சமூகவியல் கொள்கைகளைப் பொறுத்தவரை இந்தியாவில் என்ன சாத்தியம் என்பதற்கான சரியான உதாரணங்களாக கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசம் விளங்குகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பார்த்துக் கற்றுக்கொள்ளும் அளவுக்கு அவை பலவற்றைச் செய்துள்ளன. இந்தியாவில் வடக்கின் செயல்பாட்டைவிட தெற்கின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.
எனது அனுதாபங்கள் இடதுசாரிகளின் பக்கம்தான். ஆனால் இடதுசாரிகள் சரியாகச் செயல்பட்டுள்ளனரா? இல்லை என்றே நினைக்கிறேன். இந்தியாவின் அணுக் கொள்கை பற்றித்தான் அவர்கள் அதிகம் கவலைப்பட்டனர். நானும் அணு மின்சாரம் பற்றிக் கவலை கொள்கிறேன். ஜப்பானில் ஃபுகுஷிமாவில் ஏற்பட்டது போன்ற விபத்து மற்றும் மும்பைத் தாக்குதல் போன்ற சதிகளும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இடதுசாரிகள் எழுத்தறிவின்மை மற்றும் பசிப் பிரச்சினைகளுக்காகப் போராட முன்வரவில்லை. இத்தகைய இடதுசாரி செயல்பாட்டை நான் ஆதரிக்கவில்லை.
இப்போதே இலவசங் களின் கலாச்சாரம் அதிகம் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் அரசு அதிகப் பள்ளிகளை நடத்துவது இலவசக் கலாச்சாரத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. கல்வி மற்றும் சுகாதாரத்தில்தான் இத்தகைய இலவசம் தேவை, மின்சாரத்திலும், உரங்களிலும், சமையல் வாயுவிலும் கூடாது.
இந்திய மக்களை அணுகும்போது, அவர்கள் மதம் மற்றும் இனத்தைக் கருத்தில் கொள்ளாத, மதச்சார்பற்ற, நியாயமான பார்வை தேவை. அதோடு கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியாவுக்கு உள்ள குறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.