இணையதளம்
www.history.com/this-day-in-history
பிரபலங்களின் பிறப்பு, இறப்பு, முக்கிய தினங்கள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியன பற்றிய குறிப்புகள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. முன் தின, நாளைய தின செய்திகளை அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது. முக்கியமான வீடியோ காட்சிகள், முக்கியச் செய்திகளைப் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
மேலும், ஆன்லைன் விளையாட்டு வசதியும், ஆன்லைன் வணிக (Shopping) வசதியும் உள்ளது. மேலும் பல இணையதளங்களிலும் வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
அவற்றுள் சில: www.on-this-day.com/
www.historynet.com/today-in-history
www.440.com/twtd/today.html
குறும்படம்
பள்ளிக்கூடம் – ஆர்.பி. அருண்ராஜா, 9962914697
கிராமங்களில் வசிக்கும் பெண் குழந்தைகள் வீட்டிலும் பள்ளிகளிலும் எதிர்கொள்ளும் மன உளைச்சல்கள் – பிரச்சினைகள் எடுத்துக்காட்டப்பட்டு உள்ளன.
பெண் குழந்தைகளின் உடல்நிலை மாற்றத்தில் இயல்பாக நடைபெறுவது பூப்பெய்தல் என்னும் நிகழ்வு. இதனை நினைத்து இரு நிலைகளில் குழந்தைகள் பயப்படுகின்றனர். வீட்டிற்குத் தெரியப்படுத்தினால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமணம் செய்துவிடுவர்.
படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் வீட்டிற்குத் தெரியப்படுத்தாமல் சமாளித்து விடலாம். ஆனால், பள்ளிக்கு வந்தால் கழிப்பறை வசதியின்றி அவதிப்பட வேண்டுமே என்று புலம்பும் குழந்தைகள் இந்தப் போராட்டத்தை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை விளக்கி, பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பாடம் புகட்டியுள்ளது.
நூல்
நூல்: கலகக்காரர் பெரியார்
ஆசிரியர்: கவிஞர் இரா. ஜீவா
வெளியீடு: அஞ்சுகம் பதிப்பகம், 65, மேலப்பச்சேரி, திருப்பரங்குன்றம், மதுரை – 625 005.
செல்பேசி: 8608341428
பக்கங்கள்: 56 விலை: ரூ.40/-
தந்தை பெரியாரின் எண்ணங்களை – செயல்படுத்திய கருத்தோட்டங்களை, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் குட்டிக் குட்டிக் கவிதைகளாக கொடுத்துள்ள விதம் அருமை!
கண்கள் இருந்தும்/குருடனாக இருந்தவனுக்கு/உன் கைத்தடிதானே/வழித்தடம் காட்டியது என்ற வரிகளின் ஆழ்ந்த உண்மை, நீ மேடையேறிய போதெல்லாம்/ பாடை ஏறியது ஆரியம்/ என்ற வரிகளின் யதார்த்தம் படிப்போரைச் சிந்திக்க வைப்பன.
பெரியாரின் கொள்கைகள் – சீர்திருத்தக் கருத்துகள் – ஏற்பட்ட சமூக மாற்றங்கள், தமிழை – தமிழனைப் பண்படுத்திய விதம் போன்றனவற்றைக் கவிதை வடிவில், எளிய நடையில் – கவினுறப் படம் பிடித்துக் காட்டியிருப்பதே கலகக்காரர் பெரியார்.