நமக்குள் ஒற்றுமை

ஜூன் 01-15

முதலாவது நமக்குள் ஒருவித ஒற்றுமையை உண்டாக்கிக் கொள்ள-வேண்டும். அதற்காகவே பாடுபடவேண்டும். உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டு-மானால், அதற்கு இடையூறாய் உள்ளவற்றை எல்லாம் ஒழிக்கவேண்டும். நமது நாட்டில் ஒற்றுமைக் குறைவு என்பது ஒரு தேசத்தாருக்கு ஒரு தேசத்தார் என்கிற முறையில் மாத்திரம் இல்லை.

ஒரு மதஸ்தருக்கு மற்றொரு மதஸ்தர் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. நம்மைப் பொறுத்தவரை, அதாவது இங்குக் கூடியுள்ள பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரை, ஒரு மதஸ்தர் (இந்துக்கள்) என்பவர்களுக்-குள்ளாகவே அநேக விதமான கொடுமையும், ஒற்றுமைக் குறைவும் இருந்து வருகிறது. இந்து மதத் தத்துவமே நமது நாட்டை இந்தத் தாழ்ந்த கதிக்குக் கொண்டு வந்தது என்பதே நமது கெட்டியான அபிப்பிராயம். மக்கள் அறிவையும், ஆற்றலையும், அன்பையும், மனித தர்மத்தையும், நமது மதம் என்று சொல்லுவதே அழித்துக் கொண்டு வருகிறது.

முதலாவதாக நமது நாட்டில் மக்களைப் பிறவியிலேயே உயர்வு – தாழ்வு கற்பித்து, ஒன்றுக்கொன்று ஒன்று சேர விடாமல் தடுத்து, எவ்வளவு அயோக்கியனாய் இருந்தாலும், ஒரு வகுப்பு தாய் வயிற்றில் பிறந்ததற்காக மாத்திரம் உயர்ந்தவன் என்றும், மற்றெல்லோரும் அவனைத் தொழ வேண்டியவர்கள் என்றும், ஆக்கி வைத்திருக்கிறது. அதுபோலவே, மற்றொருவன் எவ்வளவு யோக்கியனாய் இருந்தாலும் வேறு ஒரு வகுப்புத் தாய் – தகப்பனுக்குப் பிறந்ததனாலேயே அவன் தாழ்ந்தவனென்றும், தொடக்கூடாதவன், பார்க்கக் கூடாதவன், கிட்ட வரக்கூடாதவன், அவனவன் பக்தி செலுத்தும் தெய்வத்தைக் கூடப் பார்க்கக் கூடாதவன் என்றும், பொதுத் தெருவில் நடக்கக் கூடாதவன் என்றும் தடுக்கிறது.

இந்தக் கொடுமைகள், முட்டாள்-தனமும் கொண்ட ஆணைகள் நமது நாட்டில் தான் இருக்கிறதே தவிர, வேறு நாட்டில் கண்டிப்பாய் இம்மாதிரிப் பிறவி பேதம் கற்பிப்பதே கிடையாது. இது மனிதர்களுக்கு மாத்திரமல்லாமல், கடவுள்கள் என்று சொல்லப்படுபன-வற்றுக்கும் இத்தோஷம் கற்பிக்கப்-பட்டிருக்கிறது. நம்முடைய நாட்டுப் பழந்தமிழ் சாத்திரங்களில் இம்மாதிரிக் கொடுமையும், மூடத்தனமும் கொண்ட விசயங்கள் மருந்துக்குக் கூடக் காணப்-படுவதில்லை. நமது நாட்டுக்கு, அயல்நாடு-களில் இருந்து வந்து குடியேறின ஒரு கூட்டத்தாரால் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இந்து மதம், நம்மை இந்த இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. பிறப்பினால் உயர்வு – தாழ்வு வகுக்கும் தன்மையான வருணம், ஆச்சிரமம், தர்மம், ஜாதி, பிராமணன், சத்திரியன், சூத்திரன், பஞ்சமன், சண்டாளன் முதலிய வார்த்தைகள் தமிழ் மொழிகளே அல்ல. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பாகுபாடு இருந்ததும் இல்லை. தமிழ்நாட்டிற்கு இப்பேர்ப்பட்ட பாகுபாடுகள் எந்த விதத்திலும் வேண்டியதும் இல்லை. அது எந்த விதத்திலும் நடக்கக் கூடிய காரியமும் அல்ல. இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் அபிப்பிராயம் கூட மறுக்க வேண்டியதாகவே இருக்கிறது. பிராமணன் என்பதாக ஒரு ஜாதியோ, ஒரு வகுப்போ, ஒரு மனிதனோ தனியே இருக்க-வேண்டும் என்பதன் அவசியம் என்ன? ஜனசேவை செய்வது பிராமணர்களுடைய தர்மம் என்றும், அதற்காகவே அவர்கள் பிறவியிலேயே பிராமணர்களாகப் பிறந்திருக்-கிறார்கள் என்றும், மகாத்மா சொல்லுகிறார். ஜனசேவை என்பது ஒரு ஜாதிக்கோ, ஒரு மனிதனுக்கோ சொந்தமானதல்ல. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒருவனுக்கு ஒருவன் உதவி, உபகாரம், சேவை முதலியவை செய்யவேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் பரோபகாரத்திற்கு ஒதுக்கி வைத்த நேரங்களில் எல்லாம் ஜனசேவை செய்தவனாகிறான், ஒரு மனிதன் ஒரு பொதுக் கிணறு வெட்டினால், வெட்டி வைத்தால், ஒரு பாதை துப்புரவு செய்தால், செய்வித்தால், சுகாதார விஷயத்தில் வீதி கூட்டினால், கூட்டு வித்தால், இன்னும் இதுபோன்ற காரியங்கள் செய்தால் ஜனசேவை செய்தவனாகிறான்.

இது ஒரே வருணத்திற்கு அல்லது ஜாதிக்கு, வகுப்புக்கு என்பதாக ஏன் பிரித்து வைக்கவேண்டும். எப்படிப் பிரித்து வைக்க முடியும். மற்றவர்களுக்கு ஏன் அந்தப் பாத்தியம் அவரவர் சவுகரியப்படி செய்ய விடக்கூடாது. தவிர, நாட்டை ஆள்வது சத்திரியனுக்கு உரிய தர்மம் என்று சொல்லுவோம். ஆனால், ஒரு நாட்டை ஒரு மனிதன் தான் ஆள முடியும். ஒரு வருணமோ, ஒரு ஜாதியோ, ஒரு வகுப்போ ஆள முடியாது. அப்படிப் பார்த்தால் ஒரு நாட்டிற்கு ஒரே ஒரு சத்திரியன் தான் இருக்க முடியும். நாட்டை ஆளுகிறவனுடைய ஜாதியெல்லாம் சத்திரிய ஜாதி ஆகிவிட்டால், உலகத்தில் ஆட்சி புரியாத ஜாதியே கிடையாது. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு ஜாதியோ, வகுப்போ உலகம் முழுவதையுமோ அல்லது ஒரு பாகத்தையோ ஏதாவது ஒரு காலத்தில் ஆண்டுதான் இருக்கின்றது. ஆகவே, எல்லோரையுமே சத்திரியர் வருணத்தில் தான் சேர்க்கவேண்டும். அப்படிக்கு இல்லாமல், ஒரு சமயம் மகாத்மா மைசூரில் சொன்னதுபோல், “எளியவர்களைப் பாதுகாப்பது, சத்திரியனுடைய தர்மம் என்பதாகப் பார்த்தாலும், எளியவர்களைப் பாதுகாப்-பதற்கு ஒரு தனி வருணமோ, ஜாதியோ எதற்காக வேண்டும்? எப்படி இருக்க முடியும்? பிறவி சத்திரிய வருணத்தில் எளியவர்கள் இருக்கமாட்டார்கள்.

அன்றியும், மற்றவர்கள் எளியவர்களைக் காக்கக் கூடாதா, மனிதனானவன் அவனவன் வாழ்வில் எளியவர்களைக் காப்பதற்கு ஏதாவது ஒரு நேரமோ, செய்கையோ ஒதுக்கி வைத்துக்-கொண்டு செய்தால், அது எளியவர்களைக் காத்ததாகாதா? இப்படியே பிறவி வைசிய வருணத்திற்கு என்ன தர்மம் கட்டுப்பட்டது என்றால், வைசியர்கள் வியாபாரம் செய்தல் வைசியர்கள் தர்மம் என்று ஒரு பக்கமும், மாடு மேய்த்தல் வைசியர் தர்மம் என்று மற்றொரு பக்கத்திலும், உழவு செய்தல் வைசிய தர்மம் என்று மற்றொரு பக்கத்திலுமாக ஆரிய நூல்களில் உளறிக் கொட்டி இருக்கிறது. இதில் எதை மகாத்மா ஒப்புக் கொள்கிறாரோ அதைப் பற்றி நமக்குக் கவலையில்லாவிட்டாலும், இந்தத் தொழிலுக்கு ஒரு தனி பிறப்பு, வருணம் எதற்காக ஒதுக்கி வைக்கவேண்டும். இவற்றை எப்படி ஒதுக்கி வைக்க முடியும். மற்றவர் ஏன் செய்யக் கூடாது. அதுபோலவே, சூத்திரர் என்பவர்களுக்கும் என்ன என்னமோ தர்மம் சொல்லுவதானாலும், குறிப்பாய் அடிமைத்தனத்தையும், பிராமண வருணத்தானுக்கு வைப்பாட்டி மகன் என்கிற தத்துவத்தையும் தான் சொல்லுகிறது. இதில் எதை மகாத்மா ஒப்புக்கொள்வதானாலும், இந்தக் காரியத்திற்கும் ஒரு தனி வருணம் எதற்கு என்றும், இந்தக் காரியங்கள் மற்றவர்கள் ஏன் செய்யக் கூடாது என்றும், மற்றவர் செய்யாமல் இருக்க முடியுமா என்றும்தான் கேட்கிறோம்.

இப்படிப்பட்ட ஆபாசங்களை நம்ம தலையில் சுமத்தி, யோக்கியன் – அயோக்கியன் அடையாளம் தெரிவதற்கு இல்லாமல், மக்களைப் பிரித்துப் பாழ்படுத்தி இருக்கிற மதக் கொடுமையாலே தான் நமது நாட்டிற்குச் சுபாவமாகவே விடுதலை கெட்டிருக்கிறதே அல்லாமல் வேறு அல்ல என்று பொருள்படும் படிக்கும் மற்றும் இதுபோலவே கடவுள், பக்தி, கோயில், சடங்கு முதலிய விசயங்களில் நம்முடைய மூடக் கொள்கைகளையும், பார்ப்பனர்கள் கொடுமையையும் விரிவாக எடுத்துச் சொல்லி இவை ஒழிவதுதான் சுயராஜ்யம் அளிக்கவல்லது என்றும், இதுவே அரசியல் என்பது என்றும், இதைத் தவிர வேறு விசயங்களை அரசியல் என்றும், சுயராஜ்யம் என்றும், உரிமை என்றும், தேசியம் என்றும் பேசுவது எல்லாம் வீண் புரட்டு.

– (`குடிஅரசு, 28.8.1927)

– தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *