போலீஸ் படையின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன. தாங்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையில் தங்கள் அதிகாரத்தை போலீசார் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும்.
– சிங்வி, ரஞ்சனா பிரசாத் தேசாய்,
உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
உயர் நீதிமன்றங்கள், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது இடஒதுக்கீட்டு முறை பின்பற்ற வேண்டும். இந்நியமனங் களின்போது தாழ்த்தப் பட்ட, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம், இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் அனைத்து சமூக மக்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும்.
– பி.சதாசிவம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.
போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது இலங்கை அரசு நடத்திக் கொண்டிருப்பது உளவியல் போர். அந்தப் போரின் ஓர் அம்சமாக பிரபாகரன் தொடர்பான சர்ச்சைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அவர் விரைவில் வருவார் என்கிற பிரச்சாரத்தின் வாயிலாக அவர் வந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளட்டுமே என்கிற தயக்கத்தை உருவாக்கி வருகிறார்கள். கசப்பானதாகவே இருந்தாலும், யதார்த்த சூழலை எதிர்கொள்ள வேண்டும். போராட்டத்தைக் கைவிட்டு யாருக்காகவும் காத்திருந்தால், தமிழர் என்ற ஓர் இனமே அழிந்துவிடும் என்கிற சூழல்தான் இருக்கிறது!
– சத்தியசீலன், தலைவர், தமிழ் மாணவர் பேரவை, மூத்த ஈழப் போராளி