சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கல்

ஜூலை 16-31 2013

பார்ப்பானீயத்தின் அரசியல் ஆதிக்க வரலாறு

நூல்: இந்துமதக் கொடுங் கோன்மையின் வரலாறு

ஆசிரியர்: தவத்திரு தர்மதீர்த்த அடிகளார்

வெளியீடு: சாளரம், 2/1758 சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ,

மடிப்பாக்கம், சென்னை – 600 091.

செல்பேசி எண்:94451 82142

பக்கங்கள்: 272,  விலை: ரூ.120/-

பரமேஸ்வர மேனன் என்னும் இயற்பெயர் கொண்ட தவத்திரு தர்மதீர்த்த அடிகளார், மலையாளத்தில் சுவாமி தர்மதீர்த்த மகராஜ் என்றும் ஆங்கிலத்தில் சுவாமி தர்மதீர்த்த என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குருவாயூரில் 1893ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் தந்தையுடன் கோயிலுக்குச் சென்றபோது, அங்கிருந்த புரோகிதரை வணங்கச் சொல்லி காணிக்கை செலுத்த சொன்னபோது மறுத்தவர்.

வழக்குரைஞரான அடிகளார், நாராயண குருவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, பின்பு இந்தியா முழுவதும் நடந்தே புனிதப் பயணம் மேற்கொண்டார். மூடநம்பிக்கை, ஜாதிவெறி, சுரண்டல், அநீதி இவற்றின் மொத்த வடிவமாக இந்துக் கோயில்கள் இருப்பதைப் புரிந்துகொண்டார். இந்துமதம் தொடர்பான பல்வேறு நூல்களைப் படித்து ஆய்ந்து, 1941இல் ‘The Menace of Hindu Imperialism’ என்னும் நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

இரு பதிப்புகள் வெளிவந்தபின், History of Hindu Imperialism என்று தலைப்பை மாற்றினார். ஆங்கில நூலின் அடிப்படையில் 1969ஆம் ஆண்டு அடிகளாரே ஹைந்தவ துஷ் பிரபுத்துவச் சரித்திரம் என்னும் தலைப்பில் மலையாளத்தில் எழுதினார்.

பார்ப்பன ஆதிக்கக் கொடூரத்தால் சூழப்பட்டுள்ள இந்து மதத்தோடு போராடி, 1949ஆம் ஆண்டு இந்து மதத்தைவிட்டு வெளியேறி இந்து மக்களை விடுதலைப்படுத்தும் நோக்கத்தோடு தமது 85 வயதுவரை பாடுபட்டார்.

மலையாள மொழியிலிருந்து தமிழில் வெ.கோ.பாலகிருஷ்ணன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்துத்துவக் கொடுங்கோன்மை, அதாவது பிராமண மத வரலாறு, பிராமணக் கொடுங்கோன்மை, பிராமண மதம் எவ்வாறு புத்த மதத்தை அழித்தது? பிராமண மதம் தேசிய இயக்கத்தை நொறுக்கியது எப்படி, பிராமண மதம் சிவாஜியின் பேரரசை வீழ்த்தியது என்பது போன்ற 24 தலைப்புகளில் அலசி ஆராயப்பட்டுள்ள இந்நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே….

பிராமணர்கள் தட்சிணை (காணிக்கை) வாங்க எப்போதுமே தயார். சோமபானம் (மது) அருந்த சதா விரும்புவார்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். தன் விருப்பம்போல எங்கும் சுற்றித் திரிய விரும்புகிறவர்கள். அவர்கள் ஒரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள்.  (Aitreya Brahmana VII : 29, Page 201)  மந்திர தந்திரங்களின் வாயிலாக மக்களை அடிமைப்படுத்துவதிலும், மூடப்பழக்கவழக்கங்களைப் புகுத்துவதிலும், கட்டுக் கதைகளைப் பரப்புவதிலும் ஈடுபட்டு, மரியாதை, நீதி போன்றவற்றைப் பாராமல் சதா தின்பதும் குடிப்பதும் கூத்தடிப்பதுமாக இருக்கும் ஒரு ரகசியக் கும்பல்தான் புரோகிதர்கள்! இந்தோ _ ஆரியர்களுக்கிடையே இவ்வாறுதான் சாதி வேற்றுமை தலைதூக்கியது.

யாகம் நடத்துகின்ற புரோகிதர்களைப் பிராமணர்கள் என்று அழைத்தனர். பிற்காலத்தில் அது அவர்களுடைய சாதிப் பெயராகிவிட்டது. புரோகிதத்தை ஒரு பரம்பரைத் தொழிலாக மாற்ற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டு அந்தக் காலத்தில் யாரும் மிரளவில்லை. அரச பதவி பரம்பரைச் சொத்தாக இருந்தது. சில கலைகளும் தொழில்களும் பரம்பரை பரம்பரையாக முன்னரே இருந்திருக்கக்கூடும். சாதி என்றால் என்னவென்ற உணர்வுகூட அப்போது யாருக்கும் கிடையாது. எனவே புரோகிதர்களின் இந்த முயற்சியால் ஏற்படும் பயங்கரமான கெடுதல்களைத் தொலை-நோக்குடன் யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. பிராமணர்கள் மிக வேகமாக ஒரு அரசியல் சக்தியாக உருவாகுவார்கள் என்றும், அவர்களுடைய கபடதந்திரங்களின் வாயிலாக சத்திரியர்களுக்கு ஆட்சி அதிகாரம் பறிபோய்விடும் என்றும் மன்னர்கள் எதிர்பார்க்க-வில்லை. புரோகிதர்களின் தந்திரங்களால் தங்களுடைய சுதந்திரம் பறிபோய்விடும் என்று மக்களும் அஞ்ச-வில்லை. புரோகிதர்கள்கூட இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்து செய்திருக்க மாட்டார்கள்போலும். அவர்கள் படிப்படியாக அவர்களுடைய தீய ஆசைகளோடு முன்னேறிக் கொண்டிருந்தனர்.

புரோகிதர்களின் அனைத்து மேன்மைகளும் யாகங்களை ஒட்டித்தான் இருந்தன. யாகங்கள் இல்லாவிட்டால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்திருப்பார்கள். ஆனால் இந்தக் குறுநில மன்னர்களுக்கு யாகங்களில் அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை. குறுநில மன்னர்களின் பலம் பெருகியது. இது ஆரிய மன்னர்களை அச்சப்படுத்தியது. எனவே சாதி வேற்றுமைகளையும் விதிகளையும் ஏற்படுத்தி, குறுநில மன்னர்களையும் மக்களையும் ஆரியப் பண்பாட்டிற்கு வெளியே இருப்பவர்களான குடியுரிமை இல்லாதவர்களான பெரும்-பான்மையான மக்களை சூத்திர சாதியாக கீழ்மைப்படுத்த புரோகிதர்கள் மேற்கொண்ட முயற்சியை ஆரிய மன்னர்களும் ஆதரித்தனர். அக்காலத்திலும் அதற்குப் பிறகும் அநேக நூற்றாண்டுகளிலும் புரோகிதர்கள் கட்டி-யெழுப்பிய சாதி வேற்றுமை முறைகளின் தலையாய அனைத்துக் குறிக்கோளும், இந்த நாட்டு மக்களைக் கல்வியும் அதிகாரமும் உரிமையுமற்ற கீழ்த்தர மக்களாக நிலைநிறுத்த வேண்டும் என்பதே ஆகும்.

பெண்ணே எழு, இறந்துவிட்ட ஒருவருடன் ஏன் படுத்துக் கிடக்கிறாய்? உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் உலகிற்கு வந்து, உன்னை மணந்து கொள்ள விரும்பி உன்னுடைய கரம் பற்றும் ஒரு ஆண்மகனின் மனைவியாக இரு (Rig Vedam X-18-8) கொடிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நியாயப்படுத்த புரோகிதர்கள் ரிக் வேதத்தையே திருத்தி எழுதவும் தயங்கவில்லை. ரிக் வேதத்தில் (X-18-7)பெண்கள் ஊர்வலமாக மயானத்திற்குச் செல்வதைப்-பற்றி குறிப்பிடப்-பட்டுள்ளது.

விதவையாகி விட்டதனால் எந்தத் துயரமும் இந்தப் பெண்களுக்கு வராமலிருக்கட்டும். இந்தச் சூத்திரத்தில் அக்ரே என்ற ஒரு வார்த்தை இருந்தது. வங்காளத்துப் புரோகிதர்கள் அதை அக்னே என்று திருத்தி உடன்கட்டை-யேறும் வழக்கத்திற்கான பிரமாணமாக மாற்றி-விட்டனர்.

கெட்ட குணமுள்ள புரோகிதர்கள் என்னென்ன நீசச்செயல்கள் புரிவார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். இதோ இங்கு ஒரு சிறு வார்த்தையைப் புரட்டி, பொருளையே மாற்றித் தவறாகப் பயன்படுத்தி, ஆயிரமாயிரம் பெண்களின் உயிர்ப்பலிக்குக் காரணமாக்கிவிட்டனர். (Max Muller) மத விஷயங்களிலும் கல்வி கற்பதிலும் பிராமண பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது. அவர்களும் சூத்திரர்களைப் போன்று ஆகிவிட்டனர். சுதந்திரமும் சொத்துரிமையும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. இவ்வாறு சொந்த மனைவிகளைக்கூட அடிமைப்படுத்த புரோகித இனம் சற்றேனும் தயங்கவில்லை.

மன்னரின் அரசியல் அதிகாரம் பிராமணனின் ஆன்மீகத் தலைமைக்குக் கீழ்ப்படிந்ததுதான் என்றும், பிராமணர்களின் மீது வரி விதிக்கவோ அவர்களைத் தண்டிக்கவோ யாருக்கும் அதிகாரமில்லையென்றும் அவர்கள் மேலும் கூறிவந்தனர். அவர்களுக்கென்றே உரிய மத நடைமுறைகள், சாதிச் சின்னமாக அவர்கள் அணியும் பூணூல் போன்றவை அவர்களை ஒரு வேறுபட்ட இனமாக்கிவிட்டன. அவர்களைச் சாராதவர்களையெல்லாம் அவர்கள் நிந்தனை செய்யவும் துவங்கினர். ஏனைய பொதுமக்கள் பிழைப்புக்காக மேற்கொண்டுவரும் விவசாயம், கைவேலை தொழில் போன்றவை தமது மதிப்புக்கு ஏற்றதில்லை என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.

இவ்வாறு இந்த நாட்டைச் சுரண்டிக் கொழுத்து வாழும் ஒரு ஆதிக்க வர்க்கமாக பிராமணர்கள் ஒன்று திரண்டனர். மதத்தையும் கல்வியையும் தங்களுடைய இரகசிய உடைமை யாகப் பாதுகாப்பது அவர்களுடைய நோக்கமாக இருந்தது. கல்வியை வளர்ப்பதும், ஒற்றுமை உணர்வைப் பெருக்குவதும் அவர்களுடைய கொள்கைக்கு மாறானதாகும். சாதி வேற்றுமை அமைப்பை நிறுவுவது, புரோகித ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது, பண்பாடு சுதந்திரம் மூலமாக வளர்ந்து முன்னேற்றம் காண விழையும் மக்களின் விழைவுகளைத் தடுப்பது, புரோகிதத்தைச் செல்வம் ஈட்டும் ஒரு தொழிலாக மாற்ற மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்ப்பது போன்றவைதான் அவர்களுடைய தேவையும் விருப்பமுமாக இருந்தன.

யாருக்கிடையில் போர் நடைபெறுகிறது, சத்திரிய மன்னர்களா? சுதேசி குறுநில மன்னர்களா? வெளிநாட்டினரா? யார் யார் வெல்லப் போகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் பிராமணர்கள் கவலைப்பட-வில்லை. யாராக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்துக்கு ஆதரவானவர்களின் பக்கம் சேருவதுதான் அவர்களுடைய கொள்கையாக இருந்தது. மகாபாரதப் போரில் பகவத் கீதையின் கோட்பாடுகளுக்காகப் போரிட்ட கிருஷ்ணனின் தேசிய அணி வெற்றிபெற்றது என்றாலும் போரில் ஒருவரை ஒருவர் கொன்று மடிந்து போனவர்களெல்லாம் சத்திரிய மன்னர்களும் அவர்களுடைய மக்களும்தான். பிராமணர்களுக்கு அழிவேதும் ஏற்படவில்லை. கிருஷ்ணன் அர்ஜுனன் ஆகியவர்களின் காலத்திற்குப் பிறகு சில ஆண்டுகளுக்குள்ளேயே பயங்கரமான ஒரு கலகச் சூழ்நிலை நாடெங்கிலும் பரவியது. அது பிராமண ஆதிக்கத்திற்கு மேலும் வசதியாக அமைந்துவிட்டது. பாரதப் போருக்குப் பிந்திய மூன்று நான்கு நூற்றாண்டுகளில் பிராமணர் ஆதிக்கப் பிரச்சாரம் பலமாக நடைபெற்றது.

புத்த பிட்சுக்களாக மாறிய பிறகும் சாதி மனப்பான்மையைக் கைவிடாமல், தாங்கள் பிராமணர்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டு அடிக்கடி கூட்டத்திலிருந்து விலகி நின்றனர். ஃபாஹியான் என்ற சீனப்பயணி கீழ்வருமாறு கூறியிருக்கிறார்: புத்த தர்மத்தைப் பிரச்சாரம் செய்ய தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த பெரும் பண்டிதரான ஒரு பிராமணர் பாடலிபுத்திரத்தில் இருந்தார். மன்னர் அவரைச் சந்திக்கச் செல்லும்போது குருவின் கைகளைத் தொட்டு வணங்குவார். உடனே அந்தப் பிராமணன் அங்கிருந்து சென்று தலை முதல் பாதம் வரை தண்ணீரில் தோய குளிப்பது வழக்கம். (Havel) ஒரு புத்த பிட்சுவான பிறகும் பிராமணன் அவனுடைய தீண்டாமையைக் கைவிடவில்லை.

புத்தமதத்தின் எல்லையற்ற மனித நேயச் சமத்துவத்தையும், பிராமணனின் கொடுமையான சாதிப் பாகுபாட்டுணர்வையும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். புத்த தர்மத்திற்கு நேர்மாறான இந்த சாதியாச்சாரங்களைப் புத்த மடங்களிலேயே பிராமணர்கள் கடைப்பிடித்தனர் என்பதைப் பார்க்கும்போது, அவர்களுடைய புரோகிதத் தந்திரங்களையும் அங்கு தங்குதடையின்றி மேற்கொண்டிருப்பார்கள்தானே! உண்மையில் அதுதான் நடைபெற்றது.

புத்தசங்கங்களில் (மடங்கள்) புகுந்து நிர்வாகத்தைக் கைப்பற்றிய பிராமணப் புரோகிதக் கும்பலால் வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்தன. பெரும்நிலப் பிரபுக்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் ஏராளமாக நன்கொடை பெற்று நடைபெறும் புத்தம-தாஸ்ரமங்களில், குறிப்பிடத்தக்க வேலை எதுவுமின்றி சுகவாழ்க்கையை மேற்கொள்ளும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருங்கூட்டமாக புத்தபிட்சுக்கள் மாறினர். புத்தரையும் விக்கிரகங்களையும் பூஜிப்பது அவர்களுடைய மதத்தின் நடைமுறையாகிவிட்டது.  (R.C.Dutt)

யாக புரோகிதர்கள் என்ற நிலையில் பிராமணர்கள் பல்வேறு தெய்வங்களை வழிபடும் வழக்கத்தை நிலைநாட்டி, புரோகிதர்களுக்கு பெரும் நன்கொடையளிப்பதை அனைத்து மதச் சடங்குகளிலும் தவிர்க்க முடியாத ஒரு நடைமுறையாக உருவாக்கினர். அதைப் போலவே அவர்கள் புத்தமதத்திலும் பல்வேறு போதிசத்துவர்களை, விக்கிரகங்களை பூஜிப்பதையும், பிட்சுக்களுக்குப் பெரும் கொடையளிப்பதையும் வழக்கமாக்கினர். புத்தமதத்தின் தலைமை பாடலிபுத்திரத்தின் குறுநில மன்னர்களிடம் இருந்தபோது அதன் அடிப்படைக் குணாம்சத்தைப் பிராமணர்களால் புரட்ட முடியவில்லை. வெளிநாட்டினர் இந்தியாவுக்கு ஏராளமாக வரத்துவங்கி, அவர்கள் புத்தமதத்தில் சேர்ந்து ஆஸ்ரமங்களைக் கைப்பற்றிய பிறகுதான் புரோகித மந்திர தந்திரங்கள் புத்தமதத்தின் ஆராதனைகளில் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக ஆகிவிட்டன.

இந்தியாவில் சிறிதும் பெரிதுமான ஆயிரக்-கணக்கான கோவில்களில் ஒவ்வொன்றுக்கும், இதைப்போன்ற அல்லது இதைவிடக் கூடுதல் மடத்தனமான பழங்கதைகள் தல புராணங்களாகச் சொல்லப்படுகின்றன. கோவில்களில் நாள்தோறும் நடைபெறும் பூஜை போன்ற சடங்குகள், பந்தி விருந்து, அங்கு குவிக்கப்படும் செல்வம் போன்றவற்றைப் பார்க்கும்போது, கோவில்களை எழுப்பும் நோக்கத்தைப் புரிந்து கொள்வது எளிதாகும். தினமும் ஆறு வேளை பிராமணர்கள் ஜகன்னாதர் விக்கிரகத்தைக் குளிப்பாட்டி புத்தாடை அணிவிக்கின்றனர். அது முடிந்த உடனே ஐம்பத்தாறு பிராமணர்கள் பல்வேறு வகையான உணவுப் பொருள்களை விக்கிரகத்-திற்குப் படையல் போடுகிறார்கள். இவ்வாறு விக்கிரகங்களுக்காக அளிக்கப்படும் உணவுப் பண்டங்களை மொத்தமாகச் சேர்த்தால் இருப-தாயிரம் பேர் உண்ண முடியும். (ஐன் அக்பாரி)

சிவாஜியின் குரு ராமதாசர் என்றழைக்கப் படும் பிராமணராவார். சிவாஜி தன்னுடைய நாட்டை குருவுக்குக் காணிக்கையாக்கிவிட்டு சனாதன தர்மத்தைப் பரிபாலிப்பதற்காகக் குருவிடமிருந்து அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். திருவிதாங்கூர் மன்னர் நாட்டை கோவிலில் இருக்கும் கடவுளுக்குச் சமர்ப்பித்துவிட்டு, கடவுளின் தாசராக இருந்து ஆள்வதற்காக அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இவ்வாறு நாட்டை ஒரு பிரம்மஸ்வம் அதாவது பிராமண ராஜ்யமாக நினைத்துக்கொண்டு ஆட்சி புரியும் பொறுப்பு தனக்கிருப்பதாக சிவாஜி ஒப்புதல் அளித்தார்.

சிவில் – மிலிடெரி ஆட்சியின் முக்கியப் பதவிகள் அனைத்திலும் பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர். மன்னரின் கீழ் எட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு அமைச்சரவையும் இருந்தது. சிவில் _ மிலிடெரி ஆட்சியின் ஆகப் பெரிய உச்ச அதிகாரியும் பிரதம மந்திரியுமாய் (பேஷ்வா) பிராமணர்தான் இருந்தார். இந்தப் பதவி ஒரு குடும்பப் பரம்பரையுரிமை படைத்ததாக மாறி, சிவாஜியின் காலத்திற்குப் பிறகு பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சியாளர்களாயினர். சிவாஜியின் முடிசூட்டு விழா காலத்தில் இராணுவத் தலைமைத் தளபதியைத் தவிர மற்ற எல்லா அமைச்சர்களும் பிராமணர்களாக இருந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி சிவாஜிக்கு இருநூறு கோட்டைகளும் ஒவ்வொரு கோட்டையைச் சுற்றி கிராமங்களும் இருந்தன. இவை ஒவ்வொன்றின் சிவில் ஆட்சிக்கும் ஒரு பிராமண சுபேதாரும் ராணுவத் தளபதியாக ஒரு மராட்டிய ஹவில்தாரும் அமர்த்தப்பட்டிருந்தனர். மராமத்துப் பணிகள், கிடங்குகளின் மேற்பார்வைக்கு ஒரு பிரபுவும் இருந்தார். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏறத்தாழ இதைப்போலத்தான் ஆட்சி அமைப்பு இருந்தது. ஒவ்வொரு ராணுவக் குழுவின் தளபதியின் கீழும் பிராமணர்களும் பிரபுக்களும் அதிகாரிகளும் இருந்தனர். பெரிய ராணுவப் படைக்குழுக்களின் தலைவர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர்.

தன்னுடைய அரசாட்சியை நிறுவ முப்பதாண்டுக்காலம் சிவாஜி இடைவிடாது போராடினார். ராஜபதவியையும் ஆட்சியையும் சட்டபூர்வமாக்கத் தன்னுடைய பட்டாபிஷேகத்தை (முடிசூட்டுவிழா) இந்து சாத்திர முறைப்படி கௌரவமாக மேற்கொள்ள சிவாஜி விரும்பினார். சிவாஜியைப் பிராமண ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் ஒரு சத்திரியனாக மாற்ற பிராமணர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துவிட்டது.

நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பதினோராயிரம் பிராமணப் பண்டிதர்களை அவர்களுடைய மனைவி மக்கள் உட்பட ஐம்பதாயிரம் பேரை தலைநகருக்கு வரவழைத்து, நான்கு மாதகாலம் அவர்களுக்கெல்லாம் அறுசுவை உணவளித்து உபசரித்ததோடு தங்கமும் பணமும் தானமாக அளித்தார் சிவாஜி. முக்கியப் புரோகிதரான கங்கபட்டனுக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கிடைத்ததாம். இந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்திற்கு ஐம்பது லட்சம் ரூபாய்வரை செலவழிந்ததாக சர் ஜாதுநாத சர்க்கார் கூறுகிறார். வேறு சிலர் ஏழுகோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். சாத்திர முறைப்-படியான பட்டாபிஷேகத்திற்கு ஒரு சத்திரியனுக்கு மட்டுமே உரிமையிருப்பதாக பிராமணர்கள் வாதாடினர். எனவே சிவாஜி உதயப்பூர் நாட்டின் ரஜபுத்திரப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சாதிப்பதற்காக ஒரு வம்ச பரம்பரைப் பட்டியலே தயாரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு புரோகிதர்களுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்து அவர்களிடமிருந்து உபநயன கர்மத் (பூணூல் அணிதல்) தையும் சிவாஜி ஏற்றுக்கொண்டார்.

இதைத் தவிர சிவாஜியின் போர்களில் பிராமணர்கள் கொல்லப்பட்டதற்குப் பாவ பரிகாரமாக பிராமணர்கள் எட்டாயிரம் ரூபாய் கோரிப் பெற்றனர். இந்த அளவுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்த பிறகும் தேவமந்திரம் செவிமடுக்க ஒரு கௌரவமான மராட்டியரான சிவாஜியை ஒரு சூத்திரன் என்று கூறிப் புறக்கணித்தனர். பிராமணர்களின் பாதுகாப்புக்கும் நன்மைக்கும் தன்னுடைய வாழ்க்கையைச் சமர்ப்பித்த சிவாஜிக்கு, பிராமணர்களின் இந்த வெட்கக்கேடான அணுகுமுறையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னை ஒரு சூத்திரனாக எண்ணியதால் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் சிவாஜியைக் காயஸ்தத் தலைவரான பாலாஜியிடம் கூட்டுச் சேர வைத்தது. (ஜாதுநாத சர்க்கார்).

நாட்டையும் மக்களையும் திவாலாக்க இன்னொரு காரியத்தையும் செய்தார் மகாராஜா. கனத்த வரியைச் சுமத்தி மக்களிடமிருந்து கசக்கிப் பிழிந்த பொதுச் சொத்துக்களை பத்மநாபஸ்வாமி கோவிலுக்கடியில் இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு ரகசியச் சுரங்க அறைக்குள் போட்டுவைத்தார். (பி.சிதம்பரம் பிள்ளை). நாட்டின் பொதுச் சொத்திலிருந்து முப்பத்து நான்கு லட்சம் ரூபாய் அரண்மனை கஜானாவுக்கு மாற்றி, அவையெல்லாம் கோவிலில் வழிபாடுகளுக்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு அரண்மனை கஜானாவும் காலியாகிவிட்டது. மாதத்தில் பெரும்பாலான நாட்கள் கோவில் சடங்குகளுக்காகவே கழிந்தன. பெரும் தொகைகள் கோவிலுக்களிக்கப்பட்டன. ஒருமுறை லட்ச ரூபாய் சூரத் நோட்டுக்களாகவே அளிக்கப்பட்டன. அதையெல்லாம் விக்கிரகத்தின் முன் குவித்து மகாராஜாவே பணமூட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து வெள்ளிப் பாத்திரத்தில் கொட்டினார். உடல் நலம் குன்றியவராக இருந்தபோதிலும் இந்தப் பணியைச் செய்து முடிக்க அவர் தயங்கவில்லை. (பி.சிதம்பரம் பிள்ளை).

கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் இவ்வாறு பொதுப் பணம் விரயமாக்கப்பட்டதால் அரசு கருவூலம் காலியாகிவிட்டது. மார்த்தாண்ட வர்மாவுக்குப் பிறகு வந்த மகாராஜா பிரிட்டீஷ் அரசுக்குக் கப்பம் கட்டப் பணமில்லாமல் கோவிலிலிருந்து கடன் பெற்றுக் கப்பம் கட்ட வேண்டியதாயிற்று. பிறகு 50% வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகை கோவிலுக்குத் திருப்பியளிக்கப்பட்டது. இந்துக்களில் பெரும்பான்மையினராக ஈழவர்களும் பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களும் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் கோவில்களிலும் கல்விக் கூடங்களிலும் நுழைய உரிமையில்லை. அவர்கள் பொதுச்சாலைகளில் நடக்கவோ, பொதுக் கிணறுகள், குளங்களில் நீர் எடுக்கவோ உரிமையற்ற தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *