மேலச்சேரி சந்தையில் சின்ன வெள்ளாட்டுக் குட்டியை இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தார் குப்புசாமி. நல்ல நீட்டுப்போக்கான கருப்புக்குட்டி, காது நீளம், முகலட்சணமும் மயிர்க்கால் மினுமினுப்பும் குப்புசாமியைச் சுண்டி இழுத்தது.
குப்புசாமியின் நாலு ஏக்கர் மானாவரியில் அது தின்று தீர்த்தது போக மீதி இருப்பதுதான் வீடுவந்து சேரும். இந்தக் கருப்புக் குட்டி வந்ததில் இருந்தே குப்புசாமியின் கடைசி மகள் செவ்வந்தி அம்மாவுக்கு அதுமேல் தனிப்பாசம். அய்ந்தாம் வகுப்பு சென்றவள் நான் இனி பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன். ஆட்டுக் குட்டியை மேய்க்கிறேன் என்றாள். பொட்டப்புள்ள படிச்சா என்ன, பாழாப்போனா என்ன, அடுத்தவன் வீட்டுக்குப் போறதுதானேன்னு குப்புசாமியும் குட்டியை அவளிடம் கொடுத்து மேய்க்கச் சொல்லி அனுப்பிவிட்டார்.
குப்புசாமியின் குலதெய்வமான சூலாயி என்பதைச் சுருக்கி, சூலி! சூலி! என்று செல்லமாகக் கூப்பிட்டு அந்த வெள்ளாட்டுக்குட்டியை வளர்த்தனர்.
உழுதவனுக்கு உழக்குக் கூட மிஞ்சாது என்பார்களே அந்தப் பழமொழிக்கேற்ப, அந்த நாலு ஏக்கரில் வரும் தானியத்தில் வெளியூரில் வாத்தியார் வேலை பார்க்கும் பெரிய அண்ணனுக்குக் கால்பங்கு கொடுத்தாகணும், இன்னொரு தம்பி ஏதோ ஒரு ஆபீஸில் வேலைப் பார்க்குறாராம். அவருக்கு சோளம் கம்பைத் தவிர மொச்சைப் பயறு சரி பாதி அளந்து கொடுக்கணும். நிலத்தை ஒப்புக்கொள்பவன் தாயைத் தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பஞ்சாயத்தாரின் தீர்ப்புக்கேற்ப குப்புசாமி வீட்டில் அவன் ஆத்தா தங்கிவிட்டாள். மாமியார் மருமகள் ஒத்து இருக்க மாட்டார்கள் என்பதாலேயே அம்மாவைத் தனிக்குடித்தனத்திற்கு அனுப்பிவிட்டார். அம்மாவுக்கு வாழ்நாள் முழுவதும் படியளக்க வேண்டும். இதுபோக உழவு, உரம், ஆள்கூலி என அத்தனையும் விளைந்த வெள்ளாமையில் கொடுத்துவிட்டு மீதி இருப்பதுதான் குப்புசாமியின் குடும்ப ஜீவனத்திற்கு. குப்புசாமி ஆயிரம் கனவுகளுடன் ஆட்டைப் பிடித்து வந்தார். ஒரு திரைப்படமே தொடர்ந்து அவர் நெஞ்சில் ஓடியது. ஆட்டுக்குட்டி வளர்ந்து அபரிதமான வளர்ச்சி கண்டு, சினைப்பிடிக்கும் காலங்களில் எல்லாம் ஒன்று இரண்டு ஈனாமல் மூன்று நான்கு குட்டி ஈன்று பெருகி, அதை விற்றுப் பால்மாடு பிடித்து, அதுவும் பெருகி பெரிய பண்ணையாராகி, பார்ப்பவர்கள் எல்லாம் குப்புசாமி அய்யா நல்லா இருக்குறீங்களா என குப்புசாமியைப் பார்த்துக் கூழைக் கும்பிடு போடுவதாக, மேலும் இடிந்து கிடக்கும் அவர் குலதெய்வம் கோவிலை அவரே கட்டி கும்பாபிஷேகம் நடத்துவதாக கனவில் மிதந்தார்.
குப்புசாமியின் நினைப்பினாலும், செவ்வந்தியம்மா ஆட்டுக் குட்டிமேல வச்ச பாசத்தாலும் சூலி வளர்ந்து நான்கு மாதச் சினையானது. பார்ப்போரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு அந்த ஊருலேயே பொறுப்பான நல்ல ஆடு. ஆட்டினை விலைக்குக் கொடுப்பதாக இருந்தால் அய்யாயிரமானாலும் பரவாயில்லை நான் வாங்கிக்கிறேன் என்று ஆளாளுக்குப் போட்டி போட்டனர்.
குப்புசாமியின் பங்காளிகளுள் மூத்தவனுக்கு சூலியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே, குப்புசாமியின் வீட்டிற்குச் சென்று விலை பேசினான். செவ்வந்தியம்மா ஆட்டைப் பிடித்து வைத்துக் கொண்டு, சூலியை விடமாட்டேன், சூலி எனக்கு வேணும்; சூலி இல்லாம என்னால இருக்க முடியாது என விம்மினாள்.
இதனைப் பார்த்த குப்புசாமி, பங்காளியிடம் ஆட்டைக் கொடுக்கும் எண்ணம் எனக்கும் சிறிதுகூடக் கிடையாது. எனவே, வேறு எங்காவது சென்று ஆடு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
மலேசியாவிற்குப் போன குப்புசாமியின் ஒன்றுவிட்ட பங்காளி நீலமேகம் என்பவன் ஊருக்கு வந்தான். மூன்று மாத விசாவில் பத்து நாள் ஊர் சுற்றினான். மலேசியாக்காரன் ஒரு நாள் ஊர் நாட்டாமையைச் சந்தித்தான். நாட்டாமை நீலமேகத்துக்கு உறவுக்காரர்தான்.
ஏன்டா நீலமேகம், நீ மலேசியாவில் கொடிகட்டிப் பறந்தாலும் சிங்கப்பூர்ல ஏரோப்ளேன் வச்சுப் பொழச்சாலும், வந்த இடத்துல திடீர்னு ஒரு ஆபத்து வந்தா பக்கத்து வீட்டுப் பங்காளிங்க கண்ணுலதான் படும். பழச மனசுல வச்சுக்கக் கூடாது. பேசாம பங்காளிகளப் போயிப் பாரு. சூலாத்தா கோவில்தான் இடிஞ்சு கிடக்குது. உங்கப்பன் சின்னப் பயலா இருக்குறப்ப போட்ட பூஜை, ஆளுக்கு ஆயிரமோ அய்நூறோ போட்டா கோவிலக் கட்டிவிடலாம், ஏன் நீ இருக்குற வசதிக்கு நீயே கூட கோவிலக்கட்டி, பங்காளிங்ககிட்ட நூறோ இருநூறோ வாங்கி பெரிய பூஜை போடலாம். அப்பதான் உங்க குடி விளங்கும் கோத்திரம் செழிக்கும், என்று அந்த நாட்டாமை சொன்னதைக் கேட்டதும், மறுநாளே மெல்ல மெல்ல பங்காளிங்ககிட்ட ஒட்ட ஆரம்பித்து விட்டான் நீலமேகம்.
சூலியம்மன் கோவிலுக்கு வேண்டிய கட்டடச் செலவு முழுவதையும் தானே ஏற்று கோவிலைக் கட்டுவதாகவும், கும்பாபிஷேகத்திற்கு மட்டும் பங்காளிகள் காசு பத்து ரூபாயாவது விழுந்தால்தான் கோவில் நிலைக்கும், குடிபாடுகள் வளரும் என்றும் சொன்னான். கோவில் எழுந்து குடிபாடுகள் வளர்ந்தால் சரி என்று பத்துப் பங்காளிகளும் கோவில் பொறுப்பை நீலமேகத்திடமே ஒப்படைத்து விட்டார்கள்.
பத்தே நாளில் கட்டிடம் எழுந்தது. மீதிப் பத்து நாளில் சிமெண்ட் பூச்சு, மற்ற சில்லறை வேலைகளை முடித்துக் கொண்டு கோவில் தயார் நிலையில் இருந்தது. உடனடி சிலையாக, செய்து வைத்திருந்த ஒரு சிமெண்ட் சிலையை வாங்கி வந்து கோவிலின் மேல் வைத்து கோவிலைப் பூர்த்தி செய்து கோவிலின் உள்ளே இருந்த அவன் முப்பாட்டன், காலத்துக் குத்துக்கல்லைப் பெயர்த்து எடுத்து உள்ளே செப்புத்தாயத்து அது இது என்று புரோகிதர்களை வைத்துப் போட்டு, மந்திரம் ஓதி மறுபடியும் அதே குழியில் அந்தக் குத்துக் கல்லைப் பவ்யமாக நட்டார்கள். கும்பாபிஷேகம் செய்வதற்கான தேதி குறித்தாகிவிட்டது. குப்புசாமியின் பங்காளியிலே மூத்தவன் வந்து, நீங்கள் கோவில் கட்டுறதும் கும்பாபிஷேகம் பண்ணுறதும் பெரிய காரியமில்ல, ஆத்தாவுடைய உத்தரவு இல்லாமல் எதையும் செய்யக் கூடாது. நாளையே ஒரு உடுக்குக்காரனை அழைத்து வந்து ஆத்தாவின் சம்மதத்தை வாங்குங்க, அதற்குப் பிறகு ஆத்தா என்ன சொல்லுறாளோ அது மாதிரி கும்பாபிஷேகத்த நடத்துங்க என்றான்.
இவ்வளவு செலவுபண்ணிக் கோவில் கட்டுனோம், அய்யரை வைத்து மந்திரம் சொல்லி முறைப்படி எல்லாம் செய்து இருக்கிறோம், இன்னும் எதற்கு உடுக்குப் பூசாரி? இவன் இன்னும் ஆயிரமோ இரண்டாயிரமோ செலவு வைக்கப் பார்க்கிறான். பூசாரியக் கூட்டிட்டு வந்தா அவன் பங்குக்கு எத்தனை ஆயிரம் செலவு வைக்கப் போறானோ என்றான் ஒருத்தன். சிலர், அதில் அர்த்தம் இருக்கும். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அதுல குறை இதுல குறைன்னு வந்துடக் கூடாதுல்ல என்று பெரியவருக்கு ஜால்ரா போட்டனர். உடுக்கடிப் பூசாரி உடுக்கை அடித்து காளியாத்தா, மாரியாத்தா என்று கண்ட ஆத்தாக்களை இழுத்து கடைசியில் சூலாத்தாவை இழுத்து வந்து குறி சொன்னான்.
கும்பாபிஷேகம் முடிந்து எனக்குக் கண் திறக்கும் நேரம், ஒரு சூலாட்டைப் பலி கொடுத்துவிட்டுத்தான் நீங்கள் கண் திறக்கணும். இல்லைன்னா உங்க ஊருல ஒரு புள்ளத்தாச்சியக்கூட விட்டு வைக்க மாட்டேன் என்றாள்.
சூலாடு என்றால் என்ன என்றதும், முழுக்கருப்பில் உள்ள தலைச்சன் குட்டி ஆடு, இன்றோ நாளையோ குட்டி ஈனும் நிலையில் உள்ளதை சாமியின் முன் நிறுத்தி அதன் வயிற்றைக் கிழித்து அந்தக் குட்டியை மட்டும் எடுத்து முறத்தில் வைத்துப் படைப்பதுதான் சூலாட்டுப் பலி என்றான்.
பக்கத்தில் இருந்த பெரியவர், சூலாடு என்பது நல்ல தமிழ்ச் சொல். சூல் என்றால் கரு. கருவைச் சுமந்த ஆடு, அதாவது சினையாடு. அந்தக் காலத்தில் அசுரர்களின் கருவை அழிக்க ஆதிபராசக்தி திரிசூலியா அவதாரம் எடுத்து அசுரர்களை அழித்ததோடு, அசுரகுலப் பெண்களின் வயிற்றைக் கிழித்து அதில் உள்ள கருவையும் அழித்தாளாம். அதுபோன்று ஆட்டின் வயிற்றைக் கிழித்து அதன் கருவிலிருக்கும் குட்டியைப் படைப்பதுதான் சூலாட்டுப் பலி என்பது, உங்க கருவை அறுக்கிறேன் என்று பெரியவர்கள் சொல்வதில்லையா என்றார்.
கோவில் கட்டி கும்பாபிஷேகமும் முடிந்து விட்டது. இனி சாமிக்குக் கண்திறந்து பூஜை வைப்பதுதான் பாக்கி. நீலமேகம் சூலாட்டைப் பற்றிக் கேட்டான். அப்போது, நீங்க பார்க்கும், லட்சணத்தோடு அங்க அமைப்புள்ள ஒரு ஆடு குப்புசாமிகிட்டத்தான் இருக்குது. அதுவும் இன்றோ நாளையோ குட்டி போடும் நிலையில். மற்றப்படி இந்த நேரத்தில் எங்குத் தேடினாலும் கிடைக்காது என்று குப்புசாமியின் மூத்த பங்காளி கூறினான்.
அடப்பாவி, அந்த ஆட்ட வச்சுத்தான்டா ஆயிரம் கனவு கண்டுக்கிட்டு இருக்குறேன். என் மகள் செவ்வந்தியம்மா வேற இந்த ஆத்தா பேர வச்சு செல்லமா வளர்த்துக்கிட்டு வாராள். அதப் போயி பலியிடக் கேக்குறீங்களே! இந்த ஆத்தாவுக்கு அந்த ஆத்தாவப் பலியிடலாமாடா என்று மனதில் கருவிக் கொண்டே, அது என் மருமகன் ஆடுங்க, அத அவுரு கொடுக்க மாட்டாருங்க என்றார் குப்புசாமி.
இனிமேல் ஆட்டுக்காக அங்குமிங்கும் அலைய முடியாது. அப்படியே அலைந்தாலும், இவ்வளவு லட்சணமான ஆட்ட நம்மளால தேடிக் கண்டுபிடிக்க முடியாது. அது என்ன விலை போகுமோ அதவிட நூறு இருநூறு அதிகமா வாங்கி உங்க மருமகன் கிட்ட கொடுத்துடுங்க என்றார்கள். பத்துப் பங்காளிகளையும் குப்புசாமி எதிர்த்துப் பேச முடியாமல் வாயடைத்து நின்றுவிட்டார். வீட்டிற்கு வந்த குப்புசாமி கோவிலில் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை.
குப்புசாமி யாருக்கும் தெரியாமல் அந்த அர்த்த சாமத்தில் ஆட்டைப் பிடித்துக் குளிப்பாட்டி கோவிலுக்கு ஓட்டிச் சென்றார். உரிய முறையில் பூசாரியிடம் ஒப்படைத்து விட்டு, சந்தையிலிருந்து ஓட்டி வரும்பொழுது நினைத்து வந்த கற்பனைக் கனவுகளை மீண்டும் நினைத்துக் கண்ணீர்விட்டார்.
ஆட்டின் கழுத்தில் மாலையணிந்து குத்துக்கல் முன் கொண்டு வந்து நிறுத்தினான் ஒருத்தன். ஆவேசம் வந்தவனாக பூசாரி நின்று கொண்டிருந்த ஆட்டின் வயிற்றைக் கத்தியால் கிழித்து உள்ளே இருந்த ஆட்டுக்குட்டியைக் கர்ப்பப்பையோடு முறத்தில் வைத்து ஆத்தாவின் முன் வைத்தான்.
இதனைக் கேள்விப்பட்டு அந்த ராத்திரியிலும் வெறிப்பிடித்தவள் போல் ஓடி வந்தாள் செவ்வந்தியம்மா. ஆட்டையும் குட்டியையும் பார்த்துவிட்டு, ஏன்டா, நாய்களா! எவனோ சொன்னான்னு சூதுவாது தெரியாத அந்த அப்பாவி ஆட்ட அறுத்து அது குட்டிய வச்சு பூஜை பண்ணுற நீங்களும் அரக்கன்தான்டா. உங்க மகளோ, மருமகளோ, பெண்டாட்டியோ நிறைமாதக் கர்ப்பமாக இருந்தா அவ வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்து இது மாதிரி வச்சுப் படைக்க வேண்டியதுதானடா பாவிகளா? என்று கேட்டுவிட்டு, என் ஆட்டிற்கு சூலினு பெயர் வைத்ததுதான்டா தப்பு என்று கூறியபடியே மயங்கி விழுந்தாள்.