கேள்வி : ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தபோது, தமிழன் உரிமை காக்க போராடி வென்றதுபோல்…. இன்று பார்ப்பனியத்துடன் போராடி வெல்லத் தயங்குவதேன்-?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : ஆங்கிலேயர்கள் நாணயமான எதிரிகள்; பார்ப்பனியம் வஞ்சம், சூது, வாது, அய்ந்தாம்படை ஆளுமை கொண்ட ஓர் அமைப்பு. ஆதலால், போராடி வெல்லுவது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அதேநேரத்தில் முடியாததும் அல்ல.
கேள்வி : மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு மிகக் கசப்பான எதிர்மறைக் கருத்துகளைத் துணிவாக எடுத்து வைக்கிறாரே?
– கே.குமரன், திருப்பூர்
பதில் : அவர் துணிச்சலைப் பாராட்ட வேண்டும் அவர் கருத்துகளில் மாறுபடுபவர்கள்கூட!
கேள்வி : இலங்கை மீது பொருளாதார தடை விதித்தால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்படுவார்களா?
– வெங்கட.இராசா, ம.பொடையூர்
பதில் : இப்போது என்ன ஈழத்தமிழர்கள் இன்பபுரியிலா வாழுகிறார்கள்? இப்படி ஒரு உலுத்துப்போன வாதத்தைத் தமிழ்நாட்டில் உலுத்துக் கொண்டுள்ள சில கட்சிகள் முன்வைத்து, மூக்கறுபடும் நிலைக்கு ஆளாகி வருவது பரிதாபத்திற்குரியது!
கேள்வி : சேது சமுத்திரத் திட்டத்தினால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என பிரபல சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆர்.கே. பச்சௌரி எச்சரித்துள்ளது பற்றி?
– எஸ்.கோவிந்தசாமி, ஆவூர்
பதில் : பார்ப்பன விஷம் விஷமம் இரண்டும் கலந்த ஒன்று. நீரி அமைப்பு இதனை மறுத்துத்தானே ஆறாம் வழித்தடத்தைத் தேர்வு செய்தது? இப்போது என்ன புதுக் கண்டுபிடிப்பு?
கேள்வி : மோடிக்குத் தரும் வாய்ப்பு பா.ஜ.க.வுக்குப் பலமா? பலவீனமா?
– ஆர்.வெங்கடேசன், நாகர்கோவில்
பதில் : மிகப்பெரிய பலம் வாய்ந்த பலவீனம்!
கேள்வி : தமிழக அரசின் தனி ஈழ பொது வாக்கெடுப்பு குறித்த தீர்மானத்தை மத்திய அரசு முன்னெடுக்குமா?
– வி.ராஜா, திருச்சி
பதில் : இப்போது மத்தியில் ஆளும் கட்சி _ எதிர்க்கட்சியாக உள்ள எவரும் இதை ஆதரிக்கவேமாட்டார்கள்! எனவே, புதிய துணிச்சல் உள்ள வெளியுறவுக் கொள்கையை மாற்றும் அரசு ஏதேனும் வந்தால் நடக்கக்கூடும்.
கேள்வி : விதி எண் 110இன் கீழ் முதல்வருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனி உரிமையை அவர் எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பதற்கு ஏதேனும் விதிகள் உள்ளனவா?
– ஜி.சுருதி, பெரியார் நகர்
பதில் : ஏதோ அவசரத்திற்கு என்று வந்த விதி இப்படி பாடாய்ப்படுகிறது; இப்போதே அதற்கு 108 தேவையான நிலைதான்! என்ன விநோதம் பாரு; எவ்வளவு ஜோக் பாரு!
கேள்வி : பச்சிளம் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குப் பலியாவதைத் தடுக்க வழியே இல்லையா-?
– பி.கிருபாசிறீ, எடையூர்
பதில் : சமூக வக்கிர மனோபாவம் உள்ளவரைக் கடுமையான சட்டங்கள்கூட தடுக்காது; துவக்க முதலே பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுப்பது; அவர்களை வெறும் பாலினக்கருவிகளாகப் (Sexual Objects) பார்க்கும் பார்வையை அகற்றும் வகையில், பாடத்திட்டங்கள் அறநெறி போதனை வகுப்புகள் தேவை!
கேள்வி : ஆத்மா நம்பிக்கையுள்ள தத்துவ ஞானிகள் எல்லாம் (நாத்திகம் பேசிய புத்தர், பெரியாரைத் தவிர) அற்ப ஆயுசில் மடிந்து உள்ளார்களே ஏன்?
– இல.சங்கத்தமிழன், செங்கை
பதில் : அந்த தர்க்கப்படி அவர்களின் ஆத்மா எங்கு அலைகிறது என்று கண்டுபிடிக்க வேண்டுமே! புத்தர் _ பெரியாருக்கு இந்த வீண்வேலையை எவருக்கும் வைக்கவில்லையே!
கேள்வி : வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகுமா? கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?
– எம்.ஜெயராமன், திருவாரூர்
பதில் : இப்போது எதுவும் சொல்ல இயலாது; ஜனநாயகம், மதச்சார் பின்மை, சமூகநீதி பாலியல் நீதி இவைகளைக் காப்பாற்றும் நிலையில் கம்யூனிஸ்ட்கள் கூட்டணி அமைத்தால் (கொள்கையடிப்படையில்) நல்லது; விரும்பத்தக்கது!