உலகம் போற்றிய புரட்சித் தலைவன், ரஷ்ய மக்களின் மனம் கவர்ந்த லெனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இது. அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த லெனின் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார்.
தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க சிறப்பு தினம் வைத்திருந்தார் லெனின்.
குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்துவிட்டு பதற்றத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, லெனினைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.
சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவி விட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார். தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!
ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் லெனின் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.
லெனின் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்தும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும்கூட லெனின் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.