சிந்துவெளிப் பண்பாடும், சங்கத்தமிழ் தொல் மரபுகளும் என்ற இந்த ஆய்வுரைக்கு உள்ளே செல்வதற்கு முன்னால் நான் இந்த ஆய்விற்குள் நுழைந்த விதம், ஏன் இந்த ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறேன்?
அதற்கான பின்னணியை நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் மதுரையைச் சேர்ந்தவன்.
1978இல் தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, 1980இல் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து, அதற்குப் பின்னால் ஒரு தமிழ் நாளிதழில் நான்கு ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றி-விட்டு 1984இல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தேன். இந்திய ஆட்சிப் பணியில் தேர்ச்சி பெற்ற தமிழ் இலக்கிய மாணவர் இதுவரையிலும் நான் -_ முதல் மாணவர் என்று சொல்லப்பட்டபோது, அப்போதெல்லாம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். இதுவரையிலும் 28 ஆண்டுகளுக்குப் பின்பும் ஒரே மாணவர் என்று சொல்வது எனக்கு மகிழ்ச்சியாக இல்லை.
சமீபத்தில்கூட இந்திய ஆட்சிப் பணியை எந்த மொழியில் எழுதலாம் என்ற பிரச்சினை வந்தபோது மீண்டும் இந்த வரலாற்றைச் சுட்டிக் காட்டினார்கள். இந்த 28 ஆண்டுகள் ஒருவர்தான் வரமுடிந்தது. நான் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து வடமாநிலங்களில் பணியாற்றக்-கூடிய சூழல் வந்தாலும்கூட, அப்போதும்-கூட நான் ஒரு தமிழ் மாணவன் என்பதை ஒரு முன்னுரிமையாக, ஒரு சலுகையாக வைத்து, தமிழ்நாட்டிற்கு வர வேண்டுமென்று வாய்ப்புக் கோரவில்லை. ஏனென்றால், ஒரு தமிழ் மாணவன் எந்த வகையிலும் யாரிடமும், எதற்காகவும் சலுகை கேட்கத் தேவையில்லை என்பதில் எனக்கு ஒரு அழுத்தமான நம்பிக்கை இருந்தது. அதற்காக நான் பின்னோக்கிப் பார்த்து மகிழ்ச்சி-யடைகிறேன். நான் இந்த மாநிலத்தை விட்டுப் போகும்போது கண்ணீர் மல்கதான் சென்றேன்.
1991இல் எழுதிய அன்புள்ள அம்மா என்ற எனது கவிதைத் தொகுப்பில் நான் தமிழ்நாட்டை விட்டு ரயில் ஏறிய கதையை தனிக் கவிதையாகவே எழுதி இருப்பேன். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் தமிழ்-நாட்டை விட்டு வந்துவிட்டோமோ என்று கவலையாக இருக்கும். அந்தச் சூழலில் நான் ஒடிசாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒருநாள் தமிலி என்ற பெயர் சூட்டப்பட்டு ஓர் ஊரினுடைய மைல் கல்லைப் பார்த்தேன். அப்போதெல்லாம் எனக்கு ஒரு ஜீப்தான் இருக்கும். கார் கொடுக்கப்படவில்லை. சர்வீஸினுடைய தொடக்கப் பணிக்காலம். எனது ஜீப்பிலிருந்து இறங்கி அந்தக் கிராமத்திற்குள் சென்றேன். அந்தக் கிராமத்தில் இருந்தவர்கள் குயி எனப்படும் திராவிட மொழியைப் பேசக்கூடிய ஒரு பழங்குடியினர் என்பதைத் தெரிந்து கொண்டதற்குப் பின்னால் ஒருவேளை இந்த திராவிட மொழியைப் பேசுபவர்கள் இந்தப் பழங்குடி மக்களுடைய பெயர், ஊர்ப் பெயர் தமிலி என்பதற்கும், தொல் திராவிட வடிவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற சிந்தனை எனக்குள் ஓடியது. அதற்குப் பின்னால் அந்தப் பகுதியில் பணியாற்றும்போது, கோயா, புயி உட்பட திராவிட மொழிகளைக் கற்கத் தொடங்கினேன். அதற்காக ஆசிரியர் ஒருவர் எனது வீட்டிற்கு வந்து கற்றுத் தருவார். அப்போது நான் சுற்றுப்பயணம் செல்கின்ற நேரங்களில் அங்குள்ள பழங்குடியின கிராமங்களில் என் கண்முன்னால் விரிந்த காட்சிகளை அப்போதே நான் தமிழ்-நாட்டில் பல இடங்களில் பேசியிருக்கிறேன். அங்கு குறிஞ்சி நிலப் பின்னணியில் மக்கள் வாழ்க்கை நிலையைப் பார்க்கும்-போது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, இளைஞர்கள் எல்லாம் தங்கியிருப்பதற்காக ஒரு தனிக்கூடம், இளம்பெண்களெல்லாம் தங்கி இருப்பதற்கு ஒரு தனிக்கூடம், அந்த இளம்பெண்களைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு செவிலித்தாய், வயது முதிர்ந்த ஒரு பெண், பெரும்பாலும் ஒரு விதவை. இப்படிப்பட்ட அமைப்புகளைப் பார்க்கும்போது பாங்கர் கூட்டம், செவிலி மரபு, நற்றாய் மரபு என்றெல்லாம் நான் அகத்திணையிலும், சங்க இலக்கியங்களிலும் படித்த காட்சிகள் எல்லாம் என் கண்முன்னால் வரும். சங்க இலக்கியத்தில் என்னென்ன வரப்-பட்டிருக்கிறதோ, அதையெல்லாம் காட்சி வடிவங்களாய் என் கண்முன் விரிவதைப் பார்த்தவுடன் சட்டீஸ்கர் மாநிலமும், ஒடிசா மாநிலமும் ஒரு வகையில் சங்க அக இலக்கியங்களுக்கான ஓர் ஆய்வுக்கூடம் என்றே எனக்குத் தோன்றியது. இந்த வகையில்தான் எனது உறவு தொடங்கியது.
அப்போதெல்லாம் கணிப்பொறிகள் பெரும்பாலும் வழக்கத்திற்கு வரவில்லை. இந்த ஊர்ப் பெயர்களினுடைய ஆய்வுத் தரவுகளை-யெல்லாம் நூல்களிலிருந்துதான் எடுக்க வேண்டும். நான் ஓர் இடத்திலிருந்து மாற்றலாகிப் போகும்போது என்னுடைய வீட்டுச் சாமான்கள் பாதியென்றால், பாதி இந்த ஊர்ப்பெயர்கள், நூல்கள். இப்படிப்-பட்ட மூட்டைகளைத்தான் எடுத்துச் செல்வேன். அதற்குப் பின்னால் _ கணிப்பொறி வந்ததற்குப் பின்னால் எனது வேலை மிகவும் சுலபமாகி விட்டது.
நான் 1997இல் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதினேன். ஆசியவியல் நிறுவனத்தின் (சென்னை _ செம்மஞ்சேரி) இதழில் டேம் தமிழ் எக்னோமிக் குரோம் என்ற பெயரில் 45, 46 பக்க அளவில் ஓர் ஆங்கிலக் கட்டுரையை எழுதினேன். அந்தக் கட்டுரையில் தமிழ் என்ற சொல் எப்படித் தோன்றியிருக்க வேண்டும் என்பதைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்திருந்தேன். அந்த ஆராய்ச்சியில் இருந்த-போது, மத்தியப்பிரதேச மாநிலத்தின் சிந்துவாரா என்ற பகுதியில் நமது மதுரை, தேனி மாவட்டங்கள், கேரள மாநிலத்தினுடைய எல்லைப் பகுதியில் இருக்கக்கூடிய பழநி, இடுக்கி, குமுளி, தேனி போன்ற இடப்பெயர்களெல்லாம் அங்கே இருப்பதைப் பார்த்து நான் மிகவும் வியப்படைந்தேன்.
முதலில் எனக்குத் தோன்றியது, இது ஒரு விபத்தாக இருக்கலாம் என்று. நான் ஏதேச்சையாக _ ஒரே மாதிரியாகத்-தான் பெயர் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவ்வளவு பெயர்கள் திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வாழ்கிற மத்தியப்பிரதேசப் பகுதிகளில் ஊர்ப் பெயர்களாய் வருவதை _ விபத்தாய் எடுத்துக்கொள்ள முடியாது. ஏதோ ஒரு வகையில், இந்த ஊர்ப் பெயர்கள் பயணம் செய்திருக்கின்றன. ஊர்ப் பெயர்கள் பயணம் செய்யுமா? பயணம் செய்யும். ஒரு நாகரிக மக்கள், ஓர் இனமக்கள், ஒரு மொழி பேசும் மக்கள், ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் புலம்-பெயர்ந்து செல்லும்போது அவர்களுடன் எதை எடுத்துச் செல்கிறார்களோ இல்லையோ அவர்கள் எளிதாக எடுத்துச் செல்வது தங்களது நினைவுகளையும், தங்களது பண்பாட்டையும், தங்களுடைய பண்பாட்டின் மீள்நினைவு-களையும்தான். நம்பிக்கைகளைத்தான் அவர்-களோடு சேர்ந்து பயணம் செய்வது ஊர்ப்பெயர்களும், புதுசா போற ஊருக்குப் போய், அந்த ஊர்ப்பெயரை வைத்து விடுவார்கள். இது உலகம் முழுவதும் நடந்து இருக்கிறது. அய்ரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றவர்கள் அய்ரோப்பாவின் பெயரை-யெல்லாம் எடுத்து வந்து அமெரிக்காவில் வைத்-தார்கள், அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட கருப்பர் இனத்தவர்கள் ஆப்ரிக்கப் பெயர்களையெல்லாம் அமெரிக்கா-விற்குக் கொண்டு சென்றார்கள். கலிபோர்னி-யாவில் நைல் என்ற ஒரு சிறு ஓடை ஓடுகிறது. அதற்குப் பக்கத்தில் எகிப்து என்ற ஒரு கிராமம் இருக்கின்றது. அப்படி எடுத்துச் சென்ற பார்சி இனமக்கள் ஈரானிலிருந்து இந்தியாவிற்குப் பெயர்களை எடுத்து வந்தார்கள். அவ்வாறு பெயர்கள் எடுத்து வரப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்தப் பெயர்களையுடைய பயணம் எங்கிருந்து, எங்கு சென்றிருக்கிறது? என்ற சிந்தையோடுதான் 1990களில் நான் இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதி இருந்தேன்.
அதற்குப் பின்னணியில் அயிராவதம் மகாதேவன் அவர்க-ளும், இடப்பெயர் ஆராய்ச்சியை சிந்துவெளிக்காகப் பயன்படுத்த வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டார். அது 1990களினுடைய மத்தியில். அப்போது பார்க் எனப்படுகிற ஓர் இடம் பற்றிய கட்டுரைக்காக நான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஊர்களினுடைய பெயர்களைத் தேடியபோது இந்த திராவிட தமிழ் _ தொல் தமிழ் நாகரிகம் தொடர்பான பெயர்களைத் தேடத் தொடங்கினேன். இது இந்தளவில் இருக்கட்டும். முதலில் நான் இந்த உரைக்குப் போவதற்கு முன்னால் சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஒரு சின்னப் பின்னணித் தகவலையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சிந்துவெளி நாகரிகத்-தைப் பற்றிப் பேசாததற்கு முன்னால், 1924இல் சர்ஜான் மார்சல் இல்லஸ்ட்ரேட் லண்டன் வீக்லி என்ற இதழில் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய அறிவிப்பை உலகத்திற்குத் தெரிவிப்-பதற்கு முன்னால், அப்படி ஒரு நாகரிகம் இருந்தது என்பது யாருக்குமே தெரியாது. இந்தியாவினுடைய மிகவும் மூத்த இலக்கியம் என்று கருதப்படுகின்ற வேத இலக்கியங்களிலோ அல்லது வடமொழி இலக்கியங்களிலோ சிந்துவெளி நாகரிகம் என்ற ஒன்று இருந்தது என்பதற்கான எந்த ஆவணப் பதிவும் இல்லை. ஆக, 4,000 ஆண்டுகளுக்கு முன்னால் புழக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட கி.மு. 2000 _ 1900 ஆண்டுகளிலேயே அழிந்துபோன ஒரு நாகரிகம், பூமிக்கு அடியில் உறங்கிக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை 1924 வரை யாருக்குமே தெரியாது. இதைப்பற்றிய ஆவணப் பதிவுகள் எதுவுமே இல்லை. இப்படிப்பட்ட ஆவணப் பதிவுகள் இல்லாததனால் இந்தியாவினுடைய தொல் வரலாறு _ பொதுவாக வரலாறு என்று சொல்லும்போது அசோகனுடைய கல்வெட்டி-லிருந்து வரலாறை மீட்டு எடுக்கிறார்கள். அதற்கு முந்தைய தொல் வரலாறுகள் பெரும்பாலும் தேதியற்ற நிலைமையில் (Un dated) தொங்கிக் கொண்டிருக்கிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவார்கள். ஏன் தேதியில்லை என்று சொன்னால், நாம் வரலாறை எப்படிப் புரிஞ்சு வச்சிருக்கோம் என்பது, எழுதப்பட்டதே வரலாறு. இங்கே வரலாற்று ஆசிரியர்கள் நிறைய பேர் உள்ளனர்.
அவர்களிடம் கேளுங்கள். What is history? – History என்று கேட்டால் அவர்கள் சொல்லுவது What is written is history. எழுதப்பட்டது வரலாறு. அப்ப எழுதப்படாதது என்பது அவர்களைப் பொறுத்தவரை வரலாறு இல்லை. ஆக எழுதப்பட்டதுதான் வரலாறு என்று வைத்துவிட்டதனால், வரலாறு எழுத்து வடிவம் என்பது ரொம்ப முக்கியமாகி விட்டது.
அப்படி என்று சொன்னால் இதுவே ஒரு கோளாறான, ஒரு பிரச்சினைக்குரிய, ஒரு அணுகுமுறை (Approach). அப்படின்னா தொல் மரபுகள் _ வாய்மொழி மரபுகள் ஓர் இலக்கியம் எழுத்து வடிவத்திற்கு முன்னாள் ஒரு நீண்டதொரு வாய்மொழி மரபுகள் இருக்கும். ஒரு வாய்மொழி என்கிறதுதான் பாணர் மரபு, பாட்டு மரபு, கூத்து மரபு, ஒரு வாய்மொழி மரபு போன்று இருக்கும். அந்த வாய்மொழி மரபுக்கு எந்தவிதமான முக்கியத்துவத்தையும் வரலாறு கொடுப்ப-தில்லை. ஆனால் எழுதி வைத்ததே வரலாறு என்கிறதனாலேயே எதை எழுதி வைத்தாலும் வரலாறு ஆயிடும். அதனால் இந்தியா பல 23ஆம் புலிகேசிகளை அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆக, இப்படிப்பட்ட எழுதனதெல்லாம் வரலாறு என்பது பிரச்சினைக்குரிய விஷயம். இதனால இந்தியா-விற்கு தேதியில்லாத தொல் வரலாறு இருந்தது. இரண்டாவது இந்திய வரலாற்றைப் பொறுத்தவரையில் இரண்டு புதிர்கள். அந்தப் புதிர்கள் எவை?
அடுத்த இதழில்…
(சென்னை,பெரியார் திடலில் 21.5.2013 அன்று நடைபெற்ற திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சிறப்புக் கூட்டத்தில், ஒடிஷா மாநில அரசுத் துறையின் முதன்மைச் செயலாளர், ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆற்றிய ஆய்வுரையின் ஒரு பகுதி இது.)
– தொகுப்பு : அ.பிரபாகர்