தமிழன் கல்விக்கு வேட்டு!
இதோ ஒரு நிகழ்கால உதாரணம்
புதுக்கோட்டையில் சில தினங்களுக்கு முன் 25-குடும்பங்களை அய்ந்தாண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும், அவர்களை ஊருக்குள் நடக்கும் நல்லது கெட்டது என்று எதிலும் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். அவரும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அத்துடன் அது முடிந்துவிட்டது.
ஊருக்குள் என்னதான் நடந்தது? ஏன் ஊரை விட்டு 25- குடும்பங்களை அய்ந்தாண்டுகளாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்? மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தவுடன் குறைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதா? என்ற கேள்விகளுடன் ஊருக்குள் நுழைந்தோம். ஊருக்குள் யாரும் பேச மறுத்தார்கள் என்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சரவணவேல் என்பவர் கூறுகையில், மற்ற ஊர்களில் பள்ளிகள் தொடங்கியது மாதிரிதான் குலமங்கலத்துக்குள்ளும் பள்ளி தொடங்கப்பட்டது. அந்தப் பள்ளிக்கு ஊரின் குலதெய்வமான சிறீஉடைய பராசக்தி என்ற பெயர் வைக்கப்பட்டது. அதை நிர்வகித்து வந்தவர் பழனியாண்டித் தேவர் என்பவராவார்.
1943-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியை 1956-வரை நிர்வாகம் செய்துவிட்டு அவருக்கு அரசுப் பணி கிடைத்ததால் சுப்பையா தேவர் என்பவரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றுவிட்டார். அவர் 4- மாதம் 10-நாட்கள் நிர்வாகம் செய்துவிட்டு சின்னையா தேவர் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு மலேசியா சென்றுவிட்டார்.
அப்போது அடித்த புயலில் பள்ளிக்கூரை சாய்ந்து விட்டது. சின்னையா தேவர் சொந்தப் பணத்தில் சீர்செய்து 86-வரை நிர்வாகம் செய்தார். இங்கு கள்ளர், மறவர், வேளாளர், தேவேந்திரகுல வேளாளர், பள்ளர், பறையர், ஆசாரி, வண்ணார், கவுண்டர் என எல்லா ஜாதியினரும் இருந்தனர். அனைவரின் கல்விக்கும் இப்பள்ளிதான் பெரும் உதவியாக இருந்தது. ஓராசிரியர் பள்ளியாக இருந்து படிப்படியாக உயர்ந்து அய்ந்து ஆசிரியர்கள் வரை பணிபுரியும் அளவிற்கு உயர்ந்தது. தனியார் நிர்வாகமாக இருந்தாலும் 1973_-74 இ-ல் அரசு உதவி பெறும் பள்ளியாக மாறியது. பள்ளி நிர்வாகக் கமிட்டியும் அமைக்கப்பட்டது. சின்னையா தேவர், சுப்பையா தேவருக்கு அடுத்து தற்போது நான் செயலாளராக இருந்து நிர்வாகம் செய்து வருகிறேன். கமிட்டியும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஊருக்குக் கோவில் கட்ட வேலைகள் தொடங்கியபோது பிரச்சினைகளும் தொடங்கிவிட்டது. இப்பள்ளியை ஊருக்குச் சொந்தமாக்க நடந்த முயற்சியிலிருந்து கோவிலுக்கு வரி வாங்குவது உட்பட அனைத்துக்கும் தொல்லை கொடுத்து வந்தனர். பள்ளியில் சேர்ந்திருந்த மாணவர்களின் சான்றிதழ்களை வாங்கிச் சென்று வேறு பள்ளிகளில் சேர்த்துவிட்டனர். அதனால் இப்பள்ளியில் படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. முடியாத பட்சத்தில் கோவிலில் சாமி கும்பிடவும் அனுமதிக்கவில்லை. திருவிழாவும் நடத்தவிடவில்லை. உறவினர் என்று சொல்லி எழவு வீடுகளுக்கும் போகமுடியவில்லை. அதனால் இப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்திருக்கிறோம் என்றார்.
பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எங்கள் மீது வழக்குப்போட்ட ஒருவரை எப்படி எங்கள் வீட்டுத்துக்கத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பது? அதனால் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். வந்தவரைத் திருப்பி அனுப்பிவிட்டோம். பள்ளியில் இருந்த பிள்ளைகளை அவரவர் விருப்பப்படி வேறு பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். கோவில் கட்டப் பணம் கொடுக்காததால் இப்போது திருவிழாவிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இப்போது ஊரிலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களாகத்தான் ஒதுங்கியிருக்கிறார்கள் என்றார்.
ஒன்றியக் கவுன்சிலரான ஆர்.எம்.கருப்பையா கூறும்போது, பள்ளியைப் பொறுத்தமட்டிலும் ஊருக்குக் கேட்டுப் பார்த்தோம். ஊருக்கு ஒப்படைக்காததால் நிர்வாகக் கமிட்டியிடமே விட்டுவிட்டோம். அவர்களே நிர்வாகம் செய்து கொள்ளட்டும் என்று இருக்கிறோம். சாமி கும்பிட யாரையும் தடுக்கவில்லை. விரும்பியவர்கள் கும்பிட்டுக் கொள்ளட்டும் என்று இருக்கிறோம். சிலர் கோவிலுக்கு வந்து போகிறார்கள் என்றார். முன்னாள் கவுன்சிலரான அழகப்பன் என்பவர் கூறுகையில், 2006-ஆம் ஆண்டு கோவில் கட்ட நினைத்து நிதி வசூலித்தோம். ஆனாலும் நாங்கள் 2008-க்குப் பிறகு ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறோம். கோவிலுக்குத்தான் போகமுடிவில்லை என்றால் தாய் தகப்பன் இறந்த துக்கத்தில்கூடக் கலந்து கொள்ளவிடாமல் தடுப்பதுதான் வேதனையாக இருக்கிறது. கிராமத்தில் துக்க வீடுகளில் பெரும்பாலும் அனைவரும் பங்கெடுத்துக் கொள்வார்கள். அதில் இறந்தவரின் பிள்ளைகளைக்கூடக் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கும் அளவிற்குப் போய்விட்டது. அந்த வேதனையை அனுபவிப்பவர்கள்தான் உணர முடியும் என்றார்.
பொதுவான சிலர் கூறுகையில், பள்ளி அரசுத் தொடக்கப் பள்ளி என்று இருந்தாலே இந்தப் பிரச்சினைகள் இருந்திருக்காது. சாமியின் பெயரைச் சூட்டியிருப்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக அரசுப் பள்ளிகள் என்றாலும் அதை நிர்வகிப்பது ஊர்மக்கள்தான். அவர்களால்தான் அதை உயர்த்தவும் வளர்த்தெடுக்கவும் முடியும்.
அதில் பிரச்சினை வந்துவிட்டால் பாழ்படுவது கல்வியும் பாதிக்கப்படுவது கல்விக்கு ஏங்கும் ஏழைக்குழந்தைகளும்தான். பணக்காரர்கள் எவ்வளவு செலவு செய்தேனும் படிக்கவைத்து விடுவார்கள். ஆனால் ஏழைகள் என்ன செய்வார்கள்? ஆண்டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்த நிலையை மாற்றவே சில நூறு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இப்போது கல்வி கிடைத்தும், இதுபோல் பக்தி, தனிமனித சுயலாபம் போன்றவற்றால் கல்வி கிடைக்கவில்லை என்றால் மறுபடியும் கற்காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் போய்விட நேரும் என்றார்கள்.
இதற்குப் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்ற நிலையில் மேலும் தீவிரமாக விசாரித்தபோது கிடைத்த உண்மை அதிர்ச்சியாக அதேநேரத்தில் நமக்குப் பழக்கப்பட்டுப்போன ஒன்றாக இருந்தது. (இதை நினைவுபடுத்தக் காரணமாக இருப்பது தந்தை பெரியாரின் வாசகங்களும் அவரது பார்ப்பனீயம் குறித்த கருத்துகளும்தான். எந்த ஒரு இடத்திலும் தமிழனை ஒன்றாக இருக்கவிட மாட்டான் பார்ப்பான் என்பது அனுபவம்.) அதனால் வெவ்வேறு ஜாதிகள் இருக்குமிடத்திலும் ஜாதிகளுக்கிடையே வரும் கலவரங்களுக்குப் பின்னணியிலும் பார்ப்பான்தான் இருப்பான். இங்கு உயர் ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் மறவர் ஜாதிக்குள்ளும் இருதரப்பு மோதிக்கொண்டு அரிவாள் எடுத்துக் கொண்டு இளைஞர்கள் நிற்கிறார்கள் என்றால் ஏதோ இருக்கும் என்பதால் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டியதாயிற்று.
குலமங்கலத்தில் உள்ள குறிப்பிட்ட அந்தத் தொடக்கப் பள்ளியில் 2008-ஆம் ஆண்டு தலைமையாசிரியர் பதவி காலியாகி இருக்கிறது. அந்தப் பணிக்கு அய்ந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர் வேண்டும் என்று நிர்வாகத்தின் சார்பில் கோரப்பட்டிருக்கிறது. அந்தப் பணிக்கு மலையக்கோவில் குருக்களான சுப்பிரமணியக் குருக்களின் மகள் விண்ணப்பித்து இருக்கிறார். அவர் டீச்சர் டிரெய்னிங் மட்டும் முடித்திருக்கிறார். அதனால் நிர்வாகத்தினரால் மறுக்கப்பட்டது.
பணியை எப்படியும் பெற நினைத்த சுப்பிரமணியக் குருக்கள் ஊருக்குள் இருந்து இப்போது கோவில் கும்பாபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கும் நபர்களிடம் சென்று இந்தப் பணிக்கு ரூபாய் மூன்று லட்சம் தருகிறேன். அந்த நிதியைக் கோவிலுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ரேட் பேசியிருக்கிறார். அதை முன்னின்று பேசியவர் அந்த ஊரின் அம்பலம் சுப்பிரமணியன் என்று பலரும் சொல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் பள்ளி நிர்வாகத்தினரை நெருக்கி, பள்ளி நிர்வாகம் ஊரில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றிருக்கிறார்கள். அந்த ஆசிரியை தலைமையாசிரியராகத் தகுதி இல்லாதவர் என்று சொன்னதால் இருபக்கமும் ஊதிப் பெரிதுபடுத்தி விட்டதும் பார்ப்பனீயம்தான். கோவில் கட்டியதிலும் கும்பாபிஷேகம் செய்ததிலும் வருமானம் பார்ப்பனீயத்துக்குத்தான். கல்வியை இழந்ததும் கல்விக்காக அதிக செலவு செய்ய வேண்டி வந்ததும் இப்போது பகைமையை வளர்த்துக் கொண்டு இருதரப்பாக மோதிக் கொள்வதிலும் மற்ற இனத்தவருக்குத்தான் துன்பங்கள் நேர்ந்திருக்கிறது. இந்தத் துன்பங்களை எப்போது தமிழர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களோ? இதோடு மேலும் ஒரு சம்பவம். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாங்காடு என்றொரு கிராமம். மா, பலா, வாழை என்று முக்கனிகளும் விளையும் நல்ல மண்வளம் மிக்க பூமி. மிளகு, காப்பி, கோகோ உட்பட மலைப்பயிர்களும் விளைகிறது என்றால் மண்வளத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நல்ல விளைச்சல் இருந்தால் நாலு பணம் கையில் புழங்கத்தானே செய்யும். இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் நிறையப்பேர் வெளிநாடுகளிலும் உழைத்து அந்நியச் செலாவணியை ஈட்டிவருகிறார்கள்.
அத்தனையும் மக்களின் உழைப்பு என்றாலும் அதைத் தின்று கொழுக்க நினைத்த பார்ப்பனீயம் உழைக்க நினைக்கிறதா என்றால் அதுதான் இல்லை. தனது ஏமாற்றுத்தனத்தின் மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் மாங்காட்டில் உள்ள கோவில் குளத்தில் தண்ணீர் பெருக்கெடுக்கிறது என்றொரு புரளியைக் கிளப்பிவிட்டதன் மூலம் அந்தத் தண்ணீரைப் பிடித்துச் செல்ல பிளாஸ்டிக் பாட்டில்களுடன் நூறு கிலோ மீட்டருக்கும் அப்பால் இருந்தெல்லாம் தமிழன் வந்து சேர்ந்தான். அன்று முதல் சாதாரண மாரியம்மனாக இருந்த கோவில் நீரூற்று மாரியம்மன் ஆகிப்போனது.
அக்கோவில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கும் செய்யப்பட்டது. புதிய தேர் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாரியம்மன்கோவில் சாதாரண மாரியம்மனா நீரூற்று மாரியம்மனா என்று இன்றளவும் ஊருக்குள் பட்டிமன்றம் நடத்தி தீர்வு காணப்படாமல் இருக்கிறது. ஆனால் பார்ப்பனீயம் என்ன செய்கிறது தெரியுமா? மாரியம்மன் கோவில் கட்டுவதற்கு யாரெல்லாம் கலந்து கொள்ளவில்லையோ, சாதாரண மாரியம்மன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களோ அவர்களைப் பிடித்து, அவர்களை முன்னிறுத்தி பல லட்ச ரூபாய் வசூலும் செய்து அந்த ஊரில் பாழடைந்து போய்க் கிடந்த சிவன் கோவிலைப் புதுப்பிக்கச் செய்து சமீபத்தில் குடமுழுக்கும் நடத்திவிட்டது. இரு கோவில்களுக்குமே செலவு செய்ததும் உழைத்ததும் பாடுபட்டதும் அலைந்ததும் நம் உழைக்கும் மக்கள். ஆனால், அக்கோவிலால் வருமானம் என்னவோ மாங்காடு கிராமத்தில் இருக்கும் ஒரே குடும்பத்து அண்ணன் தம்பிகள் ஆன பார்ப்பனர் இருவருக்கும்தான். புரிய வேண்டிய மக்களுக்குப் புரிய வேண்டுமே!
_ புதுக்கோட்டையிலிருந்து ம.மு.கண்ணன்