கேள்வி : கச்சத் தீவை மீட்க சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது நடைமுறையில் சாத்தியமாகுமா?
_ எஸ்.கோவிந்தசாமி, பெரம்பலூர்
ஆசிரியர் பதில் : கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் போட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. முதல் அமைச்சர் அவர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு அதுவும் கிடப்பில் உள்ளது! வழக்குகள் சட்டப்படி வெற்றி பெற்றால் நிச்சயம் சாத்தியமாகும்!
கேள்வி : முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்றக் கூட்டுக்குழுமுன் தன் பக்க நியாயங்களை எடுத்துரைக்க தன்னை அழைக்கும்படி வற்புறுத்தியும், அக்குழுத்தலைவர் திரு.பி.சி.சாக்கோ தொடர்ந்து மறுத்து வருவதன் பின்னணி என்ன? _ ஜி.சரசுவதி, ஜீயபுரம்
ஆசிரியர் பதில் : ஜே.பி.சி. என்ற அந்தக் கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையில் ஒருமித்த கருத்து ஏற்படாதிருக்கும் நிலையே ஆ.ராசாவுக்கு அனுமதி மறுப்பு.
பிரதமர், நிதியமைச்சர் முதலியவர்கள் அங்கு ஆஜராகி விளக்கம் சொன்னால் என்ன மதிப்புக் குறைவு ஏற்படும் என்பதை, தயங்கும் அவர்களும், தாங்கும் அக்குழுவின் தலைவர் சாக்கோவும்தான் நாட்டுக்கு விளக்க வேண்டும்?
கேள்வி : இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தோடு கூடிய மாணவர் போராட்டக் கருத்துகளையும் ஏற்காத மத்திய அரசை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் என்ன மாதிரி பாடம் கற்பிக்க வேண்டும் என்பது பற்றி…? _ பெ.கூத்தன், சிங்கிபுரம்
ஆசிரியர் பதில் : காங்கிரஸ் _ காங்கிரசோடு இணைந்து கூட்டு சேரும் அனைத்துக் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் படுதோல்வி அடையச் செய்ய முன்வர வேண்டும்!
கேள்வி : இத்தாலியர்களால் இரு மீனவர்கள் சுடப்பட்ட வழக்கில் இரு மீனவர்களும் தமிழர்களாக இருந்திருந்தால், இப்படி இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்குமா? பொறுமையாக இருந்திருக்குமா?
_ இ.கிருபாகரன், சோளிங்கர்
ஆசிரியர் பதில் : இராமேசுவரம், நாகை மற்றும் பல மீன்பிடி ஊர்களின் மீனவர்கள் மீது அன்றாடம் நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களே, தங்கள் கேள்விக்குப் பதிலாக அமையுமே!
கேள்வி : தமிழர்களுக்கு எதிராக இலங்கை செய்யும் தீங்குகளுக்கு அய்.நா.வில் புகார் எழுப்ப வேண்டிய இந்தியா, அமெரிக்காவின் புகாரை ஆதரிக்கவே பின்வாங்கியது எந்த வகை நியாயமோ? – ந.அருட்கோ, ஆற்காடு
ஆசிரியர் பதில் : இந்திய அரசின் இலங்கைப் பாசம் பொதுமக்களுக்குப் புரியவே இல்லை!
கேள்வி : ஈழத் தமிழர் அமைப்புகள் தமிழக அரசியல் கட்சியினரிடையே பிரிவுகளை உருவாக்குவதுபோல் செயல்படுவது சரியா? _ மா.இளங்கோ, பட்டுக்கோட்டை
ஆசிரியர் பதில் : அவர்கள் அப்படிச் செய்வது, தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதாகும்!
கேள்வி : அய்.நா.சபையில் கொடுக்கப்படும் புகார்களை ஆய்ந்து நடவடிக்கை எடுக்கத் தயங்கினால் அதன் அதிகாரம், வேலைதான் என்ன?
_ ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி
ஆசிரியர் பதில் : சட்டப்படி அடுத்த நடவடிக்கைதான். அதற்குப் பெரும் போலீஸ் பொறுப்பு எதுவும் இல்லையே! கடுமையாக நடந்துகொள்ள பல நாடுகளின் ஆதரவு தேவை!
கேள்வி : மற்ற மாநிலத்து காங்கிரசுக்காரரெல்லாம் மாநில உரிமையை முன்னிறுத்தி, தேசியத்தை அடிபணிய வைத்து காரியம் சாதிக்கும்போது, தமிழ்நாட்டுக் காங்கிரசார் மட்டும் இனத்தைக் காட்டிக் கொடுத்து, தேசியத்தின் பெயரால் வயிறு வளர்ப்பது ஏன்? _ சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ஆசிரியர் பதில் : இக்கேள்வியை காங்கிரஸ் நண்பர்களுக்கே அர்ப்பணிக்கிறோம்.
கேள்வி : தமிழகத்தின் முதல்வர் வண்டலூர் பூங்காவில் 7 புலிக்குட்டிகளுக்குப் பெயர் வைத்துள்ளது பற்றி? _ க.அரிமாவேந்தன், திருச்சி
ஆசிரியர் பதில் : அவரது உரிமை. அதுபற்றி நாம் ஏன் கருத்துச் சொல்ல வேண்டும்?
கேள்வி : தமிழகத்தை ஆளும் தமிழக அரசு, தமிழர்களின் ஒட்டுமொத்த நலன்களிலும், பிரச்சினைகளிலும், உரிமை மீட்பிலும் மெத்தனம் காட்டுவதேன்?
-_ வெங்கட.இராசா, ம.பொடையூர்
ஆசிரியர் பதில் : ஆட்சி -_ அண்ணா பெயர் கொண்ட ஆட்சியே தவிர, அண்ணா கொள்கை கொண்ட ஆட்சி அல்லவே!