Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து நல்லசிவத்தின் இதயத்துடிப்பு வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. சில நேரங்களில் நெஞ்சை இடது கையால் பிடித்துக் கொண்டார்.

பரம்பரையா வாழ்ந்த இடம்… மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் போடப்போற ரயில்வே பாதை குறுக்கே வர்றதால அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை இடிக்கப் போறாங்களே… அது நடந்தா நான் செத்துடுவேன் கருப்பையா.

வேலைக்காரன் கருப்பையனிடம் தன் மன பாரத்தை இறக்கி வைத்தார் நல்லசிவம்.

அய்யா மனசத் தளர விடாதீங்க. எல்லாத்தயும் அந்த வீதியோர அய்யனார் பாத்துக்குவார்.

கருப்பையனின் பேச்சு நல்லசிவத்தின் மன உளைச்சலுக்கு மருந்து போட்டது போல் இருந்தது.

கருப்பையா நாளைக்கு எந்த வேலை எப்படியிருந்தாலும் பரவாயில்லை.  எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு அந்த அய்யனார் காதில போட்டு வச்சிட்டு வரணும்.

பூஜை சாமான்களுடன் வீதியோர அய்யனாரைத் தரிசிக்க வந்த நல்லசிவம் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். அய்யனார் கோவில் தரைமட்டமாகிக் கொண்டிருந்தது.

அய்யனார்க்கே இந்த நிலைமையா?

இந்தக் கோவில் போக்குவரத்துக்கு இடையூறா இருக்குன்னு இடிக்கிறதுக்கு கலெக்டரிடமிருந்து உத்தரவு வந்துருக்கு.

அய்யனாரே என் குறையை உன்கிட்ட சொல்ல வந்தேன். ஆனா, உன் குறையைப் புரிஞ்சிக்கிட்டேன். அதிகாரம் ஆண்டவன் கையில இல்ல. ஆள்றவன் கையில.

பக்தியோடு வந்த நல்லசிவம் நல்ல புத்தியோடு திரும்பிக் கொண்டிருந்தார்.
_ வீரன்வயல் வீ.உதயக்குமாரன்