கேள்வி : உலகிலேயே கடவுளை நம்பாத நாத்திகர்கள் அதிகம் உள்ள சீனா உலக வல்லரசாக வளர்ந்து வருகிறதே எப்படி? – ப.தமிழ்மணி, திருநெல்வேலி
பதில் : கடவுளை நம்பாததினால்தான், தன்னம்பிக்கை உள்ளவர்களாக ஆகமுடியும். மார்க்சிசம், லெனினிசம், மாவோயிசம் என்பது மட்டுமல்லாமல், முன்னாலேயே புத்த நெறியையும் (நாத்திகத்தையும்) அடிநீரோட்டமாகக் கொண்டு, கன்பூஷியசிஸ் போன்றவர்களின் மனிதநேயத் தத்துவக் கருத்தோட்டமும் உள்ளதால்தான் உலக வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது!
பதில் : வறட்டுச் சித்தாந்தத்தைவிட, யதார்த்தத்தினையும் இணைத்துள்ளனர் தற்போதைய சீனத் தலைமையினர்; இவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.
கேள்வி : சனி என்று சொன்னாலே நாக்கில் சனியன் வந்துவிடுவானாமே, அப்படியென்றால் இன்று சனிக்கிழமை என்று எப்படிச் சொல்வது? இப்படிச் சொல்லும் மெத்தப் படித்த சனியன்களை என்ன செய்வது? – இல.சங்கத்தமிழன், செங்கை
பதில் : படுமுட்டாள்தனத்திற்கு ஏன் இப்படி விளம்பரம் தருகிறீர்கள் – இப்படிக் கேள்வி கேட்டு என்னைப் பதில் எழுதச் சொல்லி! இவைகளை அலட்சியப்படுத்துங்கள்.
கேள்வி : நாட்டிலும் வீட்டிலும் குழப்பத்தை உருவாக்குகிற தொலைக்காட்சி நெடுந்தொடரைப்பற்றிய தங்கள் கருத்து? _ தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : அசிங்கம் _ ஆபாசம் _ கிரிமினல் சதி _ இவைகளின் கூட்டுத்தொகை இத்தொடர்கள் _ இவைகளைத் தவிர்க்க முயற்சியுங்கள்.
கேள்வி : அத்வானியின் ராஜினாமா-நாடகம்தானே? – அ. தமிழ்க்குமரன், ஈரோடு
பதில் : நாடகமா? ஆர்.எஸ்.எஸ்.சிடம் அடிதண்டா சரணாகதியா? போகப் போகப் புரியும் _ நாட்டிற்கு!
கேள்வி : கண்டுபிடிப்பாளராக உலகமே கொண்டாடும் கொலம்பஸின் மறுபக்கம், அவரைப் பெரும் கொடுங்கோலனாய்க் காட்டுகிறதே? – சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை
பதில் : கொலம்பஸ் பாராட்டப்படுவது, அவரது கண்டுபிடிப்பிற்காகத்தானே! மற்றவை பற்றி நமக்கேன் கவலை?
கேள்வி : கருநாடகத்தில் யார் முதல்வராக வந்தாலும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கொடாக்கண்டர்களாக இருக்கிறார்களே? _ சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை
பதில் : அவர்களது மாநில உரிமை, பிடிப்பு _ ஒற்றுமை _ இவைகளின் வெளிப்பாடு அது! இங்கே… அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே!
கேள்வி : கலை, இலக்கியத் துறையில் கழகத்தின் அடுத்த பாய்ச்சலாக _ வெகுமக்கள் கூடும் மெரினா கடற்கரை போன்ற பகுதியில், ஒரு முழுநிலவு நாளில் (இரவு முழுக்க) திராவிடர் பண்பாட்டு கலை, இலக்கிய இரவு கொண்டாட கழகம் ஆவன செய்யுமா?
_ அ. வெற்றிமுரசு, வேப்பம்பட்டு
பதில் : நல்ல யோசனை; இதை அந்த இளம் நண்பர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்!
கேள்வி : மதச்சார்பற்ற நாட்டில் மதவாதிகளுக்கு அஞ்சல்தலை வெளியிடுவது சரியா?
_ வெங்கட. இராசா, ம.பொடையூர்
பதில் : மதச்சார்பற்ற நாட்டில் கூடாதுதான். ஆனால் மதச்சார்பற்ற என்று சொல்லிக் கொள்ளும் அளவில் உள்ள நாட்டில்… என்று பார்த்தால் அவை சர்வசாதாரணம்தானே!
கேள்வி : போபர்ஸ் ஊழல் செய்த முன்னாள் பிரதமர் ராஜீவ் அவர்கள் மறைந்ததும், அந்த ஊழலும், வழக்கும் மறைந்துவிட்டதா? மறந்து விட்டதா? அல்லது மறைத்து விட்டார்களா? வரும் தேர்தலுக்குள் முளைத்து வெளியில் வருமா? _ பெ. கூத்தன், வாழப்பாடி
பதில் : ஊழல்கள் எப்போது தோன்றும், எப்போது மறையும் என்பது எளிதில் நம் நாட்டில் கணிக்க முடியாதவைகள் ஆகும்!
கேள்வி : குன்னூர் – வெலிங்டன் இந்திய ராணுவப் பயிற்சியகத்தில் சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கும் விசயத்தில் மத்திய அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது ஏன்?
_ எஸ். கிருபாகரன், கோவை
பதில் : 24.6.2013 அன்று வேதாளம் முருங்கை மரத்திலிருந்து கீழே இறங்கிவிட்டது; இலங்கைக்காரர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். மத்திய அமைச்சர் அந்தோணி தஞ்சையில் சொல்லிய வாக்கு மாறுவது எவ்வகையில் சரி? தேவையற்ற தலைவலியை இப்படி மத்திய அரசு வரவழைத்து இருக்க வேண்டாமே!