சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையிலும், ஆங்கிலத்துறையிலும் பணியாற்றியவர் பேராசிரியர் அ.அ.மணவாளன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். சரஸ்வதி சம்மான் விருது, மீனாட்சி சுந்தரம் பிள்ளை நூற்றாண்டு விருதுடன் 2012ஆம் ஆண்டிற்கான கபிலர் விருதையும் பெற்ற பெருமைக்குரியவர். அண்மையில் அவரது நேர்காணலில் தெரிவித்திருந்த ஆய்வுக் கருத்து இது
வேறுவேறு இராமாயணப் பிரதிகளுக்கிடையே கொடுக்கல் _ வாங்கல் எப்படி நடந்துள்ளது என்பதைப் பற்றிப் படிப்பதுதான் எனது முக்கிய கவனமாக இருந்தது. ஒப்பியல் குறித்த எனது ஆய்வுமுறையில் நான் கவனம் செலுத்தினேன். ஒப்பியல் ஆய்வு நெறிமுறையில் விவாதிக்கப்படும் தாக்கம் என்பதைக் கடந்து, எதிர்த்தாக்கம் என்ற ஒன்று நடந்திருப்பதைத்தான் இராமாயணம் குறித்த எனது ஆய்வில் நான் கண்டறிந்தேன்.
டெல்லிப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய இராமாயணம் பற்றிய ஆய்வு குறித்துப் பேச அழைத்திருந்தார்கள்.
கூட்டத்திற்கு யார் தலைமைதாங்கப் போகிறார் எனக் கேட்டேன். அதற்கு 17 மொழித் துறைகள் இணைந்து நடத்துகிறபடியால், டெல்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்தான் தலைமை தாங்குவார் என்றார் அமைப்பாளர். துணைவேந்தர் எந்தத் துறையைச் சார்ந்தவர் என்று கேட்டதற்கு சமூகவியல் என்றார். அப்போது நான் யாராவது சமஸ்கிருதத் துறையைச் சார்ந்தவர் இருந்தால் பரவாயில்லை. ஏனென்றால், என்னுடைய உரை தமிழ், சமஸ்கிருதத் தரவுகளைக் கொண்டு இரு மொழிகளையும் கலந்ததாக இருக்கும் என்றேன். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் சத்யவிராத் சாஸ்திரியின் தலைமையில் எனது உரையை ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது உரையின் இடையில் இராமநவமி பற்றிப் பேசும்போது இராமநவமி என்று கொண்டாடுகிறார்களே, அது யார் சொன்னது எனக் கேட்டேன். வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்தது பற்றிய குறிப்பை வைத்து இராமநவமியைக் கொண்டாடுவதாகக் கூறினார்கள். வால்மீகி எங்க சொல்லி இருக்கிறார் எனக் கேட்டதற்கு அங்கிருந்த சமஸ்கிருதப் புலமை வாய்ந்த ஒரு அம்மையார் எழுந்து கடகடவென்று 6 சுலோகங்களைச் சொன்னார்கள். இந்த சுலோகங்கள் எங்க வருது? என்று கேட்டேன். வால்மீகி இராமாயணத்துலதான் என்றார்கள். எந்த வால்மீகி இராமாயணம்? எனக் கேட்டேன். ஏனென்றால், வால்மீகி இராமாயணத்தில கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குப் புலவழக்குகள் எனப் பல புலவழக்குகள் உள்ளதென்று கூறி, நீங்க சொன்ன சுலோகங்கள் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில்தான் இருக்கு என்றேன். ஆமாம் என்றார்கள். இந்திய மொழிகளில் உள்ள இராமாயணங்களைச் சேகரித்து, அவற்றில் முழுமையாக உள்ள 3,500 பிரதிகளை மட்டும் வைத்து அவற்றில் பொதுவாக உள்ளவற்றை எடுத்து ஒரு பதிப்புத் தயார் செய்யப்பட்டது. அதில் பாலகாண்டத்தில் தசரதனின் குழந்தைகள் பிறப்புப் பற்றியும் அவர்களின் ஜாதகம் பற்றியும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. அதை வைத்து எங்கெங்கு, எந்தெந்தப் பகுதிகள் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வில் இராமன் பிறப்பு, நட்சத்திரம் குறித்த செய்தி கம்ப ராமாயணத்தில் இருந்துதான் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் நிறுவுகிறார்கள்.
@
ஆய்வாளர்
பேரா. அ.அ.மணவாளன்
கும்பகோணத்தில் இருந்த சமஸ்கிருத பண்டிதர்கள் மூலமாகத்தான் நடந்திருக்கு. கம்பராமாயணத்தில் உள்ள பகுதியை அப்படியே சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்து இணைத்திருக்கிறார்கள். இதை ஆய்வாளர்கள் இடைச்செருகல்தான் என எப்படி நிறுவுகிறார்கள் என்றால், வால்மீகி எழுதிய சமஸ்கிருத மொழியிலான இராமாயணம் வாய்மொழி மரபில் நிலவவில்லை என்பதன் மூலம்தான். பொதுவாக இதை யாரும் ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். இதை மறுப்பதின் மூலம் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மையை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். சென்னையில் இதனை மறுத்துக் கூறியவர்களிடையே நான் பேசும்போது சமஸ்கிருத மொழியானது எந்தக் காலத்திலும், எந்தத் தேசத்திலும் மக்களால் பேசப்பட்ட மொழியாக இருந்ததில்லை என்பது ஆராய்ந்து கண்டு கொள்ளப்பட்டது என்று சென்னை மைலாப்பூரிலிருந்து வெளிவந்த லிணீஷ் யிஷீக்ஷீஸீணீறீ இதழிலிருந்து ஒரு மேற்கோளாகக் குறிப்பிட்டேன். யார் இதைச் சொன்னது? எனக் கேட்டார்கள். காஞ்சி மடப் பெரியவரான சந்திரசேகர சுவாமிகள் என்றதும் எல்லோரும் அமைதி ஆனார்கள். கண்ணன் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் கலித்தொகையில் உள்ளது. கிருஷ்ணன் என்கிற பெயர் கருப்பு நிறத்தைக் குறிப்பதாக உள்ளது. கண்ணனைக் கடவுளாக்கியது தமிழ்நாட்டுக்காரர்கள்தான். வடபுல பாரதத்தில் சாதாரண சிற்றரசனாகக் காட்டப்பட்ட கண்ணனை நாங்கள் எல்லாம் கோவில் கட்டி வழிபடும் கடவுளாக்கியவர்கள் தமிழர்களே என்று வடநாட்டு அறிஞர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற தரவுகளை மேற்கொண்டு ஆய்வு செய்வதால் கண்ணன் வழிபாட்டின் தோற்றம் பற்றிய வேறு பல பயனுள்ள செய்திகளைப் பெறலாம். இராமாயணத்திற்கு முன்னரே மகாபாரதம் தமிழுக்கு வந்துள்ளது. பல்லவர் காலச் சிற்பங்களில் இவற்றின் அம்சங்களைக் காணமுடிகிறது. இதுகுறித்து இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
நன்றி: ஜூலை 2013, உங்கள் நூலகம்.
Leave a Reply