புத்தகத்தால் புத்தாக்கம் பெறுவோம் என்பதை முன்வைத்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவும் இணைந்து ஏப்ரல் 19 முதல் 27 வரை பெரியார் திடலில் சென்னைப் புத்தகச் சங்கமம் என்ற பெயரில் புத்தகக் கண்காட்சியைச் சிறப்புற நடத்தியுள்ளன.
ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தக தினம் கொண்டாடப்பட்ட வாரத்தில் கண்காட்சியை நடத்தியது இதற்கு மேலும் சிறப்பைத் தந்துள்ளது. 18.4.2013 அன்று தென்னிந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் நிக்கோலய் அ. லிஸ்தபதோவ் தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ரஷ்யத் தூதருக்குப் பயனாடை அணிவித்தும் இயக்கப் புத்தகங்களைக் கொடுத்தும் மரியாதை செய்துவிட்டு, தமது கருத்துகளைப் பதிவு செய்தார்.
பதிப்பாளர்கள், வாசிப்பாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்ட விழா முதல் நாளே களைகட்டியது.
67 அரங்குகளில் கணினி, அறிவியல், தமிழ் இலக்கியம், ஆன்மீகம், மருத்துவம், உளவியல், சினிமா, இசை என்று அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய நூல்கள் குவிந்து கிடந்தன. புத்தகக் காட்சியைப் பார்ப்பதற்கும் வாங்கிச் செல்வதற்கும் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
வாசிக்க வாங்க என்ற விழிப்புணர்வு நடைப்பயணத்தில் நடிகர் விவேக்
இதுவரை புத்தகம் எழுதுபவர், வெளியிடுபவருக்கே விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. புத்தகத்தின் மதிப்பினை உணர்ந்து ஆர்வத்துடன் சேகரித்துப் பாதுகாத்து வருபவர்களான நம்மாழ்வார் என்ற தாமஸ், காந்தி நூல் நிலையம் ராமலிங்கம், ஈஸ்வரி வாடகை நூலகம் _ என்.பழனி, ஞானாலயா _ கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் சாமி. மாணிக்கம் என அய்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு, புத்தகர் விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் விவேக் தொடங்கி வைத்த புத்தக வாசிப்பு குறித்த வாசிக்க வாங்க என்ற விழிப்புணர்வு நடைப்பயணம், தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்குப் பயிற்சி என பல நிகழ்ச்சிகள் அணிவகுத்தன. கருத்தரங்குகளில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல்.ராமச்சந்திரன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், சாத்தூர் லட்சுமணப் பெருமாள், ரவி அய்.பி.எஸ்., கவிஞர் ஈரோடு தமிழன்பன், பேராசிரியர் மா.நன்னன், ஸ்டாலின் குணசேகரன், ஜெகத் கஸ்பார், கவிஞர் வாலி, நக்கீரன் கோபால், கவிஞர் கலி.பூங்குன்றன், வெ. இறையன்பு அய்.ஏ.எஸ், வழக்குரைஞர் அருள்மொழி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மேனாள் அமைச்சர் வேங்கடபதி, கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் சு.அறிவுக்கரசு எனப் பலர் உரையாற்றினர்.
குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கத்தை -_ – ஆர்வத்தைத் தூண்டும் வகையில் போட்டிகளும், பயிற்சிகளும் நடத்தப்பட்டன. கதை, ஓவியம் (கோட்டுச் சித்திரம் வரைதல்), பேச்சு (பேச்சுத் திறன் வளர்த்தல்), சூழல் ஓவியம் ((Junk Art, சூழலியல்), கவிதை எழுதுதல், நடிப்புத் திறமையை வெளிப்படுத்துதல் ஆகியன குழந்தைகளின் தனித்திறமையை வெளிக்கொணரும் நோக்கில் நடத்தப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், மகிழ்ச்சி தரும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்திப் பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எமரால்ட் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.ஒளிவண்ணனும், சிக்ஸ்சென்ஸ் பதிப்பக உரிமையாளர் புகழேந்தியும் புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து இந்தப் புத்தகச் சங்கமத்தின் வெற்றிக்கு உதவியவர்கள். கோ.ஒளிவண்ணன் அவர்களிடம் புத்தகச் சங்கமத்தின் நோக்கம் குறித்துப் பேசினோம். சென்னைப் புத்தகச் சங்கமம் தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டோம்.
கோ.ஒளிவண்ணன்
“ஆசிரியர் அய்யா அவர்கள் மூன்று, நான்கு வருடங்களாக பல சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பயனுள்ள ஏதாவது செய்தாக வேண்டும் என்ன செய்யலாம் என்று அடிக்கடி கேட்டுக் கோடிட்டுக் காட்டியுள்ளார்கள். அவர்கள் பேசியதன் கரு என் மனதினுள் தோன்றி புத்தகச் சங்கமமாக உருவெடுத்தது. என் முயற்சியில் பெரிதும் உற்சாகப்படுத்தி ஊக்கம் கொடுத்த வீ.அன்புராஜ் அவர்களையும் நினைவுகூர்கிறேன்.
சென்னையில் நடத்துவது என்று முடிவு செய்தவுடன் நினைவுக்கு வந்த இடம் பெரியார் திடல்தான். அறிவுப் புரட்சிக்கு அடிகோலிய தந்தை பெரியார் வாழ்ந்த -_ வாழும் இடத்தில் தொடங்கினால் நன்றாக -_ பொருத்தமாக இருக்குமே என்று நினைத்தோம். தேவைக்கு அதிகமாகவே இடவசதியையும் கொண்டிருப்பதும் இடத்தைத் தேர்வு செய்யக் காரணமாக அமைந்தது என்றார்.
புத்தகச் சங்கமம் எனப் பெயரிடக் காரணம்?
முகநூல் (Face book) பகுதியில் தலைப்புகள் எழுதச் சொல்லிப் போட்டி வைத்தோம். நிறையத் தலைப்புகள் வந்து குவிந்தன. அதிலிருந்து பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம். தலைப்பினை எழுதி அனுப்பியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பெரியார் திடல் என்றதும் மூடநம்பிக்கையை ஒழிக்கும் பகுத்தறிவு தொடர்பான புத்தகங்கள்தான் இடம் பெற்றிருக்குமோ என்ற எண்ணத்தில் வந்த புத்தக ஆர்வலர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஆன்மீகம், குழந்தைகளுக்கான புத்தகங்கள், தத்துவம் என அனைத்துப் பிரிவினைச் சார்ந்த புத்தகங்களும் இடம் பெற்றுள்ளனவே என்று.
லவ்சன் சாம் துரைராஜ்
வெளியில் எங்கே சென்றாலும் சென்னைப் புத்தகச் சங்கமம் பற்றிய செய்தி மக்கள் மத்தியில் பேசப்படுவதைக் கேட்க முடிகிறது. அப்போது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
மக்களின் அறிவுத் தாகம்….. தேடல் பற்றி….?
தேடல் என்பது மனிதனின் குணாதிசயங்களுள் ஒன்று. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள அறிவுத் தாகம் _- அறிவுத் தேடல் அளவில் வேறுபடுமே தவிர தேடல் இல்லாத மனிதனே கிடையாது. புத்தகங்களை நிறையப் படிக்கும்போது நமது பார்க்கும் திறனே மாறுபடுகிறது. மக்கள் பற்று -_ மனித நேயம் வளர்ந்து விடுகிறது. அடுத்த தலைமுறையை உருவாக்கும் முயற்சியாகத்தான் நடைப்பயணம் மற்றும் இங்கு நடைபெற்ற குழந்தைகளுக்கான விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், ஓவியப் போட்டி போன்றன இடம் பெற்றன. நடைப்பயணத்தின்போது பதாகைகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு சென்ற குழந்தைகளுள் பாதிப் பேரின் மனதிலாவது அதில் இடம் பெற்ற வாசகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன். மேலும் இங்கு நடைபெற்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அனைத்துமே குழந்தைகளின் தனித்திறமையை _ -ஆளுமையை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சியே ஆகும்.
புத்தகப் பிரியர்கள் கொடுத்து வரும் பேராதரவு, தினமும் மாலை நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பாராட்டிச் செல்வோர், பதிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, இங்குள்ள தன்னார்வலர்கள் (volunteers) செயலாற்றும் விதம்….. என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தொலைக்காட்சி, இணையதள ஆதிக்கத்தால் வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளதா-?
அப்படி எல்லாம் சொல்ல முடியாது. இணையதளத்தின் மூலமாகவோ அய்.பேட் (i-pad) மூலமாகவோ வாசகர்கள் வாசித்துக் கொண்டு _- படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
பரபரப்பான உலகில் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்துதானே வருகிறது?
குழந்தைகளுடன் யமுனா ராணி
எந்த வழியில் படித்தால் என்ன? விஷயம் மக்களை -_ வாசகர்களைச் சென்றடைந்தால் போதுமே என்று உற்சாகமாகப் பேசினார்.
முதல் முறையாக புத்தக வங்கித் திட்டம் என்ற புதுமையை இந்தப் புத்தகச் சங்கமம் தொடங்கி வைத்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள பள்ளி நூலகங்களுக்குக் கொடுத்து அங்குள்ள மாணவர்கள் பயன்படும் வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தப்போவதாக அமைப்பாளர்கள் சொன்னார்கள்.
புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டுப் புத்தகங்களை அள்ளிச் சென்றவர்களுள் இருவரைச் சந்தித்தோம்.
சென்னைப் பல்கலைக்கழக, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர், அ.லவ்சன் சாம் துரைராஜ் நம்மிடம் பேசியபோது:
“பல துறைகள் சார்ந்த புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பல தலைப்புகளில் உள்ள புத்தகங்களைப் பார்வையிடும்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. புத்தகங்கள் வாங்க கடைக்குச் செல்லும்போது நாம் தேடிப்போகும் புத்தகம் கிடைக்குமா? அது தொடர்புடைய பிற புத்தகமாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கடை கடையாய் ஏறி, இறங்கும்போது அதிக நேரத்தை விரயம் பண்ண வேண்டியிருக்கும். இதுபோன்ற புத்தகச் சங்கமங்களில் பார்வையிடும்போது நம் எதிர்பார்ப்பு நிறைவேறி நேரம் மிச்சமாகி நம் தேடலும் பூர்த்தியடைகிறது.
இங்கு தரமான பதிப்பகங்கள் இடம் பெற்றுள்ளதால், தரமான புத்தகங்கள் நிறைய வாங்கியுள்ளேன். ஒரு அரங்கத்தினுள் நுழைந்தால் நேரம் போவதே தெரியவில்லை. அவ்வளவு புத்தகங்கள் உள்ளன. ஒரே நாளில் பார்வையிட்டுத் தேவைப்படும் புத்தகங்களைத் தேர்வு செய்வது என்பது முடியாத செயல்.
இன்னும் இரண்டு நாட்கள் வர நினைத்துள்ளேன். சும்மா வேடிக்கைப் பார்க்க வந்த என் நண்பர்கள்கூட பல புத்தகங்களை வாங்கி வந்துள்ளனர். மாலையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ரொம்ப பயனுள்ள பொழுதுபோக்காக இருக்கிறது என்று என் நண்பர்கள் சொன்னார்கள். நானும் இன்று அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்துச் செல்ல நினைத்துள்ளேன்.
பெரியார் திடலில் புத்தகச் சங்கமம் என்றதும், எங்கே குறிப்பிட்ட சில புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும் என நினைத்து வந்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி, இராமகிருஷ்ண மடம், அம்மன் அருள் பதிப்பகம், இஸ்லாமிக் ஃபவுண்டேசன், ……. போன்ற பதிப்பகங்கள் இடம் பெற்றிருந்தன. ஆன்மீகம், அரசியல், தத்துவம், உளவியல், …… என எந்தப் பிரிவில் அறிவுப் பசியோடு வந்திருந்தாலும் வருகை தந்த அனைவருக்கும் இனிய விருந்து படைத்து மனதிற்கு மகிழ்ச்சியூட்டி இருப்பதே இந்தப் புத்தகச் சங்கமம் என்றார்.
சித்தா ஆயூர்வேதா மருத்துவர் பி. யமுனா ராணி தனது குழந்தைகளை அழைத்து வந்திருந்தார். அவர் நம்மிடம், ஆவடியிலிருந்து வருகிறோம். சித்தா, ஆயூர்வேத மருத்துவராக உள்ளேன். பெரிய பையன் நவீன் ஆறாம் வகுப்பும், சிறியவன் ராகின் இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர். எனது மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்தரும் புத்தகங்கள் பல இருந்தன. அவற்றுள் எனக்குத் தேவைப்படும் புத்தகங்களை வாங்கியுள்ளேன். குழந்தைகளுக்கான புத்தகங்களும் நிறைய உள்ளன. குழந்தைகள் கேட்ட புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளேன். குழந்தைகளுக்கான புத்தகங்கள் மலிவு விலையில் கிடைத்ததால் நிறைய வாங்கிக் கொடுத்துள்ளேன். சிறுவயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க இந்தப் புத்தகச் சங்கமம் வழி வகுத்துள்ளது, என்றார்
சிறுவன் நவீனிடம் பேசியபோது, நிறைய புத்தகங்கள் இருந்தன. ஜாலியாப் பார்த்தோம். நாங்கள் கேட்ட புத்தகங்களை அம்மா வாங்கிக் கொடுத்துள்ளார்கள்.
இலவசப் புத்தகங்கள் கிடைத்ததில் மிகவும் சந்தோஷமாக உள்ளது. கோடை விடுமுறை என்பதால் புத்தகங்களைப் படிக்க நிறைய நேரம் உள்ளது. எல்லாப் புத்தகங்களையும் படித்து விடுவேன் என்றார்.
வழக்கமாக ஜனவரியில்தான் சென்னையில் புத்தகக் காட்சி நடக்கும். இந்த முறை கோடைக்காலத்தில் பள்ளி விடுமுறையை யொட்டி இன்னொரு சிறப்பான புத்தகக் காட்சியை பெரியார் திடல் உருவாக்கிவிட்டது.
இனி ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்தைப் புத்தகப் பிரியர்கள் பலர் எதிர்பார்ப்போடு தெரிவித்தனர். புதுமை அகம் பூக்க எத்தனைப் புத்தகக் காட்சிகள் வந்தாலும் நல்லதுதானே!