நான் ஆராய்ந்த 137 நாடுகளில், நன்கு வளர்ச்சி பெற்ற, பொது மக்களின் தரம் உயர்ந்த நாடுகளின் (அதிக வரி விதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நாடுகள்) வருமானத்தை அதிக அளவில் சமத்துவமாகப் பரவலாக்கி உள்ள நாடுகள் அதிக நாத்திகர்களைக் கொண்டுள்ளன. செல்வம் வளரும்போது, மத உணர்ச்சி குறைந்து விடுகிறது. மனிதர்களின் தேவைகளுக்கு உரியவற்றை உலகம் அளிக்கும்போது, இயற்கைக்கு மீறிய நம்பிக்கைகள் குறைந்துவிடும். 2041இல் உலகின் பெரும்பான்மையினர் மதம் முற்றிலுமாக தேவையற்ற ஒன்றாகக் கருதுவார்கள். இப்படிச் சொல்லியிருப்பவர் பிரபல நூலாசிரியரும் புகழ்பெற்ற உடலியல், உளவியல் வல்லுநருமான நைஜெல் பார்பர். அண்மையில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி வளர்ந்த நாடுகளில் நாத்திகம், அதிகமாக நிலைபெற்று இருப்பதாகவும், 2041 அளவில் மதங்கள் முற்றிலுமாக மறைந்து விடும் என்று கருதுவதாகவும் கூறியுள்ளார். ஏன் நாத்திகம் மதத்தின் இடத்தை நிரப்பும் (Why Atheism will Replace Religion?”) என்ற இவரது நூல் இது குறித்த ஆய்வுகளை அலசி உள்ளது. இவரது ஆய்வு முடிவுகள் உலகத்தில் உள்ள நாடுகளின் எண்ணப் போக்குகளை மய்யப்படுத்தி, நாத்திகர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் அதிகமாகக் குழுமி இருப்பதான உண்மையை உணர்த்துகிறது.
சமீபத்திய மற்ற ஆய்வுகளின்படியும், நாத்தி கத்திற்கு ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும், தற்பொழுதுள்ள அமெரிக்கர்களில் 20 விழுக்காடு கடவுள் பற்றிய எண்ணங்கள் இல்லாதவர்களாகவும் அல்லது நாத்திகராகவோ, மதத்துடன் தொடர்பு இல்லாதவராகவோ உள்ளனர். அமெரிக்காவில் நாத்திகம் அல்லது, எதனோடும் தொடர்பில்லாத மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலக அளவிலும்கூட இந்த எண்ணிக்கை பீறிட்டு வருகிறது. 2010-இல் பிரிட்டனின் டெய்லி மெயில் என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில், மதத்துடன் தொடர்பில்லாத மக்கள் மூன்றாவது பெரிய இடத்தில் உள்ளனர். முதல் இரண்டு இடம் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் அடுத்து நாத்திகர்களே அதிகம்! ஆய்வின்படி இந்துக்கள், புத்த மதத்தினர், யூதர்கள் ஆகிய மதக் குழுக்களைவிட எதிலும் சேராத மத நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை அதிகம்! என்றும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.