ஈரோட்டுச் சூரியன் – 17

ஆகஸ்ட் 16-31 - 2013

பட்டினிக் கிடந்த இராமசாமி

இருவரையும்
ஈரோடு செல்லுமாறு இராமசாமி கூறினார்;
காசிக்குச் செல்ல
தனியாக ரயில் ஏறினார்;

பெஜவாடாவில்
இறங்கினார்..
இன்றைய விஜயவாடா
அன்றைய பெஜவாடா..

அங்கே..
அய்யர் இருவரின்
அறிமுகம் ஏற்பட்டது;
இருவரின் கொள்கைகளும்
இராமசாமிக்கு
அப்பாற் பட்டது;

இருவரின் சேர்க்கை
இராமசாமிக்குத் தெம்பைக் கொடுத்தது;
பயத்தைத் தடுத்தது;

வழித்துணைக்கும்
வழிகாட்டலுக்கும்
இருவரின் சேவை
தனக்குத் தேவை
என உணர்ந்தார்;
நட்பைத் தொடர்ந்தார்;

காசே இல்லாமல்
காசி செல்ல முனையும்
இருவரையும் கண்டு
முதலில் வியந்தார்;
தன் உடலில் அணிந்துள்ள நகைகளைக் கண்டு பயந்தார்;

இருவரையும் பின்பற்றுவோம்;
இருவர் பின் சுற்றுவோம்;

யோசித்த இராமசாமி
நகைகளைக் கழட்டிப்
பத்திரப்படுத்திக்கொண்டார்;
சத்திரத்தில் படுத்துக்கொண்டார்;

மீண்டும் பயணம்…
அய்தராபாத்
போய்ச் சேர்ந்தனர்;
மூவரும் சோர்ந்தனர்;

பசித்தது…

இருவரும் தெருவில் நின்று
யாசகம் செய்யத் தயாரானார்கள்..

யாசகம் செய்யலாம்
இவ்வாசகமே இராமசாமிக்குப் பிடிக்கவில்லை;
இருவரையும் தடுக்கவில்லை;

யாசகம் செய்ய
இராமசாமியின்
மனம் உடன்படவில்லை;
இவர் இதுவரையிலும்
உணவிற்காய் கடன்படவில்லை;

சத்திரத்திலே
இருந்து கொண்டார்;
கனவுதனில் விருந்து உண்டார்;

மாலை
பிச்சையெடுத்த அரிசியோடு
இருவரும் திரும்பினர்;
அத்தொழிலை
மனதார விரும்பினர்;

உணவு சமைத்தனர்;
சமைத்ததைச் சுவைத்தனர்;
இராமசாமிக்குத் தரவில்லை;
அவரும் அருகினில் வரவில்லை;

நேரம் செல்லச் செல்ல
பசி தன் வேலையைக் காட்டியது;
இராமசாமியின் வயிற்றை
வாட்டியது;

பசிக்கிறது என்றார்..
இருவரும் திரும்பவில்லை;
உணவு கொடுக்க
எவரும் விரும்பவில்லை;

நாளை யாசகம் செய்ய
வருகிறேன் என சொல்;
இந்த உணவைக் கொள்;

இருவரும் சொன்னதை இராமசாமி சொல்லி
உணவைத் தின்றார்;
பசியைக் கொன்றார்;

– கவிஞர் மதுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *