தண்ணீர்…. தண்ணீர்…..

மே 01-15

பூமியில் உள்ள தண்ணீரில் 97 சதவிகிதம் கடல் நீராகவே உள்ளது. மீதியுள்ள 3 சதவிகிதத்தில் 2.25 சதவிகிதம் துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாகவும், 0.75 சதவிகிதம் பூமியில் ஆறு, ஏரி, குளங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

பூமியில் உள்ள 1.4 பில்லியன் கன கி.மீ. நீரில் நன்னீரின் அளவு 35 மில்லியன் க.கி.மீ. ஆகும். அதாவது, மொத்த நீரின் அளவில் 2.5 சதவிகிதம் மட்டுமே. உலகில் உள்ள 600 கோடி மக்களும் ஆறு, ஏரி, குளம் மற்றும் நிலத்தடியில் கிடைக்கும் 54 சதவிகித நல்ல நீரையே உபயோகப்படுத்துகின்றனர்.

உலகில் உள்ள நீர் ஆதாரங்களில் 4 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. நீரின் தரவரிசையில் 122 நாடுகளில் இந்தியா 120ஆவது நாடாக உள்ளது. நீர் கிடைக்கக்கூடிய 180 நாடுகளில் 133ஆவது நாடாக உள்ளது.

நீரில் தொழிற்சாலைக் கழிவுகள், அழுக்கு, சேறு ஆகியன சேரும்போது கலங்கலாக மாறுகிறது. கலங்கிய நீரில் நுண்ணுயிர் நாசினிகளான குளோரின், பிளீச்சிங் பவுடர் ஆகியன நுண்ணுயிர்களை முழுமையாக அழிக்க முடியாது.

மண்ணின் தன்மை, மாசுபட்ட நீர், கடல் நீர் இவற்றைப் பொறுத்து கரைந்துள்ள உப்புகளின் அளவு வேறுபடும். கரைந்துள்ள உப்புகளின் தன்மை அதிகமாக இருந்தால், நீரின் சுவை கெடுவதுடன் வயிற்றுப் பிரச்சினைகளும் ஏற்படும். நீர் மாசுபடுதல் மற்றும் உப்புகளின் தன்மையைப் பொறுத்து அமில காரத் தன்மைகளின் அளவு வேறுபடும்.

அதிக அமிலத் தன்மை கொண்ட நீரினால் உணவுக்குழாய் சவ்வு பாதிக்கப்படுவதுடன் நீர் வழங்கும் குழாய்களில் பாதிப்பும் ஏற்படலாம். மண்ணின் தன்மை, மாசு நீர், கடல் நீர் மற்றும் பாறைகளிலிருந்து வெளிப்படும் சல்பேட்டினால் வயிற்றுத் தொல்லைகள் ஏற்படும்.

அழுகும் பொருள்கள் மற்றும் இரசாயன உரங்களால் நைட்ரேட்டு படிகிறது. இதனால் Blue baby discase உண்டாகிறது. 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகள் விரைவில் பாதிக்கப்பட்டு  உயிரிழக்க நேரிடலாம்.

பாறைகளிலிருந்து உண்டாகும் ஃபுளுரைடு அதிக அளவு உள்ள நீரைப் பருகுவதால் ஃபுளுரோசிஸ் என்ற நோய் ஏற்படும். இது, பல் மற்றும் எலும்பு மண்டலத்தைப் பெரிதும் பாதிக்கிறது.

கால்சியம் மற்றும் மக்னீசியம் உப்புகள் பாறைகளில் 300/600 மி.கி/லி.க்கு மேல் இருப்பின் நீர் கடினத்தன்மை அடைகிறது. இதனால் சோப்பு நுரை வராததுடன், குழாய்களில் உப்பு படிந்து அடைப்பு ஏற்படும்.

கார்பனேட், பைகார்பனேட், 200/600 மி.கி/லி. அளவுக்கு மேல் காரத்தன்மை உண்டாகிறது. இது வழவழப்புத் தன்மையையும் குழாய்களில் அரிப்பையும் ஏற்படுத்தும்.

பாறைகளிலிருந்து இரும்புத் தாது 0.3/1.0 என்ற அளவுக்கு மேல் கரைந்து சேரும்போது நீர் பழுப்பு நிறமாக மாறிவிடும். இதன் காரணமாக, குடிநீரின் சுவை மாறுபடுவதுடன், நீர்த்தேக்கத் தொட்டி, பாத்திரங்கள், துணிகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்.

கிணற்று நீரைச் சேகரித்தாலோ அல்லது கொதிக்க வைத்தாலோ நீரில் மிகுதியாக உள்ள பைகார்பனேட், கால்சியம் கார்பனேட் என்ற இரண்டும் உப்பு வடிவில் வெளிப்பட்டு வெண்மை நிறமாகப் படிகிறது.

இதனால் உடலுக்கு எவ்விதக் கெடுதலும் கிடையாது. கலங்கலான நீரை மட்டுமே படிகாரம் போட்டுச் சுத்தப்படுத்தலாம். படிகாரத்தின் அளவு அதிகமானால், அலுமினியத்தின் அளவு அதிகமாகி-விடும். இது உடல் நலத்திற்குக் கெடுதல் விளைவிக்கும்.

காற்று, சூரிய ஒளி படும்பொழுது பாசி ஏற்படுகிறது. மேல்நிலைத் தொட்டிகளை மூடி வைப்பதலால் இதனைத் தவிர்க்-கலாம். கிணறுகளையும் நீர் சேகரிக்கும் தொட்டிகளையும் நன்கு மூடிப் பாதுகாக்கலாம். தகுந்த அளவில் பிளீச்சிங் பவுடரும் சேர்க்கலாம். (100 லிட்டர் நீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம்).

கழிவறைத் தொட்டி மற்றும் கிணறு அல்லது ஆழ்குழாய்க் கிணறு இவற்றிற்கிடையே சுமார் 50 அடி இடைவெளியாவது இருக்க வேண்டும்.

சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருப்பதற்கும், பருப்பு சரியாக வேகாததற்கும் நீரில் காரத்தன்மை (Alkalinity) அதிகமாக இருப்பதே காரணமாகும்.

நீரில் இரும்பு (Iron) உப்பு அதிகமாக இருந்தால், சேகரித்து வைத்த நீர் மஞ்சள் நிறமாக இருக்கும். மேலும், துணிமணிகளில் காவி அல்லது பழுப்பு நிறக் கறை ஏற்படும். இதனை நீக்க, எளிமையான வடிவமைப்புக் கொண்ட சுத்திகரிப்பு நீர்த் தொட்டிகளைப் பயன்படுத்தலாம்.

கிணற்று நீரில் இருக்கும் உப்புத் தன்மையை நீக்க துவர்ப்புச் சுவையுடைய தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையைப் பயன்படுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. துவர்ப்பும் உப்புச் சுவையும் இருக்கும்போது நீர் உப்புக் குறைந்ததாக உணரப்படலாம். ஆனால், நீரில் கரைந்துள்ள பொருள்களின் அளவில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

நன்றி: மாநில நீர் ஆதார மேலாண்மை முகமை
தமிழ்நாடு அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *