ஈரோட்டுச் சூரியன் – 12

ஏப்ரல் 16-30

மணமானவள் என சமுதாயம் இனங் காணவே
பெண்ணவள் கழுத்தில் கட்டப்படுகிறது தாலி;

பெண்ணவளின் சுதந்திரத்தையும்
ஆசைகளையும் சிறைப்பிடித்து
ஆணுக்குப் பெண் அடிமையென
மார்தட்டிக் கொண்டேயிருக்கும்
அத் தாலி,
மர்ம முடிச்சிட்ட மஞ்சள் நிற வேலி;

தாலிதான் கணவனின் உயிரைத் தாங்கிப் பிடிக்கும் ஆயுதம்; அதுவே
கணவனை வாழவைக்கும் ஆண்டுகள் ஆயிரம்;

இப்படியான
முதுகெலும்பில்லாத மூடநம்பிக்கைகள்
முக்கியத்துவம் பெற்றிருந்தன;
மங்கையர் மனங்களும்
அவற்றைக் கற்றிருந்தன;

கணவனைக் காட்டிலும்
தாலியின் மீது
பெண்டிர்  வைத்திருந்த
மரியாதையும் பக்தியும்
இராமசாமிக்கு ஆச்சர்யத்தை அளித்தது;
தாலி வெறும் அடிமைக் கயிறு என இவர் சொல்லும்
வார்த்தைகள்
கேட்பவர்களுக்குப் புளித்தது;

சமுதாயத்தில்
சம்மணம் போட்டிருந்த சம்பிரதாயத்தை
அம்மணமாக்க முனைந்தார்
இராமசாமி…

சாதாரணப் பெண்டிரே
தாலியைத் தெய்வமாகக் காணும்போது
அந்த இராம சுவாமியாகவே
இராமசாமியைக் காணும் நாகம்மை,
கணவனின் உயிரே
அவரிட்ட மூன்று முடிச்சின்
இறுக்கத்தில்தான் இருக்கிறது;
முடிச்சவிழ்ந்தால்
கணவனின் மூச்சவிழும் எனத்
தாலியைப் பூசித்தார்;
கணவனைக் காட்டிலும்
அதனை நேசித்தார்;

தாலியே  கணவனின்
உயிரைக் காக்கும் கருவி என்ற
உலகத்தரம் வாய்ந்த
மூடநம்பிக்கையின்
மூச்சை நிறுத்த வேண்டும்
நாகம்மைக்கு முதலில் அதை
உணர்த்த வேண்டும்…
இராமசாமி யோசித்தார்;

அந்நாள் இரவில்
தாலியைக் கழற்று பார்க்கலாம் என்று நாகம்மையிடம் இராமசாமி கேட்க,
நாகம்மை பயந்து போனார்;
அவரின் பயம் கண்டு
இராமசாமி வியந்து போனார்;

தாலியைக் கழற்றினால் உங்கள் உயிருக்கு ஆபத்து நான் மாட்டேன் என்ற
நாகம்மையின் பதிலை
அவர் கொண்ட பயம் சொன்னது;
உதடுகள் அசையாமல் நின்றது;

கட்டினவன்
கட்டிலில் இருக்கும்போது
கட்டினது தேவையில்லை
கண் காணாமல் இருக்கும்போதே
கட்டினது தேவை;

இராமசாமியின் விளக்கம்
கேட்டுக் குழம்பினாள்
அந்தப் பாவை;

தாலி சம்பிரதாயம் பற்றி அம்மா சொல்லவில்லையா?
அதுதானே தாலியின் சிறப்பே
என்ற இராமசாமியின் சிரிப்பே
நாகம்மையைத் தாலியைக்
கழற்றி வைக்க வைத்தது..

அடுத்த காலை..
தாலியணிய மறந்த நாகம்மையைக்
கண்ட தாயம்மை கோபத்தைக் கொண்டு விளாசினார்;
நாகம்மையோ நடந்ததைக் கொஞ்சம் அலசினார்;

தாலி அணியாமல்
ஒரு கணம் இருந்தாலும்
கணவனின் உயிருக்கு ஆபத்து
என்பது எவ்வளவு ஆழமான
முட்டாள்தனமான உண்மை
என்பதை உணர்ந்தார்:

தாலியின் மீது வைத்திருந்த
மொத்த மரியாதையையும்
பய பக்தியையும்
கணவன் மீது செலுத்தி
அவரின் மனதோடு புணர்ந்தார்.

சூரியன் உதிக்கும்…

– மதுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *