ஆண்மை

ஜூன் 01-15

இரவு முழுக்கத் தூக்கமில்லாமல் அதிகாலையில் கண் சொருகியவளை ஜன்னல் வழியே சுள்ளென்று வீசிய வெயில் தாக்கியது.  சிரமப்பட்டுக் கண்திறந்து கடிகாரத்தைப் பார்த்தாள் சித்ரா. மணி 6.50 ஆகிக் கொண்டிருந்தது.

விருட்டென்று எழுந்தவள் பாயைச் சுருட்டி வைத்துவிட்டு கட்டிலில் படுத்துறங்கும் கணவனைப் பார்த்தாள். முழங்கால்களுக்குக் கீழே இரண்டு கால்களிலும் பேண்டேஜ் துணி சுற்றப்பட்டிருந்தது. மூன்றரை மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் அவன் கால்கள் இரண்டையும் எடுக்கும்படி ஆகிவிட்டது. காதலித்துத் திருமணம் செய்து-கொண்டதால் இரண்டு வீட்டு ஆதரவையும் இழந்துவிட்டவர்கள்.

தன்னைச் சுற்றிச்சுற்றி வந்தவன் இன்று கிடக்கும் நிலைமையைப் பார்த்து  கண்கள் கலங்கினாள். ஏறத்தாழ இரண்டு லட்சம்  ரூபாய் செலவாகி-விட்டது. அவன் வேலை பார்த்த நிறுவனத்தில் பாதிச் செலவை ஏற்றுக் கொண்டார்கள். மீதியை அங்கும் இங்குமாக கடன் வாங்கிச் சரி செய்தாள். எப்படியோ கால்களை இழந்தாலும் உயிரைக் காப்பாற்ற முடிந்ததே என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டாள்.

இப்பொழுது அவனுக்குப் பதிலாக குடும்பச் சுமையை இவள் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுமதி நிறுவனம்  ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. மாதச்சம்பளம் 12,000 ரூபாய். இன்னும் இரண்டு வருடங்களுக்கு வேலைக்குப் போனால்தான் கடன்களை அடைக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாய் பணத்தைச் சேர்த்து இரண்டு சிஸ்டத்தை (கணினி) வாங்கிப் போட்டால் வீட்டிலிருந்த-படியே சம்பாதித்து விடலாம். ஆனால், இன்று வேலைக்குப் போக மனமே இல்லை. சித்ரா ஒன்றும் வேலைக்குப் பயந்த பெண்ணில்லை. வீட்டு வேலைகளாகட்டும், அலுவலக வேலைகளாகட்டும், இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். அப்படி உள்ள பெண் இன்று வேலைக்குப் போகத் தயங்குகிறாள். காரணம், மேனேஜர் ரமணி.. 40 வயதுடைய ரமணி பார்ப்பதற்கு  வாட்ட-சாட்டமாய், லட்சணமாய் இருப்பான். கூடவே அதிகாரம் இருக்கிறது. அழகும், அதிகாரமும் சேர்ந்துவிட்டால்!  நிறுவனம் அவனுக்கு முழு உரிமையைக் கொடுத்துவிட்டது. நீ என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள். எங்களுக்குத் தேவை நல்ல லாபம்.

பிறகென்ன, சொல்லவா வேண்டும்! ஆண்களை நன்கு பேசி, நல்ல சம்பளத்தைக் கொடுத்து வேலை வாங்கி விடுவான். பெண்களை…. மோகனா, கல்பனா, உஷா, தமயந்தி இன்னும் எத்தனையோ பெண்களைத் தனது பேச்சுக்களாலும், செயல்களாலும் சாகச வலையில் வீழ்த்திவிட்டான். எப்படிப்பட்ட பெண்ணையும் தன்னால் வீழ்த்திவிட முடியும் என்ற இறுமாப்பு அவனுக்குள் நிறையவே இருந்தது. ஆனால், ரமணியின் கண் வலைக்குள் சிக்கிக் கொள்ளாதவளாக இன்று வரை சித்ரா இருக்கிறாள். அவனும் இந்த இரண்டு மாதத்திற்குள் அவளை எப்படியும் தன்வயப்-படுத்த வேண்டும் என்று எந்தெந்த வழிகளிலோ மயக்கப் பார்த்தான். எதுவும் செல்லுபடியாகவில்லை. முடிவாக தன்னுடைய அதிகார பலத்தைக் காட்டத் தொடங்கினான். என் விருப்பத்திற்குச் சம்மதிக்கவில்லை என்றால் நீ வேறு வேலை தேடிக்கொள். முடிவை நாளைக்குச் சொல்லியாக வேண்டும் என்று கூறிவிட்டான்.

என்ன செய்யலாம்? பேசாமல் காவல்-துறையில் புகார் கொடுத்துவிடலாமா. செய்யலாம், அவன் மாட்டிக் கொள்வான். ஆனால், நிர்வாகம் அவனை இழக்க விரும்பாதே. எப்படியும் மீட்டுவிடுவார்கள். நம்மைத்தான் வெளியில் அனுப்புவார்கள். அவன் திறமை-யினால் வரும் வருமானத்திற்காக எந்தக் கேவலத்தைப் பற்றியும்  கவலைப்பட-மாட்டார்கள். வேறு பக்கம் வேலைக்குப் போகலா-மென்றால் இடைப்பட்ட காலங்களில் வருவாய்க்கு வழி? ஏற்கெனவே கொஞ்சம் கொஞ்சமாய் கொடுப்பதாக கடன்காரர்கள் முனகிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி இந்தச் சிக்கலைச் சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே சமையல் வேலையை முடித்து-விட்டாள்.

சித்ரா என்று கூப்பிட்டுக் கொண்டே தடுமாறி எழுந்து கொண்டிருந்தான் தியாகு. இருங்க…இருங்க! அதான் நான்தான் வர்றேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம் என்று கூறிக்கொண்டே, கைத்தாங்கலாக அணைத்து, கட்டைக்கம்புகளை அவன் தோள்பட்டைக்-குக் கீழே வைத்துவிட்டாள்.

கிளம்பிட்டாயா? இன்னும் பத்து நிமிசத்திலே ரெடியாயிருவேன். அவன் மெதுவாக ஊன்றிக் கொண்டே பாத்ரூம் பக்கம் சென்றான். திரும்பி வந்ததும் வேட்டியை அவிழ்த்துவிட்டு வேறு வேட்டியைக் கட்டி-விட்டு, பேண்டேஜைக் கழற்றி, புது பேண்டேஜைப் போட்டுக் கொண்டிருந்தவளின் தலையில் கைவைத்து முகத்தை நிமிர்த்தினான்.

எந்த ஓர் ஆதரவும் இல்லாமல், துணையும் இல்லாமல் அவ்வளவு கஷ்டங்களையும் ஒரு ஆளே தாங்கிக்கிட்டிருக்கியே என்று சொன்னபோது அவன் கண்கள் கலங்கின.

என்னது சின்னப் புள்ளையாட்டம் அழுதுக்கிட்டு…. கல்யாணம் பண்ணிக்கிட்ட போது எந்த ஆதரவையாவது எதிர்-பார்த்தோமா! நாம ரெண்டு பேரும்தான் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவு. இந்த விபத்துதான் நம்மைக் கொஞ்சம் கலங்கடிச்சிருச்சு. சரி, ஒருவேளை எனக்கு நடந்திருந்தா நீங்க பார்த்திருக்க மாட்டீர்களா? அதுமாதிரிதான் இதுவும். சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். சாப்பிட்டு மாத்திரை போட்டுக்குங்க நான் வர்றேன். அவன் கன்னத்தைத் தட்டிவிட்டுக் கிளம்பினாள்.

காலை நேரத்தில், வழக்கம் போல் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்; இருசக்கர வாகனங்களில் செல்வோரின் சர்….புர் ரென்ற சத்தம் காதைக் கிழித்துக் கொண்டிருக்க, இதில் தனக்கு எந்தச் சம்பந்தமும்  இல்லை என்பதுபோல் ஆழ்ந்த யோசனையோடு சித்ரா நடந்து கொண்டிருந்தாள். இன்னும் சிறிதுநேரத்தில் அலுவலகம் சென்றாக வேண்டும். அலுவலகம் சென்றால் மேனேஜர் ரெடியாகக் காத்திருப்பான். அவன்தான் நேற்றே தெளிவாகச் சொல்லிவிட்டானே. இன்னிக்கு இரவு முழுக்க நல்லா யோசிச்சுக்கோ. நாளைக்கு ஆபிஸ் வர்றப்போ நான் சந்தோஷப்படற மாதிரி நல்ல முடிவோட வா….. இல்ல நீ வருத்தப்படற மாதிரி முடிவ கண்டிப்பா நான் எடுப்பேன்னு உறுதியாகச் சொன்னானே. சொன்னா சொன்னதோட நிறுத்தமாட்டான் கண்டிப்பா செய்வான். அலுவலகத்தில் இதுவரைக்கும் அவனோட காமப்பசிக்கு இசையாத எந்தப் பெண்ணும் அங்க வேலைல நீடித்ததில்லை. எவ்வளவுதான் கெஞ்சினாலும், கதறினாலும் இரக்கப்படாத கல்லு மனசுக்காரன்.

என்ன செய்யறது, என்ன செய்யறதுன்னு எவ்வளவுதான் யோசிச்சாலும் ஒரு முடிவும் கிடைக்கலியே….. நான் என்ன முடிவெடுப்பேன். ஒரு நொடி ஆகாது போடா பொறுக்கி நாயே என முகத்தில் காறித் துப்பிவிட்டு வீட்டுக்கு வருவதற்கு. வந்தால் அடுத்து என் நிலைமை….?

நன்றாக இருந்தவரை ஓடியாடி உழைத்து என்னை உள்ளங்கையில் தாங்கிய அன்புக் கணவன் இன்று நடமாட முடியாமல் போய்விட்டான். ஜாதியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டு செத்தாலும் பரவாயில்லை. எங்கள் முகங்களில் முழிக்காதீர்கள் என்று சொன்ன பெற்றோர்கள் இப்பொழுதும் பாராமுகமாவே இருக்கிறார்கள். ஜாதி அவ்வளவு வலிமையானதா?

இந்த நிலையில் வேலையை விட்டால்….. நாளைய பொழுதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. வேறு வழியில்லை. அலுவலகம் சென்ற பிறகாவது இதற்கு ஒரு முடிவு கிடைக்குமா?

தற்கொலைக்குத் தயாரானவள் விஷமருந்து பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு கடைசி நேரத்தில் குடிப்போமோ வேண்டாமா என்று குழம்புவதைப் போல…. தவிப்போடு பேருந்து நிறுத்தத்திற்குள் நின்றவளுக்கு, அருகாமையில் இருந்த சிக்னலில், சிக்னலுக்காக காத்திருந்த ஒரு பைக் கண்ணில்பட்டது.

பைக்கில் அமர்ந்திருந்த ஆணும், பெண்ணும் இருந்த நெருக்கம் முகம் நிமிர வைத்தது. பின்னால் உட்கார்ந்திருந்த பெண் அவனுடைய இடுப்பை இறுக்கிக் கட்டிக் கொண்டு காதுமடலில் உதடுபடுவதைப் போன்று பேசியவளைப் பார்த்த அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது…இது மானேஜர் ரமணியின் மனைவிதானே! இரண்டு வாரத்திற்கு முன்னால் அலுவலகத்தில் நடந்த பார்ட்டியில் பார்த்தோமே. அப்படியானால், அவன் யார்? இவர்களின் நெருக்கத்தைப் பார்க்கும்பொழுது நிச்சயமாக அண்ணன், தம்பியாக இருக்க முடியாது. அப்படியென்றால், யோசிக்க யோசிக்க அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. இனி இந்தப் பிரச்சினையைச் சுலபமாகக் கையாள முடியும்.

அவள் செல்லும் பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து தியாகராய நகருக்கு ஒரு பயணச்சீட்டு வாங்கினாள். அலுவலகம் காலை நேரப் பரபரப்புக்குப் பதில் கனத்த மௌனத்தோடு இயங்கிக் கொண்டிருந்தது. எல்லோருடைய பார்வையும் சித்ராவின் மேஜையை நோக்கியே இருந்தது. அவளோ சலனமேயில்லாமல் அமைதியாக தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இருந்தாலும், மனது குறுகுறுத்துக் கொண்டிருந்தது. எப்போது இண்டர்காம் ஒலிக்குமோ என அவள் கண்கள் அதைப் பார்ப்பதும், கணினியைப் பார்ப்பதுமாக இருந்தன. அவள் எதிர்பார்த்தது போலவே இண்டர்காம் சிணுங்க, அதை எடுக்காமலே வேகமாக எழுந்து மேனேஜரின் கேபினுக்குள் சென்றாள். அறைக்கதவைத் திறந்ததும், சென்ட்டின் மணம் ஆளைத் தூக்கியடித்தது. அது அந்தக் காமுகனின் எண்ணத்தை எதிரொலிப்பது போல் இருந்தது.  உள்ளுக்குள் படப்படப்பாக இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், அவனைப் பார்த்துப் புன்னகைத்தபடி நெருங்க, அவன் அவளை வைத்த கண் வாங்காமல் விழுங்கி விடுவதுபோல் பார்த்தபடி வாயெல்லாம் பல்லாக கள்ளச்சிரிப்புச் சிரித்தான்.
சித்ரா புன்னகைத்தபடி நிற்பதைப் பார்த்த ரமணி, நல்ல முடிவைத்தான் எடுத்திருப்பாய் என்று நினைக்கிறேன் என்று கூறிக் கொண்டே தனது இருக்கையை விட்டு எழுந்தான். உதடுகளை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டே தன்னருகே வருவதை உணர்ந்த, சித்ரா சிரித்துக் கொண்டே சரியான ரொமான்ஸ் பார்ட்டி சார் நீங்க. ஒரு மணி நேரத்திற்கு முன்னாடிதான் உங்க மனைவியோட பைக்ல ரொமான்ஸ் பண்ணிட்டே போனீங்க. அதுக்குள்ள இப்ப என்கிட்ட. உங்க அழகாலே, ஆண்மையான கம்பீரத்தாலே…. எல்லோரையும் மயக்கி விடுகிறீர்கள் சார். உங்களுக்கு உடம்பெல்லாம் மச்சம் போலிருக்கு என்றாள்.

நீ என்ன சொல்ற? என்ன சார் ஒன்னுமே… தெரியாத மாதிரிக் கேட்கிறீங்க. சிக்னல்கிட்ட நீங்களும் உங்க மனைவியும்…… ஆனா அவங்ககிட்ட சொல்லி வைங்க சார். பொது இடத்தில இப்படி ஓவரா இறுக்கிக் கட்டிக்கிறதும் அப்புறம்……அப்புறம். போங்க சார் பாக்கிற எனக்கே வெட்கமா இருந்துச்சு. ஆனா நீங்க விவரமான ஆளு சார். ஹெல்மெட் போட்டு முகத்தை மூடிக்கிட்டீங்க. மேலும் அவள் சொல்ல…. சொல்ல…..

ரமணிக்கு அலுவலகமே தலைகீழாய் சுற்றுவது போலிருந்தது. நடுங்கும் கைகளால் மேஜையைப் பிடித்துக்கொண்டு தடுமாறியபடி இருக்கையில் அமர்ந்தான்.

சித்ரா போலிப் பதற்றத்துடன், சார் என்ன  ஆச்சு? என்றபடியே அவன் அருகில் வந்தாள். ஒன்னுமில்ல. நீ போகலாம் என்று சொன்னவனின் முகம் நன்றாகவே வியர்த்திருந்தது.

ஆண்மை வெறியுடன் பாய நினைத்த மனித மிருகத்தை வெட்டிச் சாய்த்த பெருமிதத்தோடு அவன் அறையிலிருந்து வெளியில் வந்தாள். எல்லோரும் அவளைப் பார்ப்பதைக் கவனிக்காதது போல் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

பத்து நிமிடம் கழித்து ரமணி அறையில் இருந்து வேகமாக வெளியேறிச் சென்றான்.

அடுத்த நாள் வேறு ஒருவனை இவர்தான் உங்கள் புதிய மானேஜர் என்று நிர்வாகம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தது. எல்லோரும் சித்ராவையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பழைய மானேஜர் ரமணி என்னவானான்? அவரிடம் நீ நேற்று என்ன சொன்னாய்? என்று பக்கத்து சீட் பங்கஜம் கேட்க, சிரித்துக் கொண்டே சித்ரா, கண்ட பெண்களையெல்லாம் களவாட நினைத்தவனுக்கு நான் கண்டதைச் சொன்னேன். இப்பொழுது கண்ணுக்கு எட்டாமல் போய்விட்டான் என்றாள்.

– இசையின்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *