துணிவு

மே 01-15

ரம்யாவும் ரமேசும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தனர். ஒரே பேருந்தில் பயணம் செய்தாலும் இருவரும் பேசிக் கொள்வதில்லை.

ஒருநாள் கல்லூரி விட்டதும் பேருந்தைப் பிடித்து இறங்கி ஊருக்குள் நடந்து வரும்போது மழை இடி மின்னலுடன் வரவே, ரமேஷ் வேகமாக நடந்தான்.

இதனைக் கவனித்த ரம்யா, ரமேஷ் குடை எடுத்துக்கிட்டு வர்லியா?- எனக் கேட்க, இதை எதிர்பார்க்காத ரமேஷ் திரும்பிப் பார்த்து இல்லிங்க….! என்றான் சலனமில்லாமல்.

அப்டியா….. சரி…சரி உங்க புத்தகங்களை எங்கிட்ட குடுங்க, நான் குடை வச்சுருப்பதால் புத்தகங்களை நனையாம எடுத்துக்கிட்டுப் போயி, நாளைக்குக் கொண்டு வருகிறேன் என்றாள்.

புத்தகங்களை நனையாமல், பாதுகாப்பாகக் கொண்டு போய் தன் வீடு சேர்ந்தாள் ரம்யா.

மறுநாள் ரம்யா, ரமேஷின் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வழக்கமாகப் போகும் பேருந்தில் ஏறினாள்.

அங்கு ரமேஷைக் காணாமல் திகைத்து, மழையில் நனைந்து விட்டாரோ…? உடல்நலம் சரியில்லையா? என்ற சிந்தனையோடு, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்ற போது, ரமேஷ் சற்றுத் தொலைவில் வேகமாக வந்து கொண்டிருந்தான்.

ரமேஷ் அருகில் வந்தவுடன், ரம்யாவே பேச ஆரம்பித்தாள். மழையில் நனைஞ்சிட்டீங்களா? ஏன் தாமதமா வர்றீங்க? என அக்கறையோடு கேட்டாள்.

எங்க அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தேன். இப்ப எப்படியிருக்காங்க? என்று ரம்யா பொறுப்போடு கேட்டதும், மருத்துவரிடம் சென்று வந்தபின் பரவாயில்லை என்றான். புத்தகங்களை வாங்கிய ரமேஷ் நன்றி தெரிவித்தான்.

மறுநாள் காலையில் வழக்கம்போல கல்லூரிக்குப் புறப்பட்ட ரம்யா, வழக்கத்திற்கு மாறாகத் தன்னை ஒப்பனை செய்திருந்தாள்.

இந்த வருடத்தோடு ரம்யாவின் படிப்பு முடிகிறது. அதனால் பரீட்சை முடிந்தவுடன் ரம்யாவிற்குத் திருமணம் செய்துவிட வேண்டுமென்று ரம்யாவின் பெற்றோர்கள் பேசிக் கொண்டதைக் கவனிக்கத் தவறவில்லை.

ரம்யாவும், ரமேசும் திருமண வயதைக் கடந்தவர்கள். பொதுவாகக் காதல் விஷயத்தில் பெண்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது.

ஆனால் இவர்களின் நட்பில் ஒரே ஒரு இடையூறுதான் இருந்தது. அதையும் சமாளித்துவிடலாமென்று ரம்யா துணிந்து விட்டாள். ரம்யாவின் பெற்றோர் அவர்கள் பேசிக் கொண்டபடி மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர். இந்த நிலை, ரம்யாவிற்கு மனத்தடுமாற்றத்தைக் கொடுத்தது.

கடைசித் தேர்வு முடிந்து வரும்போது, ரமேஷ் இனிமேல் நாம் சந்திக்க முடியாது என ஏக்கத்தோடு சொன்னாள் ரம்யா. ஏன்? நீங்க ஊர்லதான இருப்பீங்க? என்று ரமேஷ் கேட்க, ஆமா….. ஊர்லதான் கொஞ்சநாள் இருப்பேன் என ரம்யா கவலையோடு சொல்ல, கொஞ்சநாள் கழிச்சி எங்க போவீங்க? ரமேஷ் பதட்டத்துடன் கேட்க, இதைக் கவனித்த ரம்யா, இங்க பாருங்க ரமேஷ், உங்களுக்கு உள்ள பதட்டம் எனக்கும் இருக்கு.

இவ்ளோ நாளா சாதாரணமா இருந்த நீங்க. இப்போ பதட்டத்தோடு பேசுறீங்க. சுத்தி வளைக்காம சொல்லிடுறேன். எங்க வீட்ல, எனக்குத் திருமண ஏற்பாடு செய்றாங்க என்றதும், ரமேஷ் நிலை தடுமாறினான்.

என்ன ஒங்களுக்குப் புடிச்சிருக்கா ரமேஷ்?

என்ன கேள்வி ரம்யா இது? ஒடம்பப் பார்த்து உயிர் கேக்குற கேள்வி மாதிரி இருக்கு! ஆமா ரமேஷ், நீங்க எனக்கு உயிர். இந்த ரமேஷ்ங்கிற உயிர் இருந்தாதான் என் ஒடம்பு நிலைக்கும். நீங்க என்ன சொல்றீங்க ரமேஷ்? தீர்மானமாகக் கேட்டாள் ரம்யா.

பின்பு, சமுதாயத்தில் பல பிரச்சனைகள் நம்மளால வரும்-; பரவாயில்ல-; எங்கப்பா ஊர்ல ஒரு முக்கியஸ்தர்-; பணக்காரருங்கூட. எதாயிருந்தாலும் நாம் சமாளிப்போம் என்றாள்.

நம்ம ஊர் காளியம்மன் கோயில் திருவிழா அன்னைக்கு ஊர் ஜனங்கள் கோயில் விழாவில் மும்முரமா இருப்பாங்க. நம்ள யாரும் கவனிக்க மாட்டாங்க என்று இருவரும் பேசி முடிவுக்கு வந்தனர்.

கோயில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக, ஊர் முக்கியஸ்தரான ரம்யாவின் அப்பா வடிவேல் கோயிலுக்கு முன்புறம் கூட்டம் போட்டு, கிராமவாசிகளுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் வீட்டு வேலையாள் பதட்டத்தோடு ஓடிவந்து, பவ்யமாக நின்றதை, எதேச்சையாகப் பார்த்த வடிவேல், என்ன….? சுப்பா? ஏன் பதட்டத்தோடு வந்து நிக்ற…..? என்ன விஷயம்? என எதிர்பார்ப்போடு கேட்டார்.

அது வந்துங்க…… அய்யா! கொஞ்சம் ஒங்கள்ட்ட தனியா சொல்லணும் என்று, அடிமை வேலை செய்தாலும் உயர் ஜாதிக்காரரின் கௌரவத்தைக் காப்பாற்ற நினைத்தான்.

சுப்பனிடம் ஏதோ முக்கியமான விஷயம் இருக்கிறது, என்பதை ஊகித்துக் கொண்ட முதலாளி கூட்டத்தை விட்டு எழுந்து வந்து, சுப்பனைத் தனியே அழைத்துப் போய் கேட்டார். அப்போது, சின்ன அம்மாவ இன்னிக்குக் காலையிலேயிருந்து காணுங்க மொதலாளியென சற்று விலகி நின்றே சொன்னான்.

என்னது…..! காணுமா? நல்லாத் தேடிப் பாத்திங்களா? ஆச்சி எங்கே? என்றார்.

அவுங்க அழுதுக்கிட்டு ஊட்ல இருக்காங்க எசமான். அழாத குரலோடு சொன்ன சுப்புவிடம், சரி நீ போ; நான் பத்து நிமிசத்ல வந்துடுறேன். இதைக் கேட்ட சுப்பு வேகமாக முதலாளி வீட்டை நோக்கி நடந்தான்.

கிராமவாசிகள், இவர்கள் இருவரும் ரகசியமாகப் பேசிக் கொண்டதைப் பார்த்து, ஏதும் புரியாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தனர்.

சுப்பனைப் போகச் சொன்ன முதலாளி கூட்டத்திற்கு வந்து, -_ அது வந்து ஒன்னுமில்லிங்க. வீட்ல ஒடம்பு சரியில்லியாம். அதான் சுப்பு சொல்லிட்டுப் போறான்னு தானாகவே ஒரு பொய்யைச் சொன்னார்.

நீங்கல்லாம் அவுங்க அவுங்களுக்குக் கொடுத்த வேலையைப் பாருங்க. நான் போயி பாத்துட்டு ஒடனே வந்துர்றேன் என உத்தரவு போட்ட வடிவேல் தனக்குச் சாதகமான நாட்டாண்மையைப் பார்த்து,
என்னய்யா…. சொக்கு, நீங்க மட்டும் வாங்க, பாத்துட்டு வந்துருவோம் என அழைக்க, சொக்கு மறுப்பேதும் சொல்லாமல் பின் தொடர்ந்து வீடு போய்ச் சேர்ந்தபோது வடிவேல் மனைவி கமலம் விம்மி விம்மி அழுது கொண்டிருந்ததைப் பார்த்தார்.

என்ன கமலம்? என்ன ஆச்சி என விரக்தியோடு கேட்க, காலையிலேயிருந்து ரம்யாவைக் காணுங்க. அடக்க முடியாத அழுகையோடு சொன்னாள்.

அப்போது அங்க வந்த பால்காரன், நான் காலையிலே ஒம்போது மணிக்குப் பால் வித்துட்டு வரும்போது அவுங்க ரெண்டு பேரையும், பாத்தேங்க, முதலில் பால்காரன்தான் முடிச்சை அவிழ்த்தான்.

யார்யா இன்னொருத்தர்? கோபங் கொப்பளிக்கக் கேட்டார் வடிவேல். அவந்தாங்க நம்ம ஊர்ல தலித் மருதன் மவன் ரமேஷ்.

இதையெல்லாங் கேட்டுக் கொண்டிருந்த நாட்டாண்மை சொக்கு இங்க பாருங்க, அவ்ளோ சீக்கிரம் எந்த முடிவுக்கும் வராதீங்க. அந்தப் பொண்ணு பீரோவுல எதாச்சும் லட்டர், கிட்டர் இருக்கான்னு தேடிப் பாருங்க என்றார்.

இதைக் கேட்ட வடிவேல் படபடப்புடன் ரம்யாவின் பீரோவைத் திறந்தபோது, அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு வணக்கம். நானே என் துணையைத் தேடிக் கொண்டேன். தேட வேண்டாம். மன்னிக்கவும். என்று கடிதம் இருந்தது.

சொக்கு, ஒனக்கும் பால்காரருக்குந்தான் இந்த விசயந் தெரியும். இத நீங்க வெளில உடாதீங்க. அடுத்து என்ன செய்யலாங்ருத்த சொல்லுங்க. கமுக்கமா முடிக்கணும். என்னா சொல்றது புரியுதா? இருவரும் தலையாட்டினர்.

ரம்யா அப்பா வடிவேலும் சொக்கும் சேர்ந்து அவுங்க ஊர் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் பெண்ணைக் காணவில்லை-யென்று புகாரும் கொடுத்தனர்.

இந்த நிலையில் வெளியேறிய ரம்யாவும், ரமேசும் காவல்துறையினர் தங்களைத் தேடுவதையறிந்து, சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைய, அவர்கள் சம்மந்த-பட்ட காவல் நிலையத்திற்கும் பெற்றோர்-களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.

நாங்கள் ஊர்ப் பஞ்சாயத்தில் வைத்துப் பேசிக் கொள்கிறோம் என்ற வாய் வார்த்தை உறுதியின் பேரில் கேட்டார் ரம்யாவின் அப்பா. அப்பொழுது எஸ்.அய். சொன்னார் மேட்டர் ரொம்பச் சிக்கலானதுய்யா. இந்தக் காதல் ஜோடியை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் வந்தார்கள். ஆனால் எஸ்.அய். கிடுக்கிப்பிடி போட்டவுடன் அவர்கள் தயக்கத்தோடு ஒப்புக் கொண்டனர்.

இது சம்மந்தமா ஊர்ல எந்தப் பிரச்சினையும் வச்சிக்கக்கூடாது. அப்டி, வச்சிகிட்டா அன்டச்சபிளிட்டி கேஸ் போட்டு ஒங்க எல்லாரையும் உள்ளே வச்சுருவேன் புரியுதா? எனக் காவல்துறையினர் அதிகாரத்துடன் மீண்டும் எச்சரித்து, வந்திருந்தவர்கள் எல்லாரிடமும் கையொப்பம் வாங்கிக்கொண்டு காதல் ஜோடியை அழைத்துச் செல்லவும் கிராமம் நல்ல முடிவை எடுக்கவும் அறிவுரை கூறி அனுப்பினர்.

கூட்ட நடுவிலே நின்ற ரம்யாவையும் ரமேசையும் பார்த்து, ஏம்பா ரமேசு, நீ ஏன் ரம்யாவ அழைச்சிட்டுப் போனே? என்றார் சொக்கு.

மனதால் இருவரும் விரும்பினோம் என்றதும், ஏம்மா ரம்யா, அவன் வேற ஜாதி, நீ வேற ஜாதி. அவன் பின்னால நீ போலாமா? என்றார்.

ஜாதி ரெண்டே ரெண்டுதான்னும், ஆண் ஒரு ஜாதி, பெண் ஒரு ஜாதின்னு தான் ஔவையார் சொல்லியிருக்காங்க. அவுங்க சொன்ன ஆண்ஜாதி பின்னாலதானே போனேன்.

என்னம்மா இப்டிச் சொல்ற? ஒலகத்துல பல ஜாதி இருக்கா – இல்லியா? என்றதும், இருக்கிற ஜாதி எல்லாம் பாழாப் போன பார்ப்பானால் பிரிக்கப்பட்டதுதாங்க! உழவன் சேத்துல கால் வக்கிலன்னா, மத்தவங்க சோத்துல கை வக்க முடியுங்களா?

அதெல்லாம் அவுங்க விதிப்பயன்மா என்றார். வதி, கர்மம் என்பதெல்லாம் மனிதனுக்கு மனிதனே ஏற்படுத்திக் கொண்டதுதாங்க.

மனிசனால் ஏற்பட்டது இல்லேம்மா…. கடவுளால் ஏற்பட்டது என்றார் நாட்டாமை. கடவுளால் ஏற்பட்டதுன்னா, கடவுள்தான் என்ன கேக்கணும். எப்படீன்னா நீ ஏன் தலித் பையனுடன் போனேன்னு கேக்கணும் என்றாள் ரம்யா.

எப்டியிருந்தாலும் ஜாதிவுட்டு ஜாதி போனது தப்பில்லையா? என்றதும், நாம் பய பக்தியோட வணங்கும் முருகப் பெருமான் குறப்பெண்ணாகிய வள்ளிய கட்டிகிட்டானே அவன் ஜாதி மாறலாமா? கிருஷ்ணன் இடையர் குலப்பெண் ராதையைக் கல்யாணம் பண்ணிகிட்டானே அவன் மட்டும் வேற ஜாதியில- கல்யாணம் செய்யலாமா?

அதெல்லாம் புராணம்மா. எவனோ எழுதி வச்சான். அது கதைக்கு ஆகாதும்மா. நடமுறையில அவனவன் அந்தத் தொழில் செய்து பொழைச்சிகிட்டுருக்றான். அததான் நாம எடுத்துக்கணும்.

அவனவன் தொழில் என்று சொல்லிவிட்டு அந்தந்தத் தொழில் செய்றவனைக் கேவலப்-படுத்தலாமா?

பாலுக்காக பசுவை வளக்கிறோம். அது செத்துட்டா, அத இன்னொருத்தன் அப்புறப்-படுத்துறான். அப்டியே போட்டுட்டா நாறும். அத அப்புறப்படுத்துறவன வெட்டியான் என்று ஜாதி முத்திரையிட்டு வச்சிருக்கு சமுதாயம். மல்லிகையும், முல்லையும் சுமக்கின்ற ஏழைப் பெண்களின் தலை, மண்ணையும் செங்கல்லையும் சுமப்பது விதிதானா?

வேதம் என்னும் கடவுளின் கட்டளை என்றும், நாங்கள் உயர்ந்த ஜாதிகள் என்றும் பொய் சொல்லிக்கொண்டு ஜாதி, மத பேதங்களைப் பிரிப்பவர்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்களா?

எப்போதும் பொய் சொல்லாமல், முதலாளியின் சொத்தைத் திருடாமல் நம்பிக்கையோடு பாதுகாக்குறாங்களே ஏழை மக்கள் அவர்கள்தான் மிக உயர்ந்த ஜாதி என்று ஒரு பிரசங்கமே செய்தாள் ரம்யா. கூட்டத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் கைதட்டினர்.

அதெல்லாம் சரிப்படாதும்மா. இது ஜாதி பிரச்சனைம்மா. நாட்டாண்மை விரக்தியின்றி சொன்னார்.

ஜாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற மனித சமுதாயம், எத்தனையோ பெண்கள் முப்பது வயதாகியும் வரதட்சணை-யால் முதிர்கன்னியாக இருக்கிறார்களே அதை ஒழிக்க என்ன செய்கின்றது? அல்லது செய்துள்ளது?

நீ சொல்றதெல்லாம் இப்ப நடமுறைக்கு ஒத்து வராதும்மா.

ஒங்களுக்கு எதுவுமே ஒத்து வராதுன்னா – இப்ப என்னதான் செய்யணும்? ரம்யா கொஞ்சம் உரக்கவே கேட்டாள்.

இங்க பாரும்மா, நடந்தது நடந்து போச்சி. அதனால நீ இந்தப் பையன மறந்திடு. கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் அமைதியாகச் சொன்னார். மறந்திட்டா? திகிலோடு கேட்டாள் ரம்யா.

ஒனக்கு நம்ம ஜாதியிலே மாப்ள பாத்து கல்யாணங்கட்டி வச்சுடுவோம் என அதே பெரியவர் சொல்ல, பெரியவர் சொன்னதைக் கேட்ட ரம்யா, திகைத்துப் போய், இங்க பாருங்கய்யா….. நான் கற்பு இழந்தவ, ஒங்க ஜாதிய காப்பாத்த கற்பிழந்த என்ன இன்னொரு ஆண் ஜாதிகிட்ட கொடுப்பது, ஆண் ஜாதிக்கு ஆண் ஜாதியே செய்யிற துரோகம். நியாயம் தான்னு நீங்க பதில் சொன்னீங்கன்னா நான் ரமேசை மறந்திடுறேன் என்றதும் அனைவரும் அமைதியாகக் கலைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *