திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில், வெளிநாடுகளில் நடத்தப்படும் சீனிவாச திருக்கல்யாணங்களில் முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரச் சாமியான திருப்பதி ஏழுமலையானுக்கே லட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இச்செய்தியிலிருந்து தெரிய வருகிறது. தன் பெயரில் நடக்கும் மோசடிகளைக்கூடத் தடுக்க வக்கில்லாத இந்தச் சாமியைத்தான், க்யூ கட்டி நின்று தரிசிக்கிறார்கள் பக்த சிரோன்மணிகள். உள்ளூரிலேயே ஒரு சீனிவாசப் பெருமாள் கோவில் இருந்தாலும், அது திருப்பதி கோவிலுக்கு இணையில்லை என்பதே ஏழுமலையான் ரசிகர்களின் ஏகோபித்த கருத்து. ஆனால், இப்போது நிலை என்ன தெரியுமா? திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகமே சென்னை போன்ற பெரு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் டம்மி கோவில் ஒன்றை செட் போட்டு அமைத்து வசூலில் இறங்கிவிட்டது. அதில்தான் ஊழல்கள் நடப்பதாகத் தெரிய வந்துள்ளதாம். கன்னியாகுமரியில் ஒரு பிராஞ்ச் கோவிலை அமைக்கவும் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் அடிக்கல் நாட்டியுள்ளது. இனி ஊர் ஊருக்கு திருப்பதி லட்டு கிடைக்கலாம். அப்படியே ஏழுமலையானுக்கும் அவனது கோவில் நிர்வாகிகள் லட்டு கொடுப்பார்கள். கோவிந்தா… கோவிந்தா…