சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவதற்கும், தீண்டாதவர்களாய் நடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணமென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீனா ஜப்பான்காரர்களிலாவது தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ் ஜாதியாராகவும் நடத்துகின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா?
நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப்பட வேண்டும்? நாமும் ஏன் வெகு காலமாகவே அதற்கு இணங்கி நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும்? என்பன போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.
அன்றியும், வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவனாவது, முகமதியனாவது நம்மைத் தீண்டாதாரராய் நடத்துகின்றார்களா? அன்றியும் சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் சைனாகாரன், ஜப்பான்காரன் முதலிய பவுத்தவர்களாவது நம்மைத் தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே.
மற்றபடியார் நம்மைத் தீண்டாதாராய் யார் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள். நம் நாட்டிலே பிறந்து நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள்தான் நம்மைத் தீண்டாதாரர்களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால், ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள்? என்று பாருங்கள். நாமும் அவர்களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல. மற்றெதற்காக என்றால் நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லாமல் வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. அதாவது நம்மையும், நம்மைத் தீண்டாதவர்களாகப் பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து எல்லோரும் இந்துக்கள் என்றும் இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை. பெரிதும் வேறு நாட்டாரும், வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும், பவுத்தரையும், கிறிஸ்தவரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லுகின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஏனெனில், அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும் சுயமரியாதையே பிரதானமானதனாலும் அவர்களை யாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே புத்தி கற்பித்து விடுவார்கள் ஆதலால், நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் இந்து என்னும் மதம்தான் நம்மைத் தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதே யொழிய வேறு எந்தக் காரணத்தினாலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா? ஆகவே, நம்மில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான் பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன். இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகு காலமாக நம் முன்னோர்கள் காலம்தொட்டு நாம் சண்டாளப்பறையராய் தீண்டாதாரராய் நடத்தப்பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன் மூலம் நாமே நம்மை தீண்டாதார் என்று ஒப்புக் கொண்டும் வந்திருக்கின்றோம். அப்படி இருக்க இன்று நாம் திடீரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல வேடம் போட்டுக் கொண்டு நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது என்று சொன்னால் அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா?
இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா?
ஒரு மனிதன் தன் மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று என்னைப் பார்த்து யாரும் அசிங்கப்படக்கூடாது. என்னை எட்டிப்போ என்று யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாகவாவது இருக்குமா? அல்லது மலம் பூசிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசிங்கப்படக்கூடாது, எட்டி நில் என்று சொல்லக் கூடாது என்று இண்டியன் பினல் கோட்டில் அதாவது கிரிமினல் சட்ட புஸ்தகத்தில் ஒரு செக்ஷன் போட்டு அதற்கு ஒரு வருஷ தண்டனை என்றும் போட்டு விட்டதனாலேயே அந்தப்படி அசிங்கப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண்டொருவரைத் தண்டித்து விடுவதாலேயே அசிங்கப்படும் குணத்தை மக்களிடம் இருந்து மாற்றிவிட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
இது போலவே தான் இந்துக்களில் மற்றொரு சாரார் தங்கள் மதத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் தங்களைச் சூத்திரர் என்று யாரும் கூப்பிடக் கூடாது என்றும், சூத்திர ரென்றால் ஆத்திரம் கொண்டடி என்றும் சொல்லுகிறார்கள், எழுதி ஆங்காங்கு தொங்க விடுகிறார்கள். இதுவும் பேதத்தன்மை என்றே சொல்வேன். ஏனெனில், தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளும் எவனையும் (அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனைச் சூத்திரன் என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. அழைப்பவன் மூடனேயாவான். ஏனெனில், இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதானது பார்ப்பனரொழிந்து ஏனையோருக்கும் உரித்தானது என்பதும், இந்துவாய் இருக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட்பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் (பறையனையும்) ஒப்புக் கொண்டே இருக்கின்றது.
அன்றியும் இந்த முறையானது இந்துமத உட்பிரிவுச் சமயங்களாகிய சைவத்தின் சிவபுராணத்திலும், பெரிய புராணத்திலும், 63 நாயன்மார்களிலும், மற்றும் சங்கராச்சாரிகளிலும் இருக்கிறது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்தச் சைவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே வைணவத்திலும் அவர்களது ஆழ்வாராதிகளிலும், பகவத் பாகவத பக்தர்களிலும், நாலாயிரப் பிரபந்தம், இராமாயண முதலிய இதிகாச புராணங்களிலும் ஆதாரம் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த வைணவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்து மதத்திற்கு ஆதாரமான வேத சாஸ்திரம், ஸ்மிருதி முதலியவைகளிலும் இருப்பதோடல்லாமல் பகவான் வாக்குகளிலும், ரிஷிகள் வாக்குகளிலும் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்கின்ற இந்து என்பவன் யோக்கியனாகவோ, அல்லது அறிவுடையனாகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
ஆகவே, நம்மவர்கள் தங்களுக்குச் சூத்திரப்பட்டமும், தீண்டாதார் பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமே யாகும். ஏனெனில், எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் சூத்திரப்பட்டமும், பஞ்சமப் பட்டமும் தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை.
இந்தியாவில் இந்துமதம் உள்ளவரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்துமத வேதமும் சாஸ்திரமும், இராமாயணம், பாரதமும், பெரிய புராணம் சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ளவரையிலும் சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்துவிடுவது என்பது முடியவே முடியாது.
“எவனெழுதினாலென்ன என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. (குடிஅரசு 25.10.1931)