ஈரோட்டுச் சூரியன் 13

மே 01-15

தந்தையான இராமசாமி

இறைவன் மீதான பக்தி ஒரு புறம் இருந்தாலும்
கணவன்  மீதான பக்தியின் ஆதிக்கத்தால்
இராமசாமி குறிப்பிடும்
மூடநம்பிக்கைகள்
சரியெனத்தான்
நாகம்மைக்குப் பட்டது;
ஆனாலும் இவ்வாழ்க்கையே
ஆண்டவன் இட்டது;
என்றே அவரும்
ஆண்டவனை நம்பினார்;
மனதிற்குள் வெம்பினார்;

இராமசாமியை
பக்தி மார்க்கத்திற்கு
அழைத்து வர முடியாது
என நாகம்மை
உணர்ந்து கொண்டார்;
இராமசாமியின் உணர்வோடு
ஓரளவு புணர்ந்து கொண்டார்;

நாகம்மையும்
இராமசாமியும்
அன்பையும் பாசத்தையும்
பகிர்ந்து கொண்டனர்;
பெற்றோர் அதை
நெகிழ்ந்து கண்டனர்;

இனிமையான இரண்டாண்டு கால
இல்லற வாழ்க்கைக்கு
அச்சாரமாக
நாகம்மை கருவுற்றார்..
அகத்தில் திருவுற்றார்;

குடும்பமே
குதூகலித்தது;
மகிழ்ச்சியில் திளைத்து
மனம் சலித்தது;

தாயாகப்போகும்
நாகம்மை
இறைவனை போற்றி மகிழ்ந்தார்;
தந்தையாகப் போகும்
இராமசாமி தன்
தோழமைகளுக்கு மதுவை
ஊற்றி மகிழ்ந்தார்;
பேறுகாலம் நெருங்கியது;
நாகம்மையின் துடிப்பைக் கண்டு
இராமசாமியின்
மனம் நொறுங்கியது;

அழகிய பெண் மகவை
நாகம்மை ஈன்றாள்:
அம் மகவோ
இன்னொரு நாகம்மை
போன்றாள்;

அந்தப் பெண் குழந்தை
நாகம்மையின் முகபாவத்தை தாங்கியிருந்தாள்;
அழகையும் நிறத்தையும்
நாகம்மையிடமே
வாங்கியிருந்தாள்;

நாகம்மையின் சிந்தையாக இருந்த
இராமசாமி
தந்தையானார்..

மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த
இராமசாமியின் மனமது
மெல்ல ஓய்ந்தது;
அவரது கண்கள்
நாகம்மையை மேய்ந்தது;

உயிரைக் கொடுத்து
உயிரைக் கொடுக்கும்
இப்பிரசவம்
ஆடவன்
பெண்ணவளுக்கு
கொடுக்கப்படும் தண்டனையோ;
இது மட்டும்தான் பெண் நிலையோ;
பெண்ணவள்
பிரசவிக்கும் எந்திரமா;
இதுதான் இயற்கையின் தந்திரமா;

நாகம்மையின்
உடல்நிலையே இப்படி இராமசாமியை
யோசிக்க வைத்தது;
யோசித்ததெல்லாம்
ஒன்று சேர்ந்து
அவர் மனதைத் தைத்தது;

போதும் ஒரு குழந்தை
அப்போதே முடிவெடுத்தார்;
அதற்காக அனைத்தையும் தடுத்தார்;

இன்னொரு குழந்தைக்காய்
பெண்மையை சித்ரவதை செய்ய
இராமசாமியின் மனம்
இடம் கொடுக்கவில்லை;
அதற்கான பயணத்திற்கு
தடம் கொடுக்கவில்லை;

(சூரியன் உதிக்கும்)

மதுமதி
ஓவியம்: மணிவர்ம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *