Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மனிதநேயம் எல்லாவற்றையும் விடப் பெரியது. ஆனால் உலக அளவில் அதைப் பார்க்க முடிவதில்லை. ஜாதி என்னும் குறுகிய வட்டாரத்திலிருந்து மக்கள் விழித்தெழ வேண்டும். பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைந்தால்தான் சமுதாயம் வளர்ச்சியடையும்.

– எஸ்.தமிழ்வாணன்,
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

கால அவகாசம் அளிக்கும் நீதிமன்ற உத்தரவுகளை கிடப்பில் போடும் எண்ணத்தில் சில அதிகாரிகள் இருக்கின்றனர். மக்களை அங்கும் இங்கும் அலைய வைக்கும் மனம் படைத்தவர்களாக அதிகாரிகள் உள்ளனர். மக்களின் எஜமானர்கள் என்று நினைத்துச் செயல்படுகின்றனர். ஒவ்வொரு அரசு ஊழியரும் மக்களின் ஊழியர் என்பதை மறந்துவிட்டனர். தற்போதைய ஆட்சி முறையின்படி மக்கள்தான் எஜமானர்கள்.

– கே.கே.சசீதரன்,
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 அல்லது 3 பெண்களாவது தங்களின் மேலதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. பாலியல் தொந்தரவு என்பதை படுக்கைக்கு அழைத்தார் என்று மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அருவருப்பாக திட்டுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களும் பாலியல் வன்முறையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னிடம் புகார் தெரிவித்த பெண்கள் தயங்கித் தயங்கி பூடகமாகத்தான் சொன்னார்கள்.

குடும்பச் சூழலும் சமூகமும்தான் தனக்கு ஏற்பட்ட பாலியல் குற்றங்களை வெளிப்படையாக _ புகாராக சொல்ல பெண்களைத் தடுக்கிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தரவில்லையென்றாலும்கூட, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் விவரத்தைத் தெரிவித்து பாலியல் தொந்தரவுகளைச் செய்யும் நபர்களை அதிரடியாக ட்ரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

– திலகவதி இகாப,
தமிழகக் காவல்துறை மேனாள் தலைவர்