அய்யா,
தமிழ்ப் புத்தாண்டும், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கும் இணைத்து சுறவத்திங்கள் முதல் நாள் வருவதை ஒட்டி, உண்மை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சில நாள்கள் முந்திதான் எனக்குப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் வெளிவந்த அத்தனை கட்டுரைகளும் ஒன்றை ஒன்று மிஞ்சக் கூடிய சொத்தை இல்லா முத்துக்கள். அறிவு ஆசான் அவர்கள் 15.1.1949 குடியரசு ஆசிரியர் உரையாக (தலையங்கம்) பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்? என்ற தலைப்பில் வந்த கட்டுரையை நான் பல தடவை படித்துப் படித்து இன்புற்றேன். எனக்கு அது தெவிட்டாத தேனாக இருந்தது.
பெரிய தமிழ் அறிஞாரலும் வரைய முடியாத கட்டுரை இது. தமிழ் அறிஞர்களுக்குக்கூட இம் மாதிரி எழுத வருமா என்பது என் அய்யமே!
அடுத்து மொழிஞாயிறு ஞா. தேவநேயர் தமிழர் செய்ய வேண்டியது எது? ராபர்ட் கால்டுவெல் எழுதிய தமிழன் சிறப்பு, நா. மம்மது எழுதிய தமிழிசை அகராதி , பாவேந்தர் வரைந்த அந்நாள் பொங்கல் வாழ்த்துகள், புலவர் பா. வீரமணி திருக்குறளைப்பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரை, ஒரிசா பாலு என்ற பால சுப்பிரமணியம் எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த, அதுவும் இக்காலத்தவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளக்கூடிய சிறந்த ஆய்வுக் கட்டுரை, சோ. தங்கவேலு அவர்கள் எழுதிய தாய் நில வரலாறு என்ற நூலிலிருந்து தமிழர் பிளவுபட்ட வரலா-று என்ற தலைப்பில் வெளி வந்த மிக மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரை போன்ற முத்துக்களை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துத் தொகுத்த முத்தாரமாய் உண்மை சிறப்பிதழாக வெளி வந்திருப்பது சிறப்பிலும் சிறப்பு! படித்து இன்புற்றேன். நன்றி, வணக்கம்.
மா. அப்பாசாமி, கீழக்கோட்டை
உண்மை பிப்ரவரி 16-28 படித்தேன். சிந்தனைத் துளிகள் அருமை.
இப்போது நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நாத்திகர் என்று சொல்லும்படி மானமிகு திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் கூறியிருப்பது மிகச் சிறந்த அறிவுரை.
கேரள மாநிலம் கொச்சியில் மன்னர் ஆட்சி நடந்த போது, நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் நீதிபதி இருக்கையில் இருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டு விசாரித்தார்களே, சொல்வது எப்படிக் கேட்கும்?
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்திட வேண்டும் என அரசே ஆணையிட்டால் அவர்களுக்கு உணவுக்கு வழி என்ன?
இந்தக் காலத்திலும் சகட்டு மேனிக்கு வடநாட்டுத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதை எப்போது நிறுத்துவோம்? மானமிகு தமிழர் தலைவர் அவர்கள் விடுதலை இணையத்திற்கென்றே எழுதும் சிறப்புத் தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி