பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளுக்கு . . .

மே 01-15

நம் நாட்டின் கலாச்சாரத்தைச் சீர்கேடாக நினைக்கும் சிலர் தாங்கள் யாருக்கும், எதற்கும் அடங்கமறுக்கிறோம் என்ற உறுதி மொழியை ஏற்று அதன்படி பெண்ணியவாதிகளாக ஆகிறார்கள்.

நல்ல விசயம் ஆணுக்கு இணையாக நாங்களும் வாழ்வோம் என்ற போக்கை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அறிவான செயல்தான். அதற்காக முற்றிலும் ஆண்களைப் புறக்கணித்து புறம் தள்ளிவிட்டு தான்தோன்றித்தனமாகப் பேசுவது, நடப்பது எந்த வகையில் நியாயம்..?

 

ஒரு பெண்ணுக்கு வேண்டிய அனைத்தும் அவளால் செய்து கொள்ள முடியும். அதே மாதிரி ஆண்களுக்கு வேண்டிய அனைத்தும் அவர்களால் செய்து கொள்ளமுடியும். அப்படி இருக்க. ஏன் இரு (ஆண்,பெண்) இனத்தையும் இணைத்து திருமணம் நடத்திக் கொள்கிறார்கள்?அங்கே என்ன முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது?

பெண்ணியவாதியாக இருப்பவர்..காதல் வயப்படாமல் இருக்கிறார்களா..? அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்களா..? இல்லை உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா..? எதுவோ….. என்ன காரணமோ அவர்களை மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டுக் காண்பிக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு கவிதாயினி பெண்., ஆண்கள் மட்டும் இரு பெண்களோடு வாழ்கிறார்கள். நாம் ஏன் அப்படிச் செய்யக்கூடாது என்று இரு ஆண்களை மணக்காமல் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தார். நாளடைவில் சக்களத்தி சண்டைபோல் சக்களத்தன் சண்டை வந்து மூவரும் பிரிந்துவிட்டனர். ஏன் இந்த அவசர முடிவு.

அதேமாதிரி ஒரு பெண் போராளி தான் காதலித்த நபருக்காக மாசமாக இருந்து பின் கருக்கலைப்பு நடத்தி, இன்னொரு ஆணுடன் தொடர்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு என்னதான் வேண்டும். பெண்ணியம் என்பது இதைத்தான் கற்றுக் கொடுத்ததா..?

அதற்காக ஆண் வர்க்கத்திற்கு ஆதரவாக நினைக்க வேண்டாம். ஒழுக்கம் என்பது இருபேருக்கும் உரித்தானதுதான். ஆண்களைத் தண்டிக்கிறோம், அல்லது பழி வாங்குகிறோம் என்ற பெயரில் பெண்கள் தங்களை இழிவுபடுத்திக்கொள்ள வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

பெண்ணியவாதியாக கடைசி வரை இருந்து காலம் சாதித்தவர்கள் எத்தனை பேர் வெற்றியாளராக வலம் வருகிறார்கள். கூறுங்கள். ஆண்களின் ஆணாதிக்கத்தை எதிர்க்க வேண்டும். நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது மட்டுமே (ஒருசிலரைத் தவிர) மற்றவர்களுக்கு லட்சியமாகத் தெரியவில்லை.

அதிலும் சில பெண்ணியவாதிகள் பல பேரோடு தொடர்புப்படுத்தி, தங்களது அந்தரங்கப் படங்களை வெளிப்படுத்தி, தங்களது நட்புக்களுடன் அசிங்கப்படுத்தி (ஆதாரங்களுடன்) பேசப்படுகிறார்கள். தேவையா இந்த அநாகரிகமான செயல்பாடுகள். ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆணுக்கும் தனிமனித ஒழுக்கம் தேவை. அது இல்லாவிட்டால், நம் நாட்டின் பல பேர் பல பேரோடு கூடிவாழ்வதன் மூலம் பிற்கால சந்ததியினருக்கு உதாரண சீர்கேட்டாளர்களாகத்தான் ஆக்கப்படுவோம்.

தனிமனித சுதந்திரம் வேறு, தனி மனித ஒழுக்கம் வேறு, தனி மனித பண்பாடு வேறு. இதைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல், படுபாதகமாகப் பயன்படுத்தாமல் இருக்கும்வரை எல்லாப் பெண்களும் பெண்ணியவாதிகள்தான். அடக்குமுறைக்கு அடங்காமல் தானும் அடுத்தவர்களை அடக்காமல் வாழ்தல் ஒரு பெண்ணுக்கான அழகு.

பெண்ணாதிக்க வழிக்கு பெண்களைத் தூண்டுவதே ஆண்கள்தான். அந்தப்போக்கை ஆண்கள் மாற்றிக்கொண்டால் பெண்கள் தங்களின் யாருக்கும் செவி சாய்க்காத முடிவை மாற்றிக்கொள்வர்.

ஆதிக்கம் என்ற வார்த்தையே ஒருவரை அடக்குதல். அவர் மீது ஆதிக்கம் செலுத்துதல் என்றே பொருள்படும் என்பது பொதுவான கருத்து. ஒருவர் மீது ஆதிக்கம் செய்யும் போக்கைக் கைவிட்டு, நல்ல நடவடிக்கையின் மூலம் பிறரது அன்பையும், சுய சிந்தனை மூலம் நல் எண்ணங்களையும், சுய ஒழுக்கத்தின் மூலம் நற் பேரையும் எடுக்க ஒவ்வொரு ஆண் ஆதிக்கவாதியும் பெண்ணாதிக்கவாதியும் எடுக்க வேண்டியது முக்கியமான பணியாகும்.

சொல்லும் பொருளைப் புரிந்து கொள்ளுதல்.., எடுத்துக்கொள்ளுதல்.., நடத்திக்கொடுத்தல் – இதுதான் பொருள்படப் புரிதல்.. இதை எல்லாம் தங்களைப் பெண்ணியவாதிகளாக வெளிக்காட்டிக் கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்……. நாளைய எதிர்காலம்…. நோக்கி.

– பிரதிபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *