IIT – யில் CBI

ஆகஸ்ட் 16-31 - 2013

சென்னை அய்.அய்.டி. என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (H.R.D.) என்ற கல்வித் துறையின்கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனம்;  இதற்கென ஆளுமைக்குழுவும், ஆளுநரும் உண்டு என்றாலும், இதன் இயக்குநர்களாக தொடர்ந்து உயர்ஜாதி (பார்ப்பனரே) வந்ததோடு அல்லாமல், இந்திய அரசியல் சட்டத்தின் 16ஆவது விதியின்படி பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்து, , I.I.T. என்றால், “Iyer Iyengar Tennancy” என்று பார்ப்பவர் எவருக்கும் எளிதில் தெரியும் வண்ணமே அது நடந்து கொண்டு வந்துள்ளது! வருகிறது!!

தகுதி, திறமை என்ற அளவுகோல்படிப் பார்த்தாலும் முன்னேறிய ஜாதியினருக்குச் சளைக்காத ஆற்றல் உள்ள பார்ப்பனரல்லாதவர்கள், S.C., S.T., OBC., MBC போன்ற வகுப்பினர் எவர் உள்ளே நுழைந்தாலும்கூட, அவர்களை ஆதிக்க அதிகார வர்க்கம் தடுத்து, அடக்கி  அல்லது சதா குற்றம் கண்டு, நிம்மதியற்ற நிலைக்கே தள்ளி, அவர்களாகவே பணியை விட்டுவிட்டு ஓடும்படியாகச் செய்வது _- தலைமையை அபகரித்துள்ள பார்ப்பன எஜமானர்களின் புனிதக் கடமையாகவே _- தர்மமாகவே _- இருந்து வந்துள்ளது!

இதை எதிர்த்து நாமும் ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளும் அறப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். பல அறிக்கைகளையும் வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

ஏனோ மத்திய அரசின் காதுகளில் இவை இன்னும் விழுந்ததாகவே தெரியவில்லை; அதன் பார்வை இந்தக் கொடுமைகள் _- அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளையே _- பின்பற்றாத _- இந்தக் கொடுமைகள் பக்கம் திரும்புவதேயில்லை!

எத்தனையோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் புழுக்களைப் போல ஆதிக்கக் கொடுங்கரங்களால் அழுத்தி மிதிக்கப்பட்டே வைக்கப்பட்ட வரலாறு பழைய வரலாறே ஆகும்! இது கொடுமையிலும் கொடுமை.

இதனால் வெகு காலமாக பாதிக்கப்பட்ட -_ வர்ணிக்க முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிய பேராசிரியை டாக்டர் வசந்தா அவர்கள் கணித மேதை _- அவரது பாடநூல்கள் பலவும் அவரது ஆற்றலைப் பறைசாற்றுபவை -_ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு போட்டு நியாயம் கேட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்பமை ஜஸ்டீஸ் திரு எஸ். நாகமுத்து அவர்கள், ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்!

1995 முதல் 26.9.2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.அய். புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் மனுதாரர் டாக்டர் வசந்தா கடந்த 27.7.1995 முதல் இணைப் பேராசிரியராகவும் 18.12.1996 முதல் பேராசிரியராகவும், அய்.அய்.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் எதிர் காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அவர்கள் தமது தீர்ப்பில் கூறியுள்ளார்கள்!

இது சமூக நீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றி! இதுகூட தாமதத்துடன் கிடைத்தது என்றாலும் -_ மறுக்கப்படாமல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சி! இந்த மனிதவளத்துறை கல்வியகங்களில் நசுக்கப்பட்டு வந்த பல ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்டோர் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுவர்!

நீதியரசர் வழங்கிய நியாயத்திற்கான தீர்ப்பினைப் பாராட்டுகிறோம்.

அய்.அய்.டி.யில் _ -அரசியல் சட்டம் விதித்துள்ள உரிமைகள் அனைத்தும் (அவை சலுகைகளோ, பிச்சைகளோ அல்ல) ஒடுக்கப்பட்டோருக்குக்  கிட்டும் வண்ணம்  சி.பி.அய்.யின் விசாரணை அறிக்கை அமைவது அவசியம்! அய்.அய்.டி. தொடர்பான பல்வேறு குறைகள் கண்டு அறியப்பட்டு களையப்படல் வேண்டும்; அதனைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு சென்னை உயர் நீதிமன்றத்திற்குரிய கடமையாகும்.

இதற்கு முன்பு பொறுப்பிலிருந்த பலரும் தப்பிவிடக் கூடாது! கூடவே கூடாது!

இது ஒரு கட்டம்தான். மேலும் சமூகநீதி பெறுவதற்கு பல கட்டங்கள் அங்கே தேவைப்படும். இந்த வழக்கில் சொல்லப்பட்ட தகவல்கள், ஒரு பனிப்பாறையின் முனைதான் (Tip of the iceberg) மட்டுமே!

எனவே சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியின் வெள்ளி முளைத்துள்ளது இப்போது!

தொடர்ந்து நாமும் விழிப்போடு இருப்போம் _ -விழிப்புணர்வை உருவாக்கி அறவழியில் போராடுவோம்!

–  கி.வீரமணி,
ஆசிரியர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *