கேள்வி : கிரிக்கெட் சூதாட்டத்தைப் பார்த்த பிறகாவது கிரிக்கெட் போதையிலிருந்து மக்கள் மீள்வார்களா?
– வெ.செல்வநாதன், திருப்பூர்
பதில் : மீள்வார்களா என்பது சந்தேகம்தான். காரணம், இந்தப் போதை அவ்வளவு எளிதாக இறங்கிவிடாது. என்றாலும், அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகர்ந்துதானே ஆகவேண்டும்?
கேள்வி : மின் உற்பத்தி, விலைவாசி உயர்வு, தண்ணீர்த் தட்டுப்பாடு போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கும்போது ரூ.100 கோடி செலவில் தமிழ்த்தாய் சிலை தேவையா?
– ப.குணசீலன், நீடாமங்கலம்
பதில் : மில்லியன் டாலர் கேள்வி _ இருந்தாலும் கலைஞர் குமரியில் வைத்த வள்ளுவர் சிலையைவிட உயரமானதை தென்மாவட்டத்தில் அமைக்காமல் இருக்க முடியுமா? பலே பலே! தமிழ்த்தாய் _ வள்ளுவர் போட்டி நல்ல போட்டிதான்!
கேள்வி : சி.பி.அய்-யின் நம்பகத்தன்மை கேள்விக்-குறியான நிலையில் 2ஜி வழக்கில் சி.பி.அய். விசாரணையை நம்ப முடியுமா?
– எம்.முரளி, கும்பகோணம்
பதில் : இதுவும் மற்றொரு மில்லியன் டாலர் கேள்வி. எளிதில் பதில் அளிக்க முடியாத ஒன்று!
கேள்வி : கோயில்களில் அன்னதானத் திட்டத்தைத் தமிழக அரசு அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதா?
– ஆர்.மேகலா, காட்பாடி
பதில் : பக்தீ என்ற பெயரால் சோறு போட்டாலாவது பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு வந்தால் சரி!
கேள்வி : தமிழக அரசு, பத்திரிகைகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விளம்பரம் தரும் நிலையில், அரசு மீதான பத்திரிகை விமர்சனத்தை எப்படி எடுத்துக்கொள்வது? – ந.இளவேனில், அருப்புக்கோட்டை
பதில் : விமர்சனங்கள் இருந்தால் அல்லவா அது நடுநிலையா, ஒரு நிலையா என்று பார்க்க முடியும். அதற்கே வாய்ப்பு மிகவும் குறைவுதானே!
கேள்வி : பாகிஸ்தானுடன் இந்திய வீரர்கள் விளையாட தடை, அரசியல், வர்த்தகம், தொழில் ஆகியவற்றை உதறித் தள்ளுகிற மத்திய அரசு, சீனாவிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பது நியாயமா என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளாரே? – மன்னை சித்து, மன்னார்குடி
பதில் : இளைச்சவனுக்கும் வலுத்தவனுக்கும் ஒரே மாதிரியா இருக்க முடியுமா? சீனா வல்லரசு _ பாகிஸ்தான் அப்படி அல்லவே என்பார்களோ என்னவோ!
கேள்வி : சி.பி.அய்-யிடம் காங்கிரஸ் அரசு அதிகாரம் செலுத்துவதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளதே, சரியா?
– ஜி.சுருதி, பெரம்பலூர்
பதில் : உச்ச நீதிமன்றம் கூறியது 100க்கு 100 உண்மைதானே! சி.பி.அய். என்பதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவது நாட்டுக்கு நல்லதா?
கேள்வி : கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் 900 நீதிபதிகளில் 500 பேர்கள் மீது ஊழல் புகார்கள், நிலுவையில் உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஒய். இக்பால் குறிப்பிட்டுள்ளது எதனைக் காட்டுகிறது? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : நீதித்துறையிலும் ஊழல் கீழே ஊடுருவுகிறது என்ற உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார் மேனாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி _ இந்நாள் உச்ச நீதிமன்ற நீதிபதி!
கேள்வி : தமிழ்நாட்டில் சட்டமன்றத்தின் செயல் பாடுகள் பற்றி பத்திரிகையாளர் என்ற முறையில் தாங்கள் எப்படிக் கணிக்கிறீர்கள்?
– ஜி.சரசுவதி, ஜீயபுரம்
பதில் :இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும்! _ என்ற குறளை நினைவூட்டுவதாக உள்ளது!
கேள்வி : 2 ஆண்டுகள் ஆட்சியை முடித்துள்ள தமிழக அரசு பற்றிய தங்களது மதிப்பீடு என்ன? – எஸ்.உமா திருவள்ளூர்
பதில் : மின்வெட்டுத் தொடருவது; பல முந்தைய திட்டங்களுக்கு முட்டுக்கட்டை, எதிர்க்கட்சிகளுக்குப் போதிய வாய்ப்புத் தராமை _ இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையிலும் காவிரி வழக்கிலும் வரவேற்க வேண்டியவை என்று சில உள்ளதும் ஆக நல்லவைகள் குறையவும், அல்லவைகள் அதிகமாகவும் உள்ளது. இனிமேலாவது இதன் விகிதம் மாறினால் நல்லது!