சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஏப்ரல் 16-30

பூசை : ஆகம ஆதாரங்கள் இல்லை

நூல்: கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்

ஆசிரியர்:    நீதியரசர் ஏ.கே. ராஜன்

வெளியீடு: சேது பப்ளிஷர்ஸ்,

ஷி – 79, அண்ணாநகர், சென்னை – 600 040.

தொலைப்பேசி: 044 – 2626 7992

பக்கங்கள்: 88    விலை: ரூ.40/-

ஆகம முறைகளும் வைதீக முறைகளும்:

தெய்வங்களுக்கு உணவு படைக்கும்போது, உணவு வகைகளை நேரே தெய்வத்திற்குக் காட்டுவதால் (படைப்பதால்), அத்தெய்வங்கள் அவற்றை உண்டுவிடுவதாகக் கருதப்படுவது, செய்முறை வழக்கமாகும்.  அவை நிவேதனம், நைவேத்யம் அல்லது நெய்வேத்யம் எனப்படும். இவையே ஆகம பூசைகளாகும்.

அவ்வாறு உணவை அப்படியே கடவுளுக்குப் படைக்காமல் அதை ஹோம குண்டங்களில், எரியும் நெருப்பில் இட்டு, அக்கினி பகவான் அவற்றை அந்தத் தெய்வங்களுக்குக் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் செய்யப்படுவது வைதீக முறை பூசை ஆகும். அர்ப்பணிப்பவை அனைத்தையும் அக்கினி மூலம் செய்வது வைதீக முறை பூசை ஆகும்.

கருவறை, அர்த்த மண்டபம் முதலானவை:

ஆகம முறைப்படி கோயில்கள் எவ்வாறு, எங்கே கட்டப்பட வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டின் தலைசிறந்த ஸ்தபதியும், சிற்பியும், கோயில் கலைஞருமான திரு. கணபதி ஸ்தபதி அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
ஒவ்வொரு கோயிலிலும் கருவறை (கர்ப்பக்கிரஹம்) இருக்க வேண்டும். கருவறையின் முதற்பாதி அர்ச்சனா மண்டபம்; இரண்டாம் பாதி அர்த்த மண்டபம்; அர்த்தம் என்றால் பாதி என்பது பொருள்; அர்த்த மண்டபம் என்பது கருவறையின் ஒரு பகுதிதான். கருவறைக்கு அடுத்து உள்ள ஒரு சிறுபகுதி -_ அகமண்டபம்; அதை ஒட்டி முக மண்டபம் இருக்க வேண்டும்; அதனை அடுத்து மகா மண்டபம்; அதற்கடுத்து கொடி மரம் இருக்க வேண்டும். இவை தவிர சைவ ஆலயங்களில் பலி பீடமும், நந்தியும் இருக்க வேண்டும். வைணவ ஆலயங்களில் நந்திக்குப் பதிலாக கருடாழ்வார் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தால்தான் அக்கோயில் ஆகமக் கோயில் என்று கருதப்படும்.
ஆகமக் கோயில் அல்லாதவை:

மேலும் அவர், இந்த விதிகளின் அடிப்படையில் பரிசீலித்துப் பார்த்தால், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகமப்படி அமைக்கப்பட்ட கோயில் அல்ல; அதுபோன்றே, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும் ஆகமப்படி  அமைக்கப்பட்ட கோயில் அல்ல; இவை போன்றே ஆகமப்படி அல்லாத, அல்லது சிலவற்றில் ஆகமங்களிலிருந்து மாறுபட்ட கோயில்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன. பிள்ளையார்பட்டி கணபதி கோயிலும் இந்த வரிசையில் அடங்கும் என்றும் கூறுகிறார்.

பெரும்பாலான கோயில்களில் ஆகம விதிமுறை மீறல்கள், முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான முரண்பாடுகள் அனைத்தும் அந்தந்தக் காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த மன்னர்களின் விருப்பத்திற்கேற்பவும், பக்தர்களின் விருப்பத்திற்கேற்பவும், தேவைக்கேற்பவும் மாற்றப்பட்டவை என்பதை அறியலாம். இதுபோன்ற ஆகம விதி மீறல்களையும், ஆகம மாற்றங்களையும் சமுதாயமும், சமய அமைப்புகளும் எந்த எதிர்ப்பும் இன்றியும், மகிழ்ச்சியோடும் ஏற்றுக் கொண்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும். அவற்றிற்கெல்லாம் முக்கியக் காரணம், ஆகமம் என்பது நடைமுறையில் தொடர்ந்து வந்த வழக்கம் என்பதுவே அன்றி வேறில்லை.

தற்போதுள்ள நடைமுறையில், ஆகம விதிகளின்படி கட்டப்படாத சில கோயில்களில் ஆகம முறை பூசைகள் நடைபெறுகின்றன. ஆனால், ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயில்கள் சிலவற்றில், ஆகம விதிப்படி பூசைகள் நடைபெறுவதில்லை. பல கோயில்களில் ஆகமங்கள் மாற்றமடைந்துள்ளன. ஆகம முரண்பாடுகள் மற்றும் ஆகம மீறல்களும் காணப்படுகின்றன என்பதே ஆகம வல்லுநர்களின் முடிவாகும். அர்ச்சகர்கள்:

சைவக் கோயில்களில், ஆகமத்தில் ஓரளவே தேர்ச்சி பெற்றவர்கள், ஓரளவே அறிந்தவர்கள் அர்ச்சகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நித்திய பூசைகளை மட்டும் செய்யலாம். நடைமுறையில் சில வேளைகளில், சிவாச்சாரியார்களின் ஆணைப்படி நைமித்திய பூசைகளையும் செய்கிறார்கள். அதாவது, தேவைப்படும்போது மாற்றிக் கொள்கின்றனர். ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களுக்கு மூலவரைத் தொட்டு அபிஷேகம் செய்வதற்கோ, அலங்காரம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. அவர்கள் அவ்வாறு செய்வது ஆகம விதி மீறல்களாகும். ஆனால், அவ்வாறான விதி மீறல்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலிலும் நிகழ்கின்றன என்பதும் அனைவரும் அறிந்ததே.

தற்போது கோயில்களில் உள்ள நடைமுறைகள் குறித்து, சைவ, வைணவ மடாதிபதிகள், வேதபாடசாலைகள் நடத்தும் ஆசிரியர்கள், ஆகமங்கள் அறிந்தோர், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றைச் சுருக்கமாக கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்:-

1. ஆகமங்கள் எவற்றிலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் பூசை செய்ய வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

2. சைவக் கோயிலானாலும், வைணவக் கோயிலானாலும், அம்மன் கோயிலானாலும் அர்ச்சகர்களாக பூசை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் தகுதியுண்டு என்று சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

3. வெவ்வேறு ஜாதியினரைச் சேர்ந்த பலர், ஒரு குறிப்பிட்ட முறைப்படி பலகாலம் பூசை செய்து வந்ததனால், அவர்கள் ஒரே இனமாகக் கருதப்பட்டுவிட்டனர். அதற்குக் காரணம் அர்ச்சகர்கள் தந்தை, மகன் என வழி வழியாக நியமிக்கப்பட்டு வந்ததுதான்.

4. ஸ்மார்த்தம் என்ற தனிச் சமயத்தைச் சார்ந்தவர்கள் சைவ, வைணவ மற்றும் அம்மன் கோயில்களில் பூசை செய்து வருகிறார்கள். இந்நிலை ஆகம மீறல் இல்லை எனும்போது சைவ, வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள், எந்த ஜாதியினராயினும், அவரவர் சமயத் திருக்கோயில்களில் பூசை செய்வது ஆகம விதி மீறல் ஆகாது.

5. ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் அல்லது அவர்கள் வழி வந்தவர்களே பூசை செய்து வந்ததைச் சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்குத்தான் பூசை செய்ய உரிமை உள்ளது என்றும், அதுதான் ஆகம விதி என்றும் தீர்மானிக்க இயலாது.

6. ஒவ்வொரு இந்து சமயத் திருக்கோயிலிலும் பின்பற்றப்பட வேண்டிய ஆகமங்கள் (நடைமுறைகள்), பூசை முறைகள் முதலியன அந்தக் கோயிலில் அர்ச்சகர்கள்/ பூசாரிகள் ஆக நியமிக்கப்படுபவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்தந்தக் கோயிலில் பின்பற்றப்படுகின்ற கால பூசைகள், செய்முறைகள், மந்திரங்கள் ஆகியவற்றை அவர்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

7. கோயிலில் பூசை செய்பவர் அக்கோயிலைத் திறப்பது முதல் இரவு நடை சாத்தப்படும் வரை என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியதும், அதற்கான மந்திரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியதும்தான் அர்ச்சகராவதற்கான அடிப்படைத் தேவையாகும்.

8. சைவக் கோயில்களில் சைவ சமயத்தைச் சார்ந்தவர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்படலாம். வைணவக் கோயில்களில் வைணவர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்படலாம்.

9. அம்மன் கோயில்களைப் பொறுத்தமட்டில், சைவம் சார்ந்த அம்மன் கோயிலில் சைவர்களும், வைணவம் சார்ந்த அம்மன் கோயிலில் வைணவர்களும் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம்.

10. ஆகமங்கள் வேதங்கள் அல்ல, நடைமுறை வழக்கமே. நடைமுறையில் சில நேரங்களில் வேத, மந்திரங்கள் உச்சரிக்கப்பட வேண்டும் என்பது வழக்கத்தின் அடிப்படையில்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *