பாகிஸ்தான் தலைநகர் லாகூர் மருத்துவ-மனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கைதி சரப்ஜித் சிங், 2013 மே 20 அன்று அதிகாலை மரணமடைந்தார்.
கோமா நிலையில் இருந்த சரப்ஜித் சிங்குக்கு மூளைச் சாவு ஏற்படலாம் என, லாகூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 49 வயதான சரப்ஜித் சிங், பாகிஸ்தானில் 1994 இல் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தான் கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். லாகூரில் உள்ள கோட்லாக்பட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை சிறையிலிருந்த சக கைதிகள் 6 பேர், செங்கற்கள் மற்றும் சாப்பாட்டு தட்டுகளால் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த சரப்ஜித் சிங், கோமா நிலையில், ஜின்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சரப்ஜித் சிங் படுகாயமடைந்து மருத்துவ-மனையில் சேர்க்கப்பட்டதால், அவரை பார்க்க, அவரது மனைவி, இரண்டு மகள்கள், சகோதரி தல்பீர் கவுர் ஆகியோருக்கு இரண்டு வார கால விசா வழங்கப்பட்டது. இவர்கள் சரப்ஜித் சிங்கை பார்த்து விட்டு, 2013 மே 19 அன்று வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பினர்.
2013 மே 19 அன்று சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கவுர், உண்ணாவிரதம் மேற்கொண்டார். என் சகோதரனை காப்பாற்ற, இந்திய அரசு தவறிவிட்டது. உயிருக்கு போராடும் சகோதரனுக்கு இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ, நல்ல சிகிச்சையளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தார்.
ஆனால் அதற்குள்ளாக சரப்ஜித் சிங்கின் உயிர் பிரிந்து விட்டது.
சரப்ஜித் சிங்கை தூக்குத் தண்டனையி-லிருந்து விடுவிக்க வேண்டும் என்று இந்திய அரசும் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டிருந்தது -_ தனது நாட்டிலிருக்கும் தூக்குத் தண்டனைக் கைதிகளை முறைப்படி அறிவிப்பு கூட செய்யாமல் தூக்கிலிட்டபடி!
இனியாவது, இந்தியா தான் கோரியதைத் தானே செய்யுமா? தூக்குத் தண்டனையை ரத்து செய்யுங்கள் என்று அடுத்தநாட்டுக்கு ஆலோசனை கூறும்முன், வேண்டுகோள் விடுக்கும்முன், தனது நாட்டில் தூக்குக் கொட்டடியில் நிற்போரின் தண்டனையை ரத்து செய்யுமா?
கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்-பட்டதால், அதை ஒரு வாய்ப்பாகக் கைதிகளுக்கு வழங்க முடியாது என்று கடந்த மாதம் காலிஸ்தான் போராளி புல்லர் வழக்கில் தூக்குத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். ஆனால் இதே பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் வழக்கில் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது அதே உச்சநீதிமன்றத்தின் மற்றொரு பெஞ்ச். இப்போதாவது – இதையாவது வாய்ப்பாக வைத்துக் கொண்டு தூக்கு தண்டனை குறித்த மாற்று சிந்தனையைப் பெறுமா இந்தியா?
முறையாகக் கூட தகவல் தெரிவிக்காமல், தூக்குப் போட்டுவிட்டுத் தகவல் சொல்கிற அரசுப் பூர்வமான கொலையைத் தான் தூக்குத் தண்டனை என்ற பெயரில் நிறைவேற்றுகிறது இந்திய அரசு. அதிலேயே சட்டத்தைச் சரியாகக் காப்பாற்றாமல், அடிப்படை உரிமையைக் கூட கைதிக்கும், அவரது குடும்பத்துக்கும் வழங்காததை அப்சல் குரு வழக்கில் பார்த்தோம். அவரது தண்டனையே சட்டப்படி செல்லாத, ஒட்டுமொத்த மனசாட்சிப்படி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமான கருணை மனுக்களை நிராகரிப்பது யார் என்பதில் போட்டி இருக்கும்போல – குடியரசுத் தலைவர்களுக்கு! அதையும் காக்க வைத்து நிராகரிப்பது, பல்லாண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு இரட்டைத் தண்டனையைப் போல வழங்குவது இன்னும் கொடுமை. ஒரே குற்றத்துக்கு இரண்டு தண்டனைகளை வழங்கமுடியாது சட்டப்-படியும், நியாயப்படியும்! ஆனாலும், இந்த அதிகாரப்பூர்வமான கொலைகள் தொடர்-கின்றன இந்தியாவில்!
ஒரு மாபெரும் ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகிற நாட்டில், மனிதநேயமற்ற, உலக நாடுகள் ஒதுக்கித் தள்ளுகிற, பழிக்குப் பழி வாங்கும் கற்காலச் சிந்தனையான மரண-தண்டனை இருக்கலாமா? என்ற கேள்விக்கு எப்போது இந்தியா பதில் சொல்லப்போகிறது.
கொசுறுக் கேள்வி:
சரப்ஜித் சிங் சீக்கிய மதத்தவர். பொட்டு-வைத்தல், திலகமிடுதல், பூணூல் அணிதல் போன்ற இந்துமதத்தின் எந்த அடையாளத்-தையும் ஏற்காதவர்கள் அவர்கள். சரப்ஜித் சிங்-கின் உண்மையான படத்திலும் அவர் நெற்றியில் திலகம் இல்லை. ஆனால், ஊடகங்களில் வெளியிடப்படும் படத்தில் மட்டும் எப்படி திலகம் இடப்பட்டுள்ளது? இங்கே வளர்க்கப்-படுவது பாகிஸ்தானுக்கெதிரான இந்திய தேசிய உணர்வு அல்ல; இந்து உணர்வே என்பதை இது நிரூபிக்கிறதா இல்லையா?
– சரவணா & இளையமகன்