாஸ், சியா கிஷோரி சரன், ராம்சுபாக் தாஸ், அபிராம் தாஸ் என்போர் பல்வேறு கோவில்களின் மகந்த்கள். இவர்களும் வேறு சிலரும் நாயருடன் பேசித் திட்டம் தீட்டினர். திருட்டுத்தனமாக குழந்தை ராமன் பொம்மையை பாபர் மசூதிக்குள் வைத்திட எப்பேர்ப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைச் செய்தாலும் தாம் கண்டுகொள்ளாமல் எல்லா உதவிகளையும் செய்து தருவதாக நாயர் உறுதி அளித்தார். பிறகு என்ன? சட்டம் தன் கண்களை மூடிக்கொள்ளும், கைகளை நீட்டாது, தங்களைத் தண்டிக்காது என்கிற உத்திரவாதம் மாவட்ட மாஜிஸ்திரேட்டின் வாயிலிருந்தே வந்துவிட்ட பிறகும் தயக்கம் ஏன்? என்கிற நிலைக்கு இரு சபாக்காரர்களும் வந்துவிட்டனர். திருட்டுத்தனமாகப் பொம்மையை வைக்கத் துணிந்து விட்டனர். ஆளைத் தீர்மானிக்கக் கூட்டம் போட்டனர், ரகசியமாக!

இதுதான் திட்டம்

1895இல் கட்டப்பட்ட மிகச் சிறியதான ஜம்பவந்த் கோவிலில் கூடினர். இந்தக் கோவிலின் மகந்து பல்ராம் தாஸ் தலைமையில் கூடிய கூட்டத்தில், கலெக்டர் நாயர் கலந்துகொண்டார். அபிராம் தாஸ், பரமஹம்ஸ், பிருந்தாவன் தாஸ் என்ற மூவரும் 22.12.1949 இரவு பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து ராமன் பொம்மையை அங்கே வைத்துவிடுவது என்று முடிவு செய்தனர். விடியற்காலை 4 மணி வரை அவர்கள் சப்தமில்லாமல் கிடக்க வேண்டும், பின்னர் விளக்கேற்றி, மந்த்ரம் கூறி, காண்டாமணியை உரக்க அடித்து ஓசை எழுப்பவேண்டும் என்பது திட்டம்.

மறுநாள் இந்துக்களை ஏராளமாகத் திரட்டிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு கோபால் சந்த் விசாரத் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கூட்டம் ஏராளமாகக் கூடிவிட்டால், அவர்கள் செய்த சட்டத்திற்குப் புறம்பான செயலைத் தடுக்க நிருவாகம் எதுவும் செய்ய இயலாது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுமே!

திட்டம் போட்ட மாதிரியே நடத்தி விட்டார்கள். எதுவுமே தெரியாத மாதிரி மாவட்ட மாஜிஸ்திரேட் நாயர் பசப்பி விட்டார். அதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்றால், 1949 டிசம்பர் முதல் 1992 டிசம்பர் 6 வரை பாபர் மசூதியில் வழிபாடு ஏதும் நடைபெறாமல் மசூதியாக இயங்காத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு அது இடிக்கப்பட்டு விட்டது. இடித்த குற்றவாளிகள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, ரிதம்பாதா முதலியோர் மீதான வழக்கு இன்னும் முடிவாகாமல் கிடக்கிறது.

காங்கிரசே காரணம்

சிறீ ராமஜன்ம பூமி கர ரத்த ரஞ்சித் இதிகாசம் (ராமன் பிறந்த இடம் பற்றிய ரத்தம் தோய்ந்த வரலாறு) எனும் நூல் ராம்கோபால் பாண்டே என்பவரால் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. அதில் 23.12.1949 இந்தியாவுக்கு மகோன்னதமான நாள். 400 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாளில்தான், ராமனின் பிறந்த இடம் மீட்கப்பட்டது. முதல் நாளிரவில் நடந்த சம்பவங்களைப் பார்த்தால் ராமனே இந்த மீட்பு நடவடிக்கைகளைச் செய்து தன் பிறந்த இடத்தைப் பெற்றான் என்றே கூறலாம் என்று எழுதுகிறார். இத்தகைய நடவடிக்கையை ராமன் எடுத்ததற்கு யார் மூல காரணம்? வல்லபாய் பட்டேல், கோவிந்த் வல்லப பந்த் போன்ற காங்கிரசுக்காரர்களே! இவர்களின் மறைமுக ஆதரவு தந்த துணிச்சலால் இந்துமகாசபா, அகில இந்திய ராமாயண சபா ஆள்கள் ராமன் பொம்மையை வைக்க முடிந்தது. நாயர், டட் போன்ற கருங்காலி அதிகாரிகளின் அயோக்கியத்தனமான நிருவாகம் பெருமளவில் உதவியது.

இருட்டில்… திருட்டுத்தனமாக

1934ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகைக்குப் பசு மாட்டை வெட்டித் தின்றார்கள் என்ற வதந்தி பரப்பப்பட்டது. அயோத்தியாவுக்குப் பக்கத்து ஊரான ஷாஜஹான்பூரில் இது நடந்ததாக வதந்தி. இந்துக்கள் இதற்காக அயோத்தியாவில் உள்ள பாபர் மசூதியைத் தாக்கினார்கள். அதன் விளைவாக மசூதியின் மேல் உள்ள கவிகைமாடத்தில் பெரும் ஓட்டையே ஏற்பட்டது. அப்போது மசூதியின் காப்பாளராக இருந்தவர் முகம்மது இசுமாயில். குழந்தை ராமன் பொம்மையைத் தூக்கிக் கொண்டு பாபர் மசூதிக்குள் நுழைந்த பண்டாரங்களின் நடவடிக்கைகளை 1949இல் பார்த்துக் கொண்டிருந்தவரும் அதே முகம்மது இசுமாயில்தான். குள்ளமானவர். கைலியும் நீண்ட ஜிப்பாவும் அணிந்திருந்தார். நேராக அபிராம் தாஸ் என்பவரை நோக்கி ஆக்ரோஷமாகச் சென்றார். அவனிடமிருந்த ராமன் பொம்மையைப் பறிக்க முயன்றார். அபிராம்தாசும் அவனுடன் வந்தவர்களும் திமிறிக்கொண்டு இசுமாயிலைத் தாக்கினர். பல திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டவர் தன்னால் மட்டுமே சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். ஓடினார் _ மசூதியிலிருந்து வெளியே ஓடிவந்தார். நகர வீதிகளில் ஓடினார். எங்கு ஓடுகிறோம் என்பதே தெரியாமல் தலைதெறிக்க ஓடினார். உயிர் பிழைக்க ஓடினார். இரண்டு மணி நேரம் ஓடி பகர்கஞ்ச் கோசியானா எனும் இடத்தில் வந்து சேர்ந்தார். விடியற்காலை 2 மணிக்கு அப்பகுதி முசுலிம்களின் வீட்டுக் கதவைத் தட்டினார்.

கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த கோசியானா முசுலிம்கள் அவரை ஆதரித்தனர். அங்கேயே தங்க வைத்தனர். அங்குள்ள மசூதியில் அய்ந்து வேளை அல்லாவைத் தொழுது வந்தார், 1980இல் இறக்கும்வரை. பாபர் மசூதிப் பக்கம் அவர் திரும்பவேயில்லை.

காவலரா? ஏவலரா?

பாபர் மசூதியைக் காவல் காத்திட போலீஸ்காரர்கள் 24 மணிநேரமும் நியமிக்கப்பட்டனர். அன்றைய தினம் காவல் பணியில் இரவு 12 மணிக்கு வந்தவர் அபுல் பர்கத் எனும் முசுலிம். ஆனாலும் இந்துக்களுக்கு உதவிடும் நோக்கில் எதையும் கண்டுகொள்ளக் கூடாது என்ற நாயரின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட முசுலிம் காவலர். மேலதிகாரியின் அதிகாரம் மத உணர்வுகளைப் புறந்தள்ளி விட்டது. வயிற்றுக்கு உணவிடும் சம்பளம் அதிகாரி தயவில்தானே வருகிறது! அல்லாவா தினம் தினம் படியளக்கிறார்? எனவே அபுல் பர்கத்தைக் குற்றங்காண முடியாது.

இரவு 12 மணிக்கு டூட்டி மாற்றிக் கொண்டு காவல் பணிக்கு அபுல் பர்கத் வருவதற்கு முன்பே அபிராம்தாஸ் கும்பல் உள்ளே நுழைந்துவிட்டது அல்லவா? திட்டப்படி 4 மணிக்கு விளக்கேற்றி, ஆரத்தி காட்டத் தொடங்கினர். இதைக்கண்டுவிட்ட அடில்பர்கத் பயந்தே போனான். மெயின் கேட்டைக் கவனித்தான். அதைப் பூட்டியிருந்த பூட்டு உடைக்கப்பட்டு ஏராளமான இந்துக்கள் திபுதிபுவென்று மசூதிக்குள் நுழைந்தனர். பர்கத் செய்வது அறியாமல் திகைத்துப் போய் நின்றான்.

கோயபல்ஸ் பாணியில்

கோபால்சந்த் விசாரத் அதே நேரத்தில் ஓர் அச்சகத்தில் இருந்துகொண்டு சுவரொட்டி அச்சடித்துக் கொண்டிருந்தான். திட்டமிட்டபடி எல்லாம் நடந்துவிட்டதல்லவா? அந்த அற்புதத்தை அறிவிக்கச் சுவரொட்டி அடித்துக் கொண்டிருந்தான். பாபர் மசூதியை மீட்டுவிட்டோம் என்று இந்துக்களுக்கு அறிவிக்கும் வாசகம் கொண்ட சுவரொட்டி அது.

விடியற்காலை 5 மணிக்குக்கூட மசூதியில் அபிராம்தாஸ் தன்கையில் குழந்தை ராமன் பொம்மையை வைத்துக் கொண்டே இருந்தான். அவனுடன் இந்துசேகர் ஜா, யுகல் கிஷோர் ஜா, மற்றும் 4 பண்டாரங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் இருந்துகொண்டு கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தது கலெக்டர் நாயர்.

நாயர் செய்த நயவஞ்சகம்

மகராஜ்! இங்கிருந்து நகரவே நகராதீர்கள். குழந்தை ராமனைத் (பொம்மையைத்தான்) தனியே விடாதீர்கள். ராமன் மிகவும் பசியாக இருக்கிறான் என்று கோஷம் எழுப்புங்கள் என்று நாயர் அபிராம்தாசிடம் கூறினார். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய கலெக்டர், சட்டவிரோதமாக மசூதிக்குள் நுழைந்தவர்களிடம் அளவளாவி அறிவுரை கூறுகிறார். எப்பேர்ப்பட்ட கடமை தவறல்? எப்பேர்பட்ட ஒழுங்கீனம்? இதை அய்.சி.எஸ். அதிகாரி ஆங்கிலேயர் ஆட்சி அகன்றவுடன் செய்தான் என்றால்… இந்தக் கேவலத்தைச் செய்தவன் தென்நாட்டவன். மலையாளி. மதம் பிடித்துவிட்டால் மனிதனுக்கு மூளை சிந்திக்கும் திறனே அழிந்துவிடுமோ?

வேலியே மேய்ந்தது

நீதிக்கும் நியாயத்திற்கும் புறம்பாக மட்டுமல்லாமல் நீதிமன்ற உத்தரவுக்கும் எதிர்ப்பாகச் சட்டவிரோதச் செயல் நடந்துள்ளது. அதைக் கண்டித்துச் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திட நியமிக்கப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் குற்றவாளிகளின் பக்கம் சார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளே நுழைந்தவர்களைச் சிறைப்படுத்தி, அவர்கள் வைத்த பொம்மையை அப்புறப்படுத்தி, அவர்கள் எழுதிவைத்த வாசகங்களை அழித்து, சட்டத்தின் ஆட்சியை நிலைப்படுத்திட வேண்டிய மாஜிஸ்திரேட் நாயர், வேலியே பயிரை மேய்ந்த கதையை  அரங்கேற்றிக் கொண்டிருந்தார். இந்திய நிருவாகத்தில் ஏற்படுத்தப்பட்ட அழிக்க முடியாத கறை. சுதந்தர இந்தியாவில் காங்கிரசு  ஆட்சியில் நடந்த களங்கம். மதவாத அமைப்புடன் கைகோர்த்துச் செயல்பட்ட காங்கிரசு அமைச்சர்களும் ஒழுக்கம் கெட்ட உயர் அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய ஆரியக் கூத்து!

அதனால்தான், காலை 9 மணிக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டது. மாநில அரசுக்குச் செய்தி ஒன்றரை மணி நேரம் சென்ற பிறகு காலை 10.30க்குப் பிறகுதான் அனுப்பப்பட்டது. மாவட்ட காங்கிரசுத் தலைவர் அட்சய் பிரம்மச்சாரியிடம் நாயர் கூறினாராம். காலை 6 மணிக்கு சம்பவம் பற்றி பாய்லால் எனக்குக் கூறினார். நான் போய்ப் பார்த்தேன் என்று சொன்னாராம். காவல் துறையினருக்குத் தெரியாமல் பாய்லாலுக்குத் தெரியவந்தது எப்படி? யார் இந்த பாய்லால்? அப்படி ஒரு நபரே கிடையாது. நாயரின் கற்பனைக் கதாபாத்திரம் பாய்லால் என்பதை அட்சய் பிரம்மச்சாரி அம்பலப்படுத்திவிட்டார். இப்படி ஒரு கலெக்டரா? அதிகார வர்க்கத்திற்கே அவமானச் சின்னம் கேகேகே நாயர்!

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *