மனிதம் தழைக்க!
கரம் கொடுப்போம்
அறம் செய்ய!
மரம் நடுவோம்
மழை பொழிய!
குறை தவிர்ப்போம்
உறவுகள் வளர!
தோள் கொடுப்போம்
பணி முடிக்க!
போர் தொடுப்போம்
பகை வெல்ல!
இணை தேடுவோம்
இல்லறம் சிறக்க!
விலை கொடுப்போம்
விடுதலை அடைய!
தொண்டறம் செய்வோம்
மனிதம் தழைக்க!
– சீர்காழி கு.நா.இராமண்ணா
ஒரு நாள் வரும் ஒளி
கைத்தடியால் தட்டித்தட்டி
நடந்து வந்த பார்வையற்ற ஒருவன்
பக்தர்களின் ஆரவாரம்
காதில் கேட்டு நின்றான்.
இல்லாத கடவுளை எண்ணி எண்ணி
கருத்துக் குருடராய் காலம் தள்ளுகிறார்
என்று சொல்லிச் சென்றான்! அடடா!
ஒளியற்றவன் விழித்திருக்கிறான்!
– மலர்மன்னன், முசிறி
முரண்பாடு
குடும்ப ஒற்றுமைக்காக
வணங்குகிறான்
ஒற்றுமையில்லா
கடவுளை
பக்தன்
– ப.நாகராஜன், மாராச்சேரி
மாற்றம்
நேற்று
குப்பைக்குப் போன
மாட்டுச்சாணி!
இன்று
பூஜை அறைக்கு
வந்தது பிள்ளையாராய்!
-த. செண்பகம், அய்யம்பாளையம்
கலவர தினம்
இந்துவும் முசுலீமும்
இணைந்து கொண்டாடினர்
மதக் கலவர தினமாய்
விநாயகர் சதுர்த்தி
-_த. செண்பகம், அய்யம்பாளையம்
ஏழுமலையான் நிலை
தன் சன்னதியில்
திரும்பும் இடமெல்லாம்
உண்டியல் வைத்து
கையேந்தி நிற்கிறது!
உலகின்
பணக்கார தெய்வம்
திருப்பதி ஏழுமலையான்!
– த. செண்பகம், அய்யம்பாளையம்
ரதயாத்திரை
கிறித்தவன் கண்டுபிடித்த வாகனம்!
அரபு நாட்டு முசுலீம் தந்த பெட்ரோலில் ஓடியது
இந்து மதவாதியின்
ரத யாத்திரை!
– த.செண்பகம், அய்யம்பாளையம்
தப்புத் தாளம்
கடவுள் ஏன்
கல்லானான்?
கேள்வியே
தப்புன்னே..
கல்தான்
கடவுளாச்சு!
– சிவகாசி மணியம்
முரண்
அம்மன் கோவில்
ஒலிபெருக்கியில்…
தாயிற் சிறந்த
கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை!
-_ த.செண்பகம், அய்யம்பாளையம்
காசா? கடவுளா?
காசியில் இருக்கும் கடவுளுக்கும்
காசினியில் வாழும் மனிதனுக்கும்
காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு!
காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு!
கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம்
கண்டுகழிக்க மானுடக் கூட்டம்
காசிடம் கடவுள் தோற்கிறது
காசைத்தான் அதுகள் ஏற்கிறது
(பிச்சையெடுத்தல்)
காசுபணம் பறிப்பதற் காகவே
கற்பனைக் கடவுள்களை விதைத்தனர்
விண்ணையும் மண்ணையும் காட்டியே
விற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர்
காசுபொருள் இருக்கும் கோவிலில்
கடல்போல் மனிதக் கூட்டம்
காசில்லா கோவில் என்றாலே
காணலையே மக்கள் நடமாட்டம்
_மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்