சாலைகளில்
பசியில் துவள்பவரை
காணும் போதெல்லாம்,
விழி விரித்து
சுற்றும் முற்றும் தேடுகிறேன்
உங்கள் கடவுள்களை ……
***
அதிகாலையில்
கூட்டை விட்டு
கிளம்பும் பறவைகள்,
இரை தேடுமே
தவிர
இறை தேடுவதில்லை ……
***
பண்டமாற்று முறையிலிருந்து
பங்கு வர்த்தகம் வரை வளர்ந்து விட்டோம்,
ஆனாலும்
எலியைப் பிடிக்க பூனை குறுக்கே ஓடி விட்டால்
பயணத்தை ரத்து செய்கிறோம் …
***
பொதுக் கழிவறைகள்
இல்லா ஊர்களிலும்
கல்லறைத் திருநாள் இருக்கும்,
பேருந்து நிலையம்
இல்லா ஊர்களிலும்
தேர் தெப்பம் இருக்கும்,
நூலகம்
இல்லா ஊர்களிலும்
தீ மிதித்தல் இருக்கும்,
மருத்துவமனை
இல்லா ஊர்களிலும்
பால்குட வைபவம் இருக்கும்,
பள்ளிக்கூடம்
இல்லா ஊர்களிலும்
அய்வேளைத் தொழுகை இருக்கும்,
மின்சார இணைப்பு
இல்லா ஊர்களிலும்
அபிஷேக ஆராதனை இருக்கும்,
தார்ச்சாலை
இல்லா ஊர்களிலும்
அற்புத சுகமளிக்கும் கூட்டம் இருக்கும் ***
எவர் விழியிலும்
சிக்காமல்
ஒளியுமளவிற்கு,
அப்படி என்ன
தவறு செய்திருப்பார்கள் ?
இந்தக் கடவுள்கள் ***
பொன்னாலான தாலியாகினும்
ஒரு நாள் கழுத்தில் சுமக்க
எந்த ஆணாவது சம்மதிப்பானா ??
ம்ஹூம் ….
அவனுக்குத் தெரியும்
அது அடிமையின் அடையாளமென்று.
***
எப்போதும் எதையோ நோக்கி
சாரை சாரையாய்
விரைந்தபடியே எறும்புகள்,
முடங்குதல் சோர்வு
மனத் தளர்வு
நம்பிக்கையின்மை
இவையெல்லாம் மனிதருக்கே ….
***
– பாசு.ஓவியச் செல்வன்