உலக அளவில் ஊழலிலும் லஞ்சத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 107 நாடுகளில் வசிக்கும் 1,14,270 பேர்களிடம் கருத்துக் கேட்டதில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக 70 சதவிகித இந்தியர்கள் கூறியுள்ளனர்.
ஊழலை ஒழிக்க சரியான முறையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 68 சதவிகிதத்தினரும், இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் படிந்தவை என்று 86 சதவிகிதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊழலைப் போல லஞ்சம் பெறுவதிலும் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலக அளவில், தங்களது காரியத்தைக் குறுக்கு வழியில் 27 சதவிகிதம் பேர் (கடந்த 12 மாதங்களில்) லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 54 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் காவல் துறையில் 62 சதவிகிதமும், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவிகிதமும், கல்வித்துறையில் 48 சதவிகிதமும், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவிகிதமும், நிதித்துறையில் 36 சதவிகிதமும் லஞ்சம் இருப்பதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.