பொறுப்பான தீர்ப்பு

ஆகஸ்ட் 16-31 - 2013

திருநெல்வேலி எல்.அய்.சி. காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய செல்வராஜ் என்பவர் மனைவி குமாரியுடன் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தியாகராய நகர் சிவந்திப்பட்டி சாலையில் சென்றபோது, உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் செல்வராஜ் தூக்கி எறியப்பட்டார். ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மின்சார அதிகாரிகளின் கவனக்குறைவினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மின்வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் குமாரி.

இந்த வழக்கில் பதில் அளித்த மின்சார வாரிய செயற்பொறியாளர், புயல் காற்று வீசியதால் அந்தப் பகுதியில் வயர் அறுந்துவிட்டது. அதனை அதிகாரிகள் சரி செய்து கொண்டிருந்தபோது செல்வராஜ் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரைத் தடுத்தும் கேட்காமல் சென்றதால் விபத்து ஏற்பட்டது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. செல்வராஜ் இறக்க நேரிட்டது கடவுளின் செயல் என்று கூறினார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே.கே.சசீதரன் அவர்கள்,

உயர் அழுத்த மின்தடக் கம்பிகளைப் பராமரித்து, துயரச் சம்பவங்கள் நேரிடாதபடி பார்த்துக் கொள்வது வாரியத்தின் கடமை. அதைச் செய்யாமல் கடவுள் மீது பழிபோட்டு விட்டு தப்பிச் செல்ல முடியாது. மின்சாதனங்களைச் சரிவரப் பராமரிக்காததுதான் செல்வராஜின் சாவுக்குக் காரணம்.

எனவே, அவரது குடும்பத்துக்கு ரூ.44.56 லட்சத்தை நஷ்ட ஈடாகவும், ரூ.14 ஆயிரத்தை வழக்குச் செலவாகவும் மின்சார வாரியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியுள்ளார்.

மக்களுக்கு நன்மை செய்வதற்கே அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் உள்ளனர். தவறுகளை மனிதன் செய்துவிட்டு அதிலிருந்து தப்புவதற்கு விதியையும், கடவுளையும் காரணம் காட்டுகின்றான். இந்த மனநிலை உடையவர்களுக்கு மேற்கூறிய வழக்கில் கூறப்பட்ட பொறுப்பான தீர்ப்பு ஒரு பாடமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *