அய்யாவின் அடிச்சுவட்டில் – (92) – கி.வீரமணி

ஏப்ரல் 16-30

இந்த ஆண்டு (1974) செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்கள் இல்லாத செப்டம்பர் 17 (1974). கடந்த ஆண்டு இதே தேதியில் இதே சென்னை மாநகரத்தில் தந்தை பெரியார் அவர்கள் தனது பிறந்த நாளில் அளவளாவிக் களித்த காட்சிகள் எல்லாம் நம் மனத்திரையில் காட்சி அணிவகுப்புகள் நடத்துகின்றன.

கவியரங்கம் என்ன? _ பட்டிமன்றம் என்ன? _ நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் நாதசுர இசை மழை என்ன _ தந்தையின் கரத்தாலே அவருக்கு நாதசுர இசைச் சக்கரவர்த்தி எனும் கேடயம் என்ன _ பொன்னாடை போர்த்தல் என்ன _ எல்லாவற்றிற்கும் மேலாக தானைத் தலைவர் நமது அய்யா அவர்கள் முழக்கிய இன முரசம் என்ன _ இவை எல்லாம் இவ்வாண்டு இந்த நாளில் பழங்கனவாய் போயினவே!

என்றாலும், அய்யா மறைந்தாலும் அவர் ஏற்றிவைத்த அறிவுச்சுடர் அணையாது _அவர் துவக்கிவைத்த இன முழக்கம் ஓயாது ஓயாது என்பதற்கிணங்க, அய்யாவின் ஆணைப்படி கட்டாயம் பணி முடிப்போம் என்ற இலட்சிய வெறியோடு இவ்வாண்டு பிறந்தநாள் விழா செப்டம்பர் 17 அன்று தலைநகராம் சென்னையிலே பெரியார் திடலிலே சிறப்புடன் தொடங்கி நடைபெற்றது.

சினிமா உலகப் புகழ் இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா அவர்களது குழுவினரால் பெரியார் பெருந்தொண்டு இசை அரங்கத்தோடு காலை 9.30 மணிக்குத் துவங்கியது. அய்யாவின் அருந்தொண்டு இசைவானின் இன்பப் பரிசாக பெருக்கெடுத்தது. இசை உலகப் புகழ் மேவும் சீர்காழி கோவிந்தராசன் போன்றோரெல்லாம் இசைப்பாடல் முழக்கி இனத்தலைவருக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முயன்றனர்.

இசை _ அதுவும் கொள்கையோடு கூடிய இசையாலே இதயத் தாழ்வாரத்தைத் தொட்டுத் துழாவி நெஞ்சுருக்கச் செய்துவிட்டனர் இசைக் கலைஞர்கள்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், அமைச்சர் பெருமக்கள் டாக்டர் நாவலர், என்.வி.நடராசன், அன்பில் தர்மலிங்கம், க.இராசாராம் ஆகியோர் புடைசூழ முற்பகல் 11 மணி அளவில் தந்தையின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எழுச்சித்தூணின் பீடத்திலே, இதயப் பீடத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பிய உணர்ச்சிப் புயல்களை அடக்க முடியாத நிலையில் மலர் வளையம் வைத்து வீர மரியாதை செலுத்தினர். நன்றி உணர்வுமிக்க தமிழின மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து அய்யா நினைவிடத்தில் மலர் மாலைகள் குவித்த வண்ணமாகவே இருந்தனர். எழுச்சித் தூணைப் பார்த்து, அய்யா நீங்கள் ஏற்றிவைத்த எழுச்சிச் சுடரை அணைக்க விடமாட்டோம் என்று சூளுரைத்து நின்றனர்.

அமைச்சர் பெருமக்கள் அய்யா அவர்கள் வழக்கமாகத் தங்கும் இல்லத்திற்கு வந்து அய்யா அவர்களது இருக்கை _ படுக்கைகளைக் கண்டு கண்ணீர் உகுத்தவர்களாய், கழகத் தலைவர் அன்னையார் அவர்களிடம் சிறிது நேரம் உரையாடி, விடுதலை பணிமனைக்குள் நுழைந்தனர்.

அய்யா அவர்கள் இருக்கும்போதே அவர்களது ஆலோசனையின் பேரில் வாங்குவதற்கு ஏற்பாடாகி இருந்து ஜெர்மனியிலிருந்து அண்மையில் வந்து சேர்ந்த விக்டோரியா 1040 (க்ஷிவீநீஷீக்ஷீஹ்ணீ) என்ற புதிய அச்சு இயந்திரத்தை மாண்புமிகு அமைச்சர் என்.வி.நடராசன் அவர்கள் இயக்கி வைக்க, முதன்முதலாக தந்தை பெரியார் வாழ்க என்று அச்சாகி காகிதம் வெளிவந்தது! ஒரே கைதட்டு _ ஆரவாரம் அங்கே! (அதற்கு முன் 840 என்ற இயந்திரம் _ அய்யா இருந்தபோது)

அடுத்து, பெரியார் திடலிலே பெரியார் பகுத்தறிவு நூலகம் _ ஆய்வகம் திறப்பு விழா நிகழ்ச்சி _ கடந்த ஆண்டு அய்யா பிறந்த நாளிலே -_ சென்னையில் நடைபெற்ற பிறந்த நாள் பெருவிழாவிலே நான் அய்யா அவர்களது அனுமதியோடு அறிவித்த பெரியார் பகுத்தறிவு நூலகம் _ ஆய்வகம் திறப்பு விழா சிறப்புடன் நடைபெற்றது.

அய்யா அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் காலத்தில் திட்டமிடப்பட்ட ஒவ்வொன்றும் தசைப் பிறழாமல் தீவிரமாக நடைபெறுகிறது என்பதற்கும், அய்யா அவர்கள் விரும்பிய இலட்சியபுரியை அடைவதற்குத் திட்டமிட்ட செயல்பாடுகள் சீருடன் உருவாகின்றன என்பதற்கும் இந்தக் காரியங்கள் எல்லாம் கட்டியம் கூறுகின்றன அல்லவா?

கழகப் பொதுச்செயலாளராகிய நான் வரவேற்புரை ஆற்ற, கழகத் தலைவர் அன்னையார் முன்னிலையில், மாண்புமிகு அமைச்சர் டாக்டர் நாவலர் தலைமையில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெரியார் பகுத்தறிவு நூலகம் _ ஆய்வகத்தைத் திறந்து வைத்து தன் நெஞ்சமஞ்சத்தில் ஊஞ்சலிட்ட உணர்ச்சி வெள்ளப் பெருக்கைத் திறந்துவிட்டார்.

நூலகத்தில் மாண்புமிகு அன்பில் தர்மலிங்கம் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் படத்தையும், அமைச்சர் க.இராசாராம் அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது படத்தையும், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு.நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தந்தை பெரியார் அவர்களது உருவப் படத்தையும் திறந்து வைத்து தீவிரக் கொள்கை முழக்கம் செய்தனர்.

திரு.செழியன் எம்.பி. அவர்களும், திரு.மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சி) அவர்களும் அய்யாவின் அருந்தொண்டின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தனர்.

அன்று இரவு 7 மணிக்கெல்லாம் அண்ணா சாலையில், அண்ணா சிலை அருகில் சிம்சன் எதிர்ப்புறம் தமிழரினம் அடர்ந்து படர்ந்து கிடந்ததே அது எதற்காக? அப்பப்பா! எவ்வளவு கட்டுக்கடங்கா உணர்ச்சிப் பிரவாகம்! தானைத் தலைவர் தந்தை பெரியார் அவர்கட்கு தலைமை திராவிட முன்னேற்றக் கழகம் அங்கு எடுத்திருந்த சிலை திறப்பு விழாவைத் திருவிழாவாய்க் காணுவதைத் தவிர, தமிழினத்திற்கு வேறு விழாதான் ஏது? உற்சாக விருந்துதான் ஏது?

மாநகரத்தின் இதய பீடத்திலே ஆசானாய் அமர்ந்து அறிவுரை வழங்குகின்றாரே அய்யா அங்கே! அதற்குச் சற்றுத் தூரத்திலே அடக்கமாக நின்று ஆணையிடும் அய்யாவின் கட்டளையை நிறைவேற்றுவோம் வாரீர்! என்று மக்களை அழைக்கிறாரே மாமேதை அண்ணா! அப்பப்பா _ எவ்வளவு பெரிய அருமையான சகாப்தத்திலே _ வசந்தத்திலே வாழ்ந்துவிட்டோம் நாம்!

தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் டாக்டர் நாவலர் தலைமையில் தி-.மு.க. தலைவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், அய்யா அவர்களின் உருவச் சிலையைத் திறந்துவைத்து, வளைந்திருக்கும் அய்யாவின் கால் பெருவிரல் நான் என்று பெருமைப்பட்டு பீடுற உரைத்தாரே அந்த நன்றிச் சங்கநாதம் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

விழாவில் கழகத் தலைவர் அன்னையார், நான், அமைச்சர்கள் திரு. க. அன்பழகன், திரு.என்.வி.நடராசன், மேலவைத் தலைவர் திரு.சி.பி.சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டோம்.

நூலகம் பற்றி அப்போது வெளியிட்ட குறிப்பு

தந்தை பெரியார் அவர்கள் பெயரால் பெரியார் பகுத்தறிவு நூலகம் _ ஆய்வகம் சென்னை (வேப்பேரி _ 2, ரண்டால்ஸ் சாலை) பெரியார் திடலில் மூன்று மாடிகள் கொண்ட கட்டிடத்தில் தந்தை பெரியார் நினைவிடம் அருகில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இங்கு சுமார் ஆயிரம் நூல்கள் _ வால்யூம்கள் உள்ளன. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், முதல்வர் கலைஞர் போன்ற திராவிட இயக்க சிந்தனையாளர்கள் பலருடைய அரிய நூல்கள் உள்ளன.

தந்தை பெரியார் அவர்களது பகுத்தறிவு இயக்கமான திராவிட இயக்கத்தைப் பற்றியும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்களைப் பற்றியும் பி.எச்.டி. போன்ற பட்டங்களுக்காக அறிஞர்கள் பலர் ஆராய்ச்சி செய்கின்றனர்.

அவ்வாராய்ச்சியாளர்களுக்குத் தேவையான அடிப்படை ஆதாரங்களைத் தரும் வகையிலும் (Source Materials) இயக்க வரலாற்றைப் பற்றி வெளிநாட்டவர் புரிந்துகொள்ளும் வகையிலும் _ ஆரம்ப கால இயக்க ஏடுகளான திராவிடன், குடிஅரசு, பகுத்தறிவு, விடுதலை, திராவிட நாடு போன்ற பல ஏடுகளின் தொகுப்புகளும் இந்த நூலகம் _ஆய்வகத்தில் இடம்பெற்று உள்ளன.

சுமார் ஒன்றரை லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலகத்தில், ஒரு நூலகர் இருப்பார். நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்நூலகம் இயங்கும்.

தந்தை பெரியார் அவர்களின் கையெழுத்துப் பிரதிகள் (Manuscripts), அவர்களுடைய பல்வேறு பேச்சுகள் பதிவு செய்யப்பட்ட டேப் ரிக்கார்டுகள் முதலியவையும் இந்த நூலகத்தில் இடம் பெற்று உள்ளன.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் எல்லாப் பகுதிகளையும் பற்றிய ஆராய்ச்சிக்கான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட முக்கிய சான்றுகளாக இந்நூலகம் அமையும் என்பது முற்றிலும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் பெயரால் அமைந்துள்ள இந்நூலகம் _ ஆய்வகம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற தந்தை பெரியார் டிரஸ்டினால் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. 1973ஆம் ஆண்டு, தன் சென்ற பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் கலந்துகொண்டு அறிவுரையாற்றியபோது, மிகவும் மகிழ்ச்சியுடன் இம்மாதிரிப் பணிகள் செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய வண்ணமே இந்நூலகம் உருப்பெற்றது. இன்று 38 ஆண்டுகளைக் கடந்து, பல்லாயிரம் நூல்களுடன் முற்றும் குளிரூட்டப்பட்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய நூலகமான திகழ்கிறது.

– நினைவுகள் நீளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *