அய்யாவின் அடிச்சுவட்டில்…. – 98

ஜூலை 16-31 2013

இயக்க வரலாற்றில் ஒரு பொன்னாள்

– கி.வீரமணி

 

சென்ற இதழில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுயமரியாதை இயக்கப் பொன்விழாவின் சிறப்புகளைப் பற்றித் தொடங்கியிருந்தேன்.அந்த இனிய நினைவுகளைத் தொடர்கிறேன். பந்தல் அழகுக்கே ஒரு கவி பாடலாம்!

1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்திலேயும், கிட்டத்தட்ட பொன்விழாவை நெருங்கும் 1973ஆம் ஆண்டிலேயும் தந்தை பெரியார் தோற்றம் எப்படி இருந்தது என்பதை அர்த்தபுஷ்டியோடு காட்டும் வகையில் பந்தலின் முகப்பிலே அய்யாவின் அந்த   இள வயதுத் தோற்றம் அழகுற வண்ணந்தீட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அஞ்சாநெஞ்சன் அழகிரி, அன்னை நாகம்மையார், நீதிக்கட்சியின் நெடுந்தூண் சர்.பி.தியாகராயர், கருத்துக் கருவூலம் கைவல்யம், பார்-_அட்_லா பன்னீர்செல்வம் ஆகியோரது உருவப்படங்கள் பந்தலின் முன்புறத்திலே தோன்றி புது முறுக்கை ஏற்படுத்தின.

அரங்கமோ அஞ்சா நெஞ்சன் அழகிரி பெயர் தாங்கி பெயருக்கேற்ற பொருத்தமுடன் எடுப்புக் காட்டி நின்றது. தந்தை பெரியார் அவர்களின் பிரம்மாண்டமான சிங்கத் தோற்றம் மேடைக்குப் பெருஞ் சிறப்பையூட்டியது.

22–_1_1976 அன்றுதான் நிகழ்ச்சிகளின் தொடக்கம் என்றாலும், அதற்கு முதல் நாளே கறுப்புச் சட்டைகளின் முற்றுகை மிகத் தீவிரமாக நடந்தது.

திருவாரூர் கழகத்தோழர் வகாப் கடவுள் மறுப்பு முழக்கத்தை முழங்க முதல் நிகழ்ச்சியாக 22_1_1976 காலை 11 மணிக்கு திராவிடர் மாணவர் கழக மாநாடு தொடங்கியது. தஞ்சை என்.இரகுபதி, நெய்வேலி தோழியர் செல்வி மீரா, சென்னை சத்தியேந்திரன், சிவகங்கை இன்பலாதன், வடலுர் துரை_சந்திரசேகரன், தூத்துக்குடி தீர மகராசன், இராசபாளையம் இராசேந்திரன், குடந்தை வள்ளிநாயகம், திருச்சி நடராசன், கும்முடிப்பூண்டி ஜெயகிருட்டிணன், மேலூர் மகேந்திரன் ஆகியோர் எழுச்சி சங்கநாதம் செய்தனர்.

திராவிடர் மாணவர் கழகம் தொடங்குவதற்கு ஆரம்பகட்டத்தில் காரணமாக இருந்த சுயமரியாதைச் சுடரொளிகள் தவமணிராசன், கருணானந்தம், பூண்டி கோபால்சாமி ஆகியோருக்குப் பொருத்தமாக மாணவர் கழக மாநாட்டில் கருப்புச் சால்வை போர்த்திய கழகத் தலைவர் அம்மா அவர்கள் சுயமரியாதை இயக்க விருதும் வழங்கி சிறப்புச் செய்தார்கள்.

சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தர வடிவேலு அவர்களும் கவிஞர் கருணானந்தம் அவர்களும் பண்டைய நினைவுகளைப் பசுமை-யாகப் படைத்தனர். சுந்தர-வடிவேலு அவர்கட்கு கழகத் தலைவர் அம்மா அவர்கள் பொன்விழா விருது அளித்தார். தீர்மானங்களை முன்-மொழிந்து மாணவர் தோழர் பொன்னேரி பாரதிதாசன், ஒரத்தநாடு அழகிரிசாமி, என்.கல்யாணசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். பின்னர் தஞ்சை மாணவர் நடராசன் நன்றி கூற மாணவர் மாநாடு முடிவுற்றது.
மாலை 5 மணிக்கு பழம் பெரும் சுயமரி-யாதை வீரர் நாகை என்.பி.காளியப்பன் தலைமையில் பொன்விழா தொடங்கியது. தலைவர், அன்னை நாகம்மையார் படத்தைத் திறந்து வைத்தார்.

கழகத் தலைவர் அம்மா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தி.க. தலைவர்கள் தர்மபுரி எம்.என்.நஞ்சையா, ஆம்பூர் ஏ.பெருமாள், காஞ்சி சி.பி.இராசமாணிக்கம்,  மாவட்ட செயலாளர் அழகிரி, இராசபாளையம் வ.பொன்னுசாமி, வில்லி-வாக்கம் அ.குணசீலன், நெல்லை டி.ஏ.தியாகராசன் ஆகியோர் உரை ஆற்றினர்.
ஆரம்ப நாள் சுயமரியாதை வீரர் வி.வி.இராமசாமி சொற்பொழிவாற்றினார். தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து அன்பில் தர்மலிங்கம் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களது படத்தைத் திறந்து வைத்து அமைச்சர் இராசாராம் அவர்களும், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் படத்தைத் திறந்துவைத்து கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும், மாயூரம் நடராசன் படத்தைத் திறந்து வைத்து அமைச்சர் அன்பழகன் அவர்களும் உரை ஆற்றினார்கள். ஏ.வி.பி.ஆசைத்தம்பி பகுத்தறிவு முழக்கம் செய்தார். இவர்கள் அறுவருக்கும் கழகத் தலைவர் அம்மா அவர்கள் சுயமரியாதை இயக்கப் பொன்விழா விருது அளித்துச் சிறப்பித்தார்கள். தஞ்சை மாவட்ட தி.க. அமைப்பாளர் மாயூரம் என்.வடிவேல் நன்றி கூற நிகழ்ச்சி முடிவுற்றது. இரவு, ஊட்டி அன்னை நாகம்மையார் குழுவினர் நடித்த கருப்பு அலைகள் எனும் நாடகம் சிறப்பாக நடைபெற்றது.

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு 23_1_1976 காலை 10 மணிக்குத் தொடங்கியது. மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.டி.நடராசன் எம்.பி. தலைமை தாங்கினார். தஞ்சை ப.க. தலைவர் அண்ணாமலை வரவேற்புரை ஆற்றினார். தலைவரை முன்மொழிந்து தஞ்சை இரத்தினகிரி, வழிமொழிந்து ப.க. தோழர்கள் நாகை ப.உத்திராபதி மாயூரம் ப.சவுந்தரராசன், கீரமங்கலம் தியாகராசன், திருவண்ணாமலை மூர்த்தி, மதுரை மேலூர் திருமலைராசன், எண்ணூர் சிங்கராசன், ஆவடி குமாரசாமி, செய்யாறு செங்கல்வராயன், அருப்புக்கோட்டை புலவர் கண்ணையன், தேவகோட்டை பெருவழுதி,, புளியங்குடி பாண்டியன், வேதாரண்யம் கிருட்டிணமூர்த்தி உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சந்திரசேகர், மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பகுத்தறிவுப் பொன்னுரை ஆற்றினார்கள்.

பேராசிரியர் இறையன், திண்டுக்கல் வழக்குரைஞர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உரை யாற்றினர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது படத்தைத் திறந்து வைத்து புலவர் ந. இராமநாதன் உரை-யாற்றினார். ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பண்டரிநாதன், பேரா-சிரியர் மா. நன்னன், டாக்டர் ஜெயவேலு, பூண்டி பி.குமாரசாமி,   கழகத் தலைவர் அம்மா ஆகியோருடன் நானும் உரையாற்ற, மதிய இடைவேளையின்றி மாலை 5 மணிக்கு மாநிலப் பகுத்தறி வாளர் கழக மாநாடு முடிவுற்றது. காரைக்குடி திராவிடக் கலை அரசு கலா அறிவுக்கொடி  கலைநிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

சுயமரியாதை இயக்கப் பொன்விழா பிற்பகல் நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்குத் தொடங் கியது. முகவை மாவட்ட (கிழக்கு) தி.க. தலைவர் வழக்குரைஞர் இரா. சண்முகநாதன் வரவேற்புரை ஆற்றினார். தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

தோழர்கள் சோழங்கநல்லூர் அந்தோணிசாமி, ஈரோடு நாத்திகக் குப்புசாமி, மாவட்ட தி.க. தலைவர்கள் திருச்சி டி.டி.வீரப்பா, தென்-சென்னை எஸ்.பி. தெட்சிணாமூர்த்தி, மேற்கு முகவை மாவட்டம் சூ.ஆ.மு. முத்து முருகன், தென்ஆற்காடு நா. நடேசன், மதுரை வாடிப்பட்டி எஸ். சுப்பையா, மாவட்ட தி.க. செயலாளர்கள் சேலம் வெங்கடாசலம், செங்கற்பட்டு கங்காதரன், தென்ஆற்காடு இரா. கனகசபாபதி, வடஆற்காடு ஏ.டி.கோபால் மற்றும் தஞ்சை மாவட்ட தி.க. துணைத்தலைவர்கள் குடந்தை டி. மாரிமுத்து, கொரக்குடி வே. வாசுதேவன், திருவாரூர் திருமதி சுப்புலட்சுமிபதி, புதுக்கோட்டை இராம. கல்யாணசுந்தரம், உள்ளிட்டோர் உரை-யாற்றினர். அஞ்சாநெஞ்சன் அழகிரி படத்தைத் திறந்து வைத்து இரெ. இளவரி அவர்கள் உரையாற்றினார். கழகத்தலைவர் அம்மா, அமைச்சர் இராசாங்கம், அமைச்சர் டாக்டர் நாவலர் ஆகியோர் உரையாற்றினர். அமைச்சர் இருவருக்கும் கழகத்தலைவர் அம்மா அவர்கள் பொன்விழா விருது அளித்துச் சிறப்பித்தார்கள். தஞ்சை மாவட்ட தி.க. துணைத்தலைவர் தஞ்சை இரா. இராசகோபால் நன்றி கூற நிகழ்ச்சி இரவு 11.15 மணிக்கு முடிவுற்றது. செய்யூர் முரசொலி முகிலன், ஆமூர் முனியாண்டி குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை இரவு 2 மணி வரை நடைபெற்றது. அதன்பின் ஒரத்தநாடு கழகத் தோழர்கள் அளித்த யார் துரோகி? என்ற நாடகம் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்வலம்

24.1.76 அன்று காலை 10 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சுயமரியாதை இயக்கப் பொன்விழா ஊர்வலம் தஞ்சை மேரிஸ் கார்னரிலிருந்து புறப்பட்டது. தந்தையின் கட்டுப்பாடுமிக்க கருப்புச்சட்டை ராணுவக் கவசப் படை இதோ அணிவகுக்கிறது பார் என்று கண்டோர் வியந்து கூறும் வண்ணம் ஊர்வலம் அமைந்-திருந்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் முன்வரிசையில், – கழகத்தலைவர் அம்மா அவர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டார்கள். ஆயிரமாயிரம் கழக வீரர்கள் – அவர்களின் கரங்களிலேதான் எத்தனை கம்பீரமான கழகக் கொடிகள் – கருத்து முழக்கப் பதாகைகள்.

தத்துவ ஆசானாம் அய்யா அவர்களின் உருவப்படம் அழகிய வேலைப்பாடமைந்த டிரக்கில் எடுத்து வரப்பட்டது. பொன்விழாவைக் குறிக்கும் வகையில் அய்யா அவர்கள் கண்ட போர்க்களங்கள் மயிர்க்கூச்செறியும் வரலாற்றுச் சம்பவங்கள் கொண்ட 50 எழில் வண்ண ஓவியங்கள் 50 ரிக்ஷாக்களில் எடுத்து வரப்பட்டன. சாலையின் இருமருங்கிலும் ஆயிரமாயிரம் பொதுமக்கள் தங்களை வாழ வைத்த இயக்கத்தின் பொன்விழா எழிலைக் கண்டு வியந்துபோயினர். ஊர்வலம் தந்தை பெரியார் சிலைக்கருகே வந்தபோது உணர்ச்சிப் பேரலையாய் உருவெடுத்து நின்றது. அங்கு அமைக்கப்பட்ட மேடை ஒன்றில் அம்மா அவர்கள் நின்று கருஞ்சட்டைப் படை அணிவகுப்பை ஏற்று, தம்மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார்கள். இடைவேளைகளில் ஊட்டி தந்தை பெரியார் இசைக்குழுவினர், மாயூரம் செல்வி அறிவுக் கொடி குழுவினர், இறுதியாக மதுரை பி.எஸ். செல்வா கலைத்தூதன் குழுவினர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தவண்ணம் இருந்தன.

மாலை 5 மணிக்குப் பொன்விழா நினைவு நிகழ்ச்சிகள் தொடங்கின. அய்யா அளித்த அரிய கருவூலமாம் அம்மா அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கப் பொன்விழாவிற்குத் தலைமை ஏற்றார்கள். நான் வரவேற்புரை ஆற்றினேன்.

தோழர்கள் காஞ்சி ஏ.ஆர். வெங்கட்ராமன், பொத்தனூர் க. சண்முகம், கோவை கே. இராமச்சந்திரன், தாராபுரம் சேதுபதி, கரூர் கே.கே. பொன்னப்பா, தர்மபுரி சு. தங்கவேலு, நாகர்கோவில் சி.எம். பெருமாள், விழுப்புரம் வழக்குரைஞர் நா. தயாநிதி, வலங்கை கு. கலைமணி, காரைக்கால் சி.மு. சிவம், நாகை எஸ். கணேசன், திருவாரூர் சுப்பிரமணியம், சென்னை மு.போ. வீரன், நாகர்கோவில் வழக்குரைஞர் வி.எஸ். கிருஷ்ணன், காரைக்குடி என்.ஆர். சாமி, திருச்சி என். செல்வேந்திரன், தஞ்சை எஸ். நடராசன் எம்.எல்.ஏ., நகரமன்றத் தலைவர் எஸ். பெத்தண்ணன், பெங்களூர் அர்ச்சுனன், பம்பாய் சோமசுந்தரம், சிறுவன் சித்தார்த்தன், கா.மா. கோவிந்தராசன் உள்ளிட்டோர் கொள்கை முழக்கமிட்டனர். உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் அவர்களது படத்தைத் திறந்து வைத்து அமைச்சர் மன்னை ப. நாராயணசாமி உணர்ச்சி ததும்ப உரையாற்றினார். அமைச்சர் அவர்கட்கும், இயக்கத்தின் பழம்பெரும் வீரர்கட்கும் பொன்விழா விருதை கழகத்தலைவர் அவர்கள் அளித்தார்கள். முதல் விருதை மன்னை அவர்கள் மூதாட்டி காவேரி அம்மாள் அவர்கட்கு அளித்தார்கள். நிறைவாக நானும் கழகத்தலைவர் அம்மா அவர்களும், ஆற்றிய உரைகள் மாநாட்டிற்கு முத்தாய்ப்பாக அமைந்தன. கழகத்தின் பொருளாளராக இருந்த மானமிகு கா.மா. குப்புசாமி நன்றியுரையாற்ற விழா நிறைவு பெற்றது. இயக்க வரலாற்றில் _ ஒரு பொன்னாள் என்றே சொல்லலாம்.

இராமாயணப் பாத்திரங்கள் மீது தடை செல்லாது – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ராமாயணா எ ட்ரு ரீடிங் (Ramayana-A Ture Reading) (ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலின் மொழிபெயர்ப்பு) என்ற ஆங்கில நூலையும் அதன் இந்தி மொழிபெயர்ப்பையும் உத்திரப் பிரதேச மாநில அரசு தடை செய்தது. இதை எதிர்த்து உத்திரப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தடை செல்லாது என்று அது தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை எதிர்த்து உ.பி. அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டும், உ.பி. அரசு இந்த நூலுக்குத் தடை விதித்தது செல்லாது என்று தீர்ப்புக் கூறி அப்பீலை தள்ளுபடி செய்தது. நீதிபதி கிருஷ்ண அய்யர் அவர்கள் அளித்த தீர்ப்பின் விவரம் இங்கே தரப்படுகிறது. 1975 செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் பிறந்தநாளன்று இந்தத் தீர்ப்பு வந்தது. ஆனால், அன்றைய தினம் இத்தீர்ப்பை விடுதலையில் வெளியிடக் கூடாது என்று தணிக்கை அதிகாரிகள் கூறிவிட்டனர்.

தீர்ப்பு விவரம்

சில வழக்குகள் சமுதாய ஒழுங்கீன முறை-கேடுகளுக்கு அப்பாற்பட்டதாக முகப்பிலேயே இருக்குமென்றாலும், ஜனநாயகத்தின் அடிப்படை-யான சுதந்திர உரிமைகளை அசைக்கும் வழக்காக இந்த வழக்கு அமைந்துள்ளது.

உத்திரப் பிரதேச அரசின் முறையீடு

இந்த மேல்முறையீட்டு வழக்கானது உத்திரப் பிரதேச அரசு பிரிவு 99A குற்ற விசாரணை முறையீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் பகுத்தறிவு இயக்கத்தின் தந்தையும் அரசியல் மேதையுமான பெரியார் (ஈ.வெ.ரா.) அவர்களின் ராமாயணத்தை ((Ramayana-A Ture Reading) ஆங்கிலத்திலிருந்து இந்திப் பதிப்பாகிய புத்தகத்தை அரசாங்கம் பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட ஆணை சம்பந்தப்பட்டதால் உயர் நீதிமன்றத்தின் தனி அனுமதி பெற்று வந்திருக்கிறது.

உத்திரப் பிரதேச அரசின் முறையீட்டுப்படி இந்தப் புத்தகமானது வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு இந்தியக் குடிமக்களின் ஒரு பகுதியாகிய இந்துக்களுடைய உணர்ச்சிகளின் புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டுமென்று வெளியிடப்பட்டதால் இந்திய தண்டனைச் சட்டம் 295 பிரிவு(A) பிரகாரம் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றம் ஆகும். இந்த அறிவிப்பு ஆணையின் பிற்சேர்க்கை சம்பந்தப்பட்ட புத்தகத்தின் ஆங்கில, இந்திப் பதிப்புகளில் குறிப்பிட்ட பக்கம், வரிகளில் உள்ள செய்திகள் சமுதாயத்தின் ஒழுக்க உணர்ச்சிகளைத் தகர்ப்பதாகத் தெரிவித்து இருக்கிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புத்தக வெளியீட்டாளரான எதிர்மனுதாரர் உயர் நீதிமன்றத்திற்கு மனு செய்து கொண்டதன் பேரில், அரசின் அறிவிப்பு ஆணையை நீதிபதிகளின் குழு ஒன்று செல்லுபடியாகாதென தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட உத்திரப் பிரதேச அரசு உயர் நீதிமன்றத்தின் தனி உரிமை பெற்று வழக்கை அதன் வழக்குரைஞரைக் கொண்டு முறையிட்டது. வழக்குரைஞரின் வாதப்படி அரசின் அறிவிப்பாணை செல்லுபடி ஆகக்கூடியது எனவும், தள்ளுபடி செய்யப்படுவதற்கான எந்தக் காரணமும் இல்லை எனவும், இந்தப் புத்தகமானது பெரும்பான்மையான இந்துக்களின் புனித உணர்ச்சிகளைப் புண்படுத்துவதாகவும், கடவுள் அவதாரங்களான ராமன், சீதை மற்றும் ஜனகன் முதலியோர்களை இழிவுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. உயர் நீதிமன்றம் பெரும்பான்மை-யான நீதிபதிகளின் தீர்ப்புப்படி அரசின் அறிவிப்பு ஆணையை பிரிவு 99A  குற்றமுறை விசாரணைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்படுவதற்-கான காரணங்களை அரசு தெளிவாக்கவில்லை என்ற ஒரு காரணத்தினால் மட்டும் அரசுக்கு எதிரிடையாக தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.

பறிமுதல் செய்வதற்கான விளக்கம்

பிரிவு குற்றமுறைப் பிரிவு 99A  தெளிவாக ஆராயப்பட்டால் அரசின் அறிவிப்பாணையின் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ளலாம். சட்டத்தின் கூறுகளை உற்று நோக்குங்கால், புத்தகம் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்களை, மூன்று தலைப்புகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அச்சட்டத்தின் பிரகாரம் எந்த ஒரு புத்தகமோ அல்லது எந்த ஒரு ஆவணமோ எந்த ஒரு செய்தியை உள்ளடக்கியிருந்தாலும் அந்தச் செய்தியானது இந்தியக் குடிமக்களிடையே வேற்றுமை உணர்ச்சிகளை வளர்க்கும் விதத்திலோ, பகைமை யை வளர்க்கும் விதத்திலோ இருந்தாலும், சம்பந்தப்பட்ட அரசின் கருத்தானது அவைகளைப் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரண விளக்கங்களைக் கொண்டிருப்பதாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட மாநில அரசு அறிவிப்பு  ஆணையின் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென உத்தரவிட வேண்டும்.

சட்டத்தில் மூன்றாவது பிரிவாகக் காட்டப்பட்டுள்ள செய்தி விளக்கங்கள் அறிவிப்பு ஆணையில் தரப்பட்டுள்ளன என்பதனை முடிவு செய்தல் வேண்டும். உயர் நீதிமன்றம், அரசின் ஆணையில் இந்த விளக்கங்கள் தரப்படவில்லையென தள்ளுபடி செய்யப்பட்டதானது சரியில்லை என அரசு தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞர் வாதித்து, அரசு ஆணையின் பிற்சேர்க்கையில் அது விளக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

– நினைவுகள் நீளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *