நலம் என்பது ஆரோக்கியம் _ நோயற்ற வாழ்வு. உங்கள் உடலுடைய முழுமையான நலம்தான் _ அதன் பலமாகவும் அமைகிறது.
நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டும் மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள் இயக்கமே _ உடல் நலத்தைத் தீர்மானிக்கிறது. இன்னும், உடல் நலம் என்பது இயற்கை; நிரந்தரமானது. உடற்கட்டு _ பொய்த்தோற்றம்; தற்காலிகமானது.
உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை என்பதை நாம் உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும். தோற்றத்தை வைத்து தன்மையை முடிவு செய்வது _ விஞ்ஞானம்/ அறிந்து _ உணர்ந்ததை ஏற்றுக்கொள்வது _ அறிவியல்.
நாம் விஞ்ஞான மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இயற்கையோடு இயைந்த அறிவியல் பாதைக்குத் திரும்புவதே _ முழு நலனைத் தரும். நம் உடலின் மொழி _ இயற்கையோடு தொடர்புடையது. இயற்கை என்றால் என்ன? அது தற்செயல் நிகழ்ச்சிகளின் தொகுப்பு _ என்பது நமக்குச் சொல்லிக் கொடுத்தது _ திணிக்கப்பட்ட பாடம்.
இயற்கை _ தற்செயலானது அல்ல;
அது ஒழுங்கமைவோடு இயங்கும் இயக்கம். இயற்கையின் ஒத்திசைவான இயக்கத்தை _ நம் முன்னோர்களில் பலர் அறிந்திருந்தனர். அவற்றைத் தம் ஆரோக்கிய வாழ்விற்குப் பயன்படுத்தினர். ஆகவே, அவர்கள் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளாக இல்லை. இயற்கையின் ரகசியங்களை உணர்ந்த அறிவியலாளர்களாக இருந்தனர். இயற்கை தவறு செய்யாது _ என்பதை உணர்ந்து, தெளிவதுதான் அடிப்படைப் பாடம். நாம் இயற்கை என்ற பிரம்மாண்டத்தின் வழியே _ உடலை அறிந்து கொள்வது கடினமானது. நமக்குப் பரிச்சயமான உடலின் மூலம் இயற்கையை அறிய முற்படுவது எளிமையானது.
எந்த உடல்நலக் கோளாறும் இல்லாத ஒருவர் _ தூசு அதிகமாக உள்ள ஒரு பஞ்சாலைக்கோ, தொழிற்சாலைக்கோ செல்கிறார்.
அவருடைய மூக்கு _ தூசி கலந்த காற்றைச் சுவாசிக்கிறது. உடனே ஒரு பலத்த தும்மல் வெளிப்படுகிறது. இந்தத் தும்மலை விஞ்ஞான ரீதியாக ஒவ்வாமை என்று பெயர்வைத்து விடுவது சுலபம்தான். ஆனால், ஏன் தும்மல் ஏற்பட்டது? தூசியை _ மூக்கு உள்ளே அனுமதித்து இருக்குமானால், அது நுரையீரலுக்குச் செல்லும். பல வகையான நாட்பட்ட நுரையீரல் கோளாறுகளை அது ஏற்படுத்தியிருக்கும். தூசியை உள்ளே அனுப்புவது நல்லதா? அல்லது அதை வெளியே தள்ளுவது நல்லதா? உடல் எப்போதுமே _ தனக்குத் தீங்கு விளைவிப்பதை உள்ளே அனுமதிக்காது. அதுதான் உடலினுடைய இயற்கை. உடலிற்குத் தீங்கு விளைவிக்கப் போகும் தூசியை _ தானே கண்டறிந்து, அதனைத் தும்மல் மூலம் வெளியே தள்ளும். இயற்கையை நாம் விளங்கிக் கொள்வது இல்லை.
தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும், தன்னையே குணப்படுத்திக் கொள்ளும் அற்புதமான கட்டமைப்பை உடல் கொண்டிருக்கிறது.
உடலின் செயல்கள் அனைத்துமே _ நம் நன்மையை மையமாகக் கொண்டிருக்கிறது.
– நூல்: உடலின் மொழி
– அ.உமர்பாரூக்